தண்டனை வழங்கினால் மாத்திரம் : இராணுவ நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றமா?
தண்டனை வழங்கும் அதிகாரம் இருப்பதால் மாத்திரம் இராணுவ நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றமா என்பது தொடர்பில் கேள்வி எழுவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்கா இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையின் போது, எழுந்த இராணுவ நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றமா என்ற கேள்விக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள விளக்கம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நான் வழக்கின் தீர்ப்பை முழுiயாக படிக்கவில்லை. இராணுவ நீதிமன்றத்தினால் மரண தண்டனை கூட வழங்க முடியும் என்பதால், அதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றமாக கருத வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இராணுவ சட்டத்தின்படியே இராணுவ நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படுகிறது. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமனறங்கள் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டவை. இதனால் தண்டனை வழங்கும் அதிகாரம் இருப்பதால் மாத்திரம் இராணுவ நீதிமன்றம் அங்கீகரிக்கப்பட்ட அல்லது அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்றமா என்ற கேள்வி எழுகிறது.
நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தண்டனையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் இடைகேள்விகள் எழுகின்றன. மக்கள் தமது வாக்கு பலத்தில் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகின்றனர். மக்களின் வாக்குரிமையின் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதியின் பதவி இராணுவ நீதிமன்றத்தினால், பறிக்கப்படுமானால், அது மக்களின் உரிமைகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கை. 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற அமைப்புகள் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் என்பன ஸ்தாபிக்கப்படுகின்றன.
அரசியல் அமைப்பின் பிரகாரம் நீதிமன்றம் குறித்து வரைவிலக்கணப்படுத்தும் போது, நீதிமன்றத்தை சாதாரண நிலையில்,இருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். நீதிமன்றத்திலும் மக்களின் பலமே செயற்படுகிறது. சாதாரணமாக இராணுவ நீதிமன்றம், சிவில் நீதிமன்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்காது. மனித உரிமை சாசனத்தின்படி பக்கசார்பற்ற பகிரங்க நீதிம்னறத்தின் மூலமே தண்டனை வழங்க முடியும். இராணுவ நீதிமன்றத்தின் செயற்பாடுகளும், சிவில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் வித்தியாசமானவை.
இராணுவ நீதிமன்றம் என்பது சுயாதீனமான நிறுவனம் அல்ல. சிவில் நீதிமன்றம் சுயாதீனமானது. இந்த நீதிமன்றத்தை வழிநடத்தும் அதிகாரிகளும் சுயாதீனமானவர்கள். இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பது ஜனாதிபதி, அந்த நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கும் கையெழுத்திடுவபவரும் ஜனாதிபதி, இராணுவ நீதிமன்றம் என்பது நிறைவேற்று அதிகாரத்தின் சபை. அத்துடன் இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் நிறுவனத்திற்குள் உள்ளடங்குபவர்கள், இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் இறுதியில் இராணுவ தளபதியின் உத்தரவிற்கு அடிபணிய வேண்டியேற்படும். தண்டனை வழங்கும் நடவடிக்கையை மாத்திரம் கவனத்தில் கொண்டு, உயர்நீதிமன்றம், இராணுவ நீதிமன்றத்தை அரசியலமைப்புக்கு உட்பட நீதிமன்றம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment