Tuesday, January 18, 2011

தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - தென்னிந்திய சினிமா தாக்கம்

தென்னிந்திய சினிமாப் படங்களின் புதிய வரவுகள் தற்போது அதிகரித்துள்ளதன் பின்னணியில் யாழ் குடாநாட்டிலும் அதன் தாக்கம் அதிகரித்திருப்பதை திரையரங்குகளில் அலைமோதுகின்ற ரசிகர் பட்டாளத்தை வைத்தே கணிப்பிட்டுக் கொள்ளலாம். அன்றைய விடுமுறை நாட்பொழுதைக் கழிப்பதற்காக எனது நண்பன் ஒருவனின் வற்புறுத்தலுக்கு உடன்பட்டு யாழ்ப்பணத்திலுள்ள திரையரங்கு ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.

மோட்டார் சைக்கிள் பாதுப்புக் கட்டணம் 10 ரூபா என சிட்டையில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அங்கு 20 ரூபா வசூலிப்பு நடந்தது. எதிர்த்துக்கேட்டோம். சீறிவிழுந்தார் பாதுகாப்பு ஊழியர். அதேபோல சைக்கிள் பாதுகாப்புக் கட்டணமும் இரட்டிப்புத் தொகை. பாதுகாப்பு ஊழியருடன் தர்க்கம் புரிந்து பயனில்லை எனக் கருதி பணத்தைக் கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து படம் பார்ப்பதற்கு உள்நுழைவதற்கான அனுமதிச் சீட்டை பெறுவதற்கான இடத்திற்குச் சென்றோம். ரசிகர்கள் கூட்டத்திற்கு ஒருவாறு ஈடுகொடுத்து முண்டியடித்து அனுமதிச் சீட்டில் பல்கனிக்கென 160 ரூபா கட்டணம் போடப்பட்டிருந்தது.

ஆனால் 250 ரூபா என மையினால் எழுதப்பட்டிருந்தது. தட்டிக் கேட்டவர்கள் ரிக்கட் விற்பனை செய்பவரின் வசை மொழிக்கு ஆளானார்கள். எந்த ஒரு விடயத்திற்கும் தலையாட்டுபவர்களாக, ஆமாம் போடுபவர்களாகவே எமது சமூகம் வாழப்பழகி விட்ட நிலையில் வேறுவழியின்றி காசைக் கொடுத்துவிட்டு ரிக்கட்டை வாங்கிக் கொண்டு இருக்கைகளில் அமர்ந்திருந்தோம்.

படக்காட்சி ஆரம்பிக்க 15 நிமிடங்கள் வரை இருந்தது. பெருமெண்ணிக்கையான ரசிகர்கள் வந்து குவிந்தபடி இருந்தனர். அவர்களில் அதிகமானோர் மாணவர்களாகவே இருந்தனர். அதற்கு அவர்கள் தம்முடன் கொண்டு வந்த கொப்பி புத்தகங்கள் சாட்சி பகருகின்றன. இருப்பினும் அவர்கள் தம்முடன் புத்தகங்களை மட்டும் கொண்டுவரவில்லை. கூடவே தமது காதலிகளையுமல்லவா அழைத்துவந்திருந்தனர். கவர்ச்சி உடைகளில் பெண்களின் பிரசன்னம் அதிகரித்திருந்தது. அப்பெண் பிள்ளைகளும் கல்விகற்கும் பதின்ம வயது மாணவியர்கள். அவர்களது கைகளிலும் கொப்பிகள் தவழ்ந்தன.

யாழ் நகரப்பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வதாக பெற்றோருக்கு பம்மாத்துக் காட்டிவிட்டு சோடி சோடியாக நுழைந்து திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். தனியார் கல்வி நிலையங்களென சினிமாத் திரையரங்குகளைய நினைத்துவிட்டார்களோ எனும் அளவிற்கு மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தன. திரைப்படம் ஆரம்பித்தவுடன் இளைஞர்கள் புரிந்த அட்டகாசம் எல்லைமீறியது. அந்தளவிற்கு உச்ச தொனியிலமைந்த கெட்டவார்த்தைப் பிரயோகங்கள் விசிலடிகள், கூச்சல்கள், கூப்பாடுகள் என பார்வையாளர் அரங்கமே அதிர்ந்தபடி இருந்தது. அந்தளவிற்கு அவர்களின் அட்டகாசம் தூள்கிளப்பியது.

இதனால் நிம்மதியாக படம் பார்ப்பவர்களுக்கும் கூட பலர் சிரமப்பட்டனர். குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் பெரிதும் சங்கடப்பட்டதைக் காணமுடிந்தது. முன்னர் பெண்கள் திரையரங்குகளுக்குள் சென்று படம் பார்ப்பது என்பது மிகமிக அரிதாகவே காணப்பட்டது. ஆனால், தற்போது ஆண் நண்பன் எனும் போர்வையில் முன்பின் தெரியாத ஆணுடன் எவ்வித வெட்கமோ கூச்சமோ இன்றி பலர் கூடும் இடத்தில் வந்தமர்ந்து படம் பார்த்தல் என்ற போர்வையில் தமது காதல் களியாட்டங்களுக்கு திரையரங்குகளைப் பயன்படுத்தி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றைத் தடுப்பதற்குக் கூட திரையரங்கு நிர்வாகம் பின்னடிப்பது ஏனோ தெரியவில்லை.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் கலாசார விழுமியங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி மாணவர் ஒன்றியத்தால் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டமை அநேகருக்கு நினைவிருக்கும்.

இவர்களது இத் தீர்மானம் வெற்றுத்தாள் அறிக்கையுடன் முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது. ஏனெனில், எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அவர்கள் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.

பண்பாட்டு விழுமியங்களைப் பேணுமாறு வலியுறுத்துவோர் தாம் அத்தகைய பண்பாட்டு விழுமியங்களைச் சரியாக கடைப்பிடிக்கின்றனரா? என்பதை முதலில் அவர்கள் சுயசிந்தனை செய்வது நல்லது. ஏனெனில் தாம் சீரழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டு சமூகத்திற்கு புத்திமதி சொல்ல முனைந்தால் அப்புத்திமதிகளை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கருதுவது முட்டாள்தனமானது.

திரையரங்குகளில் கலாசாரச் சீர்கேடான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் மேற்படி திரையரங்குகளுக்குள் பெரும்பாலும் உயர்கல்வி கற்றும் மாணவ மாணவியரே சோடியாக வந்து படம்பார்க்கும் நிகழ்வுகள் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.

தற்போது சாதாரணமாக இடம்பெறும் சில ஒன்றுகூடல் நிகழ்வுகளில் மது, சிகரெட் என்பன மாணவர்களால் தாராளமாகப் பயன்படுத்தப்படும். பயன்படுத்துவதுடன் விட்டால் பரவாயில்லை. எல்லா மாணவர்களும் குழுமியிருக்கும் குறிப்பாக பெண்கள் கூடியிருக்கும் நிகழ்வுகளில் பல மாணவர்களால் நடத்துகின்ற களியாட்டங்கள் அங்கு நடைபெறும் கலாச்சார சீரழிவை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.

சரி, மாணவர்கள் தமது வயதுக்கு ஏற்ப இப்படியான அநாகரிகச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஒரு சில விரிவுரையாளர்களும் நெறி பிழந்து நடப்பது வேதனையளிக்கிறது. தமது அறிவுப் பசியைத்தீர்க்க வரும் மாணவிகளிடம் தமது காமப்பசிகளைத் தீர்க்கும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இங்கு நாம் ஒட்டு மொத்த விரிவுரையாளர்களையும் குற்றம் காண விழைவது அபத்தமானது.

ஆனால் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த விரிவுரையாளர் சமூகத்தினர் மீது பழிச்சொற்கள் விழுந்துவிடக்கூடாது என்பது பற்றி நாம் தெளிவுடன் இருக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகமானது எத்தனையோ ஒழுக்கம் மிக்க அறிஞர்களையும் கல்வியியலாளர்களையும் உற்பவித்த உயர் கலைக் கூடத்தில் இப்படியான அசிங்கங்கள் அரங்கேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது சமூகத்திற்கு வழி காட்டிகளா இருக்க வேண்டியவர்கள் எமது இனத்தின் பண்பாட்டு வேர்களை அறுக்கும் கோடரிக்காம்புகளாக இருப்பது வேதனைக்குரியது.

எனவே தான் மாணவர் சமூகம் எடுத்திருக்கும் இத்தகைய முயற்சியை வரவேற்கின்றோம் ஆனால் அதனைச் செயலுருப் பெற வைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம்.

நிற்க, இவ்வாக்கமானது இவ்வாறான சம்பவங்களை இனிமேலும் இடம்பெறாமற் தடுப்பதற்கே தவிர யாருடைய மனங்களையும் புண்படுத்துவதற்காகவோ வேதனைப்படுத்துவதற்காகவோ அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உதிஷ்டிரன் யாழ்மண்ணிற்காக




2 comments :

Anonymous ,  January 19, 2011 at 9:03 AM  

Certain jaffna younger society may be leading towards a darker era,the cause of the happening is very clear as the the dicipline peace and order maintained by the earlier society were compelled to thrown away,owing to unpleasant circumstances.There is no force to go against the present
sad circumstances not only in cinemas everywhere, until they realize themselves.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com