ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராகிறது இந்தியா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா இரண்டு முறை பதவி வகிக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதமும், அடுத்த ஆண்டு நவம்பர் மாதமும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா இந்தியா செயல்படவுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆங்கில அகரவரிசைப்படி மாதந்தோறும், ஒவ்வொரு நாடுகளும் சுழற்சி முறையில் தலைமை வகிக்கும். அந்தவகையில் 2011 ஆகஸ்ட், 2012 நவம்பர் ஆகிய மாதங்களில் பாதுகாப்பு கவுன்சில் இந்தியா தலைமையில் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் போஸ்னியா தலைமை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிபுணர் குழு இலங்கை பயணம் முடிவாகவில்லை: ஐ.நா.பேச்சாளர்
இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து எப்படிப்பட்ட விசாரணை மேற்கொள்வது என்பது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் இலங்கை பயணம் இதுவரை உறுதியாகவில்லை என்று ஐ.நா. பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் இருந்து இயங்கிவரும் இன்னர் சிட்டி பிரஸ், இலங்கை செல்லும் ஐ.நா. நிபுணர் குழுவினர் அதிபர் ராஜபக்ச நியமித்த ‘கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணைய’த்திடம் மட்டுமே பேச அனுமதிக்கப்படும் என்று சிறிலங்க அரசின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல்லா கூறியிருப்பது குறித்து மின்னஞ்சல் வாயிலாக கருத்து கேட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள ஐ.நா.பேச்சாளர் ஃபர்ஹான் ஹக், “சிறிலங்க அதிபர் அமைத்துள்ள ஆணையத்திடம் மட்டுமே பேச வேண்டும் என்பதல்ல. தங்களுடைய பணி என்பது கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்துடன் பேசுவதை விட விரிவானது என்று ஐ.நா.நிபுணர் குழு என்னிடம் விளக்கியுள்ளது” என்று பதிலளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஐ.நா.நிபுணர் குழுவின் பயணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் ஃபர்ஹான் ஹக் கூறியுள்ளார். ஐ.நா. நிபுணர் குழு இலங்கையில் விரிவான விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டால் மட்டுமே அது அங்கே செல்லும் என்று கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment