பயங்கரவாதத்தை எவ்வாறு தோற்கடித்தோம். உலக கருத்தரங்கு கொழும்பில்.
‘பயங்கரவாதத்தை ஒழித்தல் - இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் மாதம் 2ம் திகதி வரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் இது நடைபெறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
உலகிலுள்ள 54 நாடுகளைச் சேர்ந்த சுமார் நூறு பாதுகாப்பு உயர் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் வளவா ளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இந்தியாவிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் கடமையாற்றும் சுமார் 30 பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேலும் உரையாற்றுகையில்:
உலகிலேயே மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பான எல்.ரீ.ரீ.ஈ. யை முழுமையாக தோல்வியடையச் செய்தமை தொடர்பாக இலங்கை பெற்றுக்கொண்ட அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதே இந்த சர்வதேச கருத்தரங்கின் நோக்கமாகும்.
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகம்கொடுத்துவரும் நாடுகள் மற்றும் இலங்கை இராணுவத்துடன் தொடர்புகளைப் பேணிவரும் நாடுகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட 54 நாடுகளுக்கே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வ அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
வெளிநாட்டு அமைச்சின் ஊடாக கலந்துகொள்பவர்கள் தொடர்பில் விபரங்களை பெற்றுவருகின்றோம்.
21ம் நூற்றாண்டில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய நாடுகளில் இலங்கை முதல் இடத்தை பெற்றுள்ளதுடன் உலக நாடுகளின் பல்வேறு பாராட்டுக்களை பெற்றுள்ளது.
வன்னி மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை, யுத்தத்திற்கு பின்னரான துரித மீள் குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கை, கண்ணிவெடிகளை அகற்றுதல், நாட்டை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பயன்படுத்திய முறைமைகள், தந்திரோபாயங்கள், மோதல் மற்றும் உபாயங்கள் பற்றிய பாடங்கள், முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு போன்றவைகள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்படவுள்ளதுடன், மனிதாபிமான நடவடிக்கைகளில் பங்கு கொண்ட பாதுகாப்பு மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் விளக்கமளிக்கவுமுள்ளனர்.
கருத்தரங்குடன் இணைந்தாக மாபெரும் பாதுகாப்பு கண்காட்சி ஒன்றும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல, மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க ஆகியோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment