Friday, January 21, 2011

அமெரிக்காவில் ஜனாதிபதி மீது விசாரணையா? குமுறுகின்றது அரச தரப்பு.

திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க் குற்றங்கள் தொடர்பாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதியாக உள்ள நிலையில், கடத்தல், துன்புறுத்தல், நீதிக்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மஹிந்தா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சேம் ஜாஃப்ரி பிபிசியிடம் கூறுகையில் இலங்கை இராணுவத்தின் மீது, நம்பத்தகுந்த, பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றது. அதேநேரத்தில் இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இருக்கிறார். எனவே இந்த மனித உரிமை மீறல்கள் நடந்தபோது இராணுவ அதிகார கட்டளைத்தொடரின் அதி உயர் பதவியில் இருந்தவர் என்ற முறையில் பொறுப்பேற்றல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஜீவ விஜயசிங்க

சர்வதேச மன்னிப்புச் சபையின் நிலைப்பாடு எதிராக இலங்கை அரச தரப்பிலிருந்து குரல்கள் வெளிவந்துள்ளது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ராஜீவ் விஜயசிங்க மன்னிப்புச் சபையின் கோரிக்கை தவறானது, சட்டரீதியில் சாத்தியமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசியிடம் கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டின் தலைவருக்கு முன்பு ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முன் அவர் மீதான குற்றங்களை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் எனவும் இதை உலக நீதிமன்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளதுடன், சூடானின் ஜனாதிபதிக்கு இது போல நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய உலக நீதிமன்றங்கள் செயல்பட உதவும் சர்வதேச ஒப்பந்தங்கள் பலவற்றில் அமெரிக்கா கைச்சாத்திடவில்லை வில்லை என்பதோடு, அமெரிக்கா செய்த போர் குற்றங்கள் தொடர்பில் அந்த நாடு இதுவரை பொறுப்பேற்க விரும்பவில்லை என்பது உலகுக்குத் தெரியும் என்பதால், மஹிந்த மீதான புகார்கள் தொடர்பில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் ராஜீவ் விஜயசிங்க வாதிட்டார் என பிபிசி செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்துல விஜயசேகர
அதேநேரம் சர்வதேச மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்பான மன்னிப்பு சபையானது அமெரிக்காவிற்கு தனிப்பட்ட ரீதியில் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ்விடம் யுத்தகுற்ற விசாரணை மேற்கொள்ளச் சொல்வது விளையாட்டுத் தனமானதும் குறும்புத்தனமானதுமானதோர் கூற்று என ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி நாடு திரும்பி விடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா கலந்துரையாடலில் ஈடுபடாது.
அமெரிக்கா விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன், ஐ.நா நிபுணர் குழு எதுவித கலந்துரையாடலிலும் ஈடுபடுமா என சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் நபையின் செயலாளரின் ஊடகப்பேச்சாளர் மார்டீன் நெசர்கீ, ஐ.நா மஹிந்தவுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது என தெரிவித்துள்ளார்:

வெள்ளைக்கொடி குறித்து ஐ.நா சபையில் கேள்வி
அமெரிக்காவில் ஜனாதிபதி தங்கியுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபையின் வேண்டுதலுக்கு வலுச் சேர்க்கும் முகமாக ஐ.நா. சபையின் தினசரி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அதன் பேச்சாளர் மார்டின் நெசர்ஸ்கியிடம் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகளின் உறுப்பினர்கள் இலங்கை படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அண்மையில் இங்கிலாந்தின் 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில், வெள்ளைக் கொடிகளுடன் வந்த புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சரணடைவதற்கு முன்னர் செய்மதி தொலைபேசியின் ஊடாக விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஐ.நா. சபையின் சிறப்பு பிரதிநிதி ஏன் மேரி கெல்வின்னுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக தெரிவித்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் ஐ.நா. சபையின் மேலதிகாரி விஜய் நம்பியாரும் பங்கு கொண்டிருந்தார்.

சரணடைவது தொடர்பாக இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொண்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் உறுதியளித்ததையடுத்தே விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைந்துள்ளனர்.

எனினும் இலங்கை அரசு தமது உறுதி மொழியை மீறி, அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏ மேரி கெல்வின், தன்னை மன்னிக்குமாறும், தம்மால் ஏதும் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது வெறுமனே இடம்பெற்றது இல்லை எனவும், ஏற்கனவே பேசி இணங்கிக் கொண்டதன் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைந்தனர் எனவும் ஆனால், உறுதி மொழி மீறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்ட மற்றுமொரு நபரான விஜய நம்பியாரின், பிந்தைய செயற்பாடுகள் என்ன என ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக விஜய் நம்பியார் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளதாக தாம் அறிவதாகவும், எனினும் இது குறித்து பரிசீலிப்பதாகவும் ஐ.நா. பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகளிலிருந்து தன்னைத் காப்பாற்றும்படி, அமெரிக்காவின் காலைப் பிடித்துக் கெஞ்சும் முயற்சியில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவின் ஆதரவைத் திரட்டும் நோக்கிலேயே அவர் திடுதிப்பென்று அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மஹிந்தவுக்கு எதிரான செயற்பாடுகளில் ஐ.நா.வும் அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டால் நிலைமை கைமீறிப் போய் விடும் என்பதன் காரணமாக, அவர் பெரும் அச்சத்துக்குள்ளாகியிருப்பதாக 'வாஷிங்டன் போஸ்ட்' குறிப்பிட்டுள்ளது.

இதேசமயம் இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக்கள் சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com