சுவிஸ் கைதுகளோடு இனங்காணப்படவுள்ள துரோகிகளும் , தியாகிகளும். -பீமன்
சுவிற்சர்லாந்தின் மத்திய அரசின் நெடுநாள் கண்காணிப்பின் பின்னர் புலிகளின் காட்டுத்தர்பார் கடந்த மூன்றுவாரத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்படக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியள்ளது. சுமார் 18 மாதங்களுக்குமேலாக சகல செயற்பாடுகளையும் பின்தொடர்ந்த சுவிற்சர்லாந்து மத்திய அரசின் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு நாடுபூராகவும் 23 இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட தேடுதலில் புலிகளின் செயற்பாடுகளை சுவிற்சர்லாந்தில் முன்னெடுத்துச்சென்ற முக்கிய செயற்பாட்டாளர்கள் 10 பேரை கைது செய்தனர். இக்கைதுகள் காலம் கடந்ததாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்கள் மீள்வதற்கு சுவிற்சர்லாந்தில் போடப்பட்ட சிறந்ததோர் உறுதியான அடித்தளமாகவே நோக்கப்படுகின்றது.
மாநில சுயாட்சியின் அடிப்படையில் சிறந்ததோர் ஜனநாயக நாடாக உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்ற சுவிற்சர்லாந்தில் மாநிலங்களின் பொலிசாருக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவ்வவ்மாநிலங்களின் பாதுகாப்பு, குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் யாவும் மாநிலப்பொலிஸாரினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அதேநேரம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வியடங்களை மத்திய அரசின் பொலிஸ் பிரிவினர் கையாள்வர். அந்த வகையில் மேற்படி கைதுகள் மத்திய பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டமையானது புலிகளின் செயற்பாடுகள் சுவிற்சர்லாந்தின் தேசிய பாதுகாப்புக்கும் , அதன் நற்பெயருக்கும், ஜனநாயக்தினை நேசிக்கும் தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்பதை உணர்த்துகின்றது.
இலங்கையிலே சிறுபாண்மையினரான தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாரபட்சத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக வடிவம் பெற்றபோது, ஒட்டுமொத்த போராட்டத்திற்குமான மொத்தவியாபாரிகளாக தம்மை வன்முறைகளுடாக நிலைநிறுத்திக்கொண்ட புலிகள் அதற்காக பலிகொடுத்த , பலிஎடுத்த உயிர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறிய புலிகள், போராட்டம் எனும் பெயரால் இலங்கையிலே தமிழ் மக்களின் உயிர், அடிப்படைஉரிமை, உடமைகளை பறித்ததுடன் நின்றுவிடவில்லை, உரிமைப் போராட்டம் எனும் பெயரால் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களை தமிழர் தஞ்சம் புகுந்த மேற்கு நாடுகள் யாவற்றுக்கும் ஏற்றுமதி செய்துவைத்தனர்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் யாவரும் , இலங்கையில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டு , உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு புலம்பெயர்ந்தார்களா என்ற கேள்விக்கு விடைகாண நான் முயலவில்லை. ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் அழுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்பது உண்மை.
இவ்வாறான நிலையில் சகல நாடுகளிலும் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் சுவிற்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற கைது நடவடிக்கைகள் மிகவும் முன்மாதிரியானதாக நோக்கப்படுகின்றது. சுவிற்சர்லாந்தில் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுத்த முக்கிய புள்ளிகள் யாவரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டமை அவர்கள் மீண்டும் தம்மை சுதாகரித்து கொள்வதற்கான இடத்தை வழங்கவில்லை.
இத்துடன் கைதுகள் முடிந்துவிட்டதா?
புலிகளின் பிரதேசத் தலைவர்கள் உட்பட புலிகள் சார்பாக வன்செயல்களில் ஈடுபட்டுவந்த சுவிஸ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த பலர் கைது செய்யப்படலாம் என நம்பப்படுகின்றது. சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநில குற்றத்தடுப்பு பொலிஸாரின் தரவுகளின் அடிப்படையில் சூரிச் மாநிலத்தில் மாத்திரம் 1370 தமிழ் இளைஞர்கள் இதுவரை தெருச் சண்டைகள் , கொலை மிரட்டல்கள் , குழுச் சண்டைகள் என பல்வேறுபட்ட குற்றச் செயல்களுக்காக சிறை சென்றுவந்துள்ளனர். இவர்களில் பெரும்பாண்மையானோர் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் தொடர்சியாக சுழற்சி முறையில் ஜெயிலினுள் நுழைவதும் விடுதலை பெறுவதுமாக குற்றவியல் புள்ளி விபரங்கள் காட்டுகின்றது. இவர்களில் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ள பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திட்டமிட்ட சதிகளில் ஈடுபடுவோர் மீது இறுக்கமான சட்டங்கள் பிரயோகிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ளோரில் புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் மாத்திரமே அடங்குகின்றனர். ஆனால் பிரதேச மட்டத்தில் பணம் சேகரித்தோர் அவ்வப்பிரதேசங்களின் ஒருவகை குறுநில மன்னர்களாகவும் குட்டிப்பஞ்சாயத்து தலைவர்களாகவும் விளங்கியுள்ளனர். இவர்கள் புலிகளுக்கான நிதிசேகரிப்பாளர்களாக மாத்திரமன்றி பிரதேச போலிப் பொலிஸ் அதிகாரிகளாகவும் செயற்பட்டுவந்துள்ளனர். தமது பிரதேசங்களில் தமிழ் குடும்பங்கள் அல்லது குழுக்களிடையே இடம்பெறும் பிரச்சினைகளுக்கு தீர்ப்பு வழங்கும் போலி நீதியரசர்களாவும், சந்தர்ப்பம் ஏற்படும்போது தாதாக்களாகவும், தமது தீர்ப்பை ஏற்காதவர்கள் மீது வன்செயல் பிரயோகித்த சம்பவங்களும் உண்டு. இவ்வாறான மோசடிப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இவர்களில் பலர் புலிகளின் தலைமை தோற்கடிக்கப்படும் தறுவாயில் தமது வசூலிப்புக்களை பன்மடங்காக்கி மக்களிடம் முடிந்தவரை பெரும்தொகைப் பணத்தை பறித்துள்ளதுடன், அவற்றை பதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
புலிகளின் நிதிசேகரிப்பாளர் ஒருவருடனான எனது சம்பாஷனை ஒன்றினை இங்கு தருகின்றேன். சுவிற்சர்லாந்தில் நான் வசிக்கும் பிரதேசத்தில் புலிகளுக்காக நிதி சேகரிக்கும் நபர் ஒருவரை சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் எதேச்சையாக ரயில் வண்டியினுள் நேர் எதிரே சந்தித்தேன். "உங்கள் ஆட்டங்கள் யாவும் முடிந்து விட்டதா?" என அவரிடம் வினவினேன். அவர் பதில் சொல்ல முடியாமல் எருமைமாடு தலையை அசைக்குமாற்போல் குறுக்கும் மறுக்குமாக இருபக்கமும் அசைத்தார். அவருடைய பதில் என்னவென்பதை என்னால் உணர முடியவில்லை. எனக்கு விளங்கவில்லை "ஆமா? இல்லையா?" எனக் கேட்டேன். "ஓம் ஓம் இழப்புத்தானே" என எனது கேள்விக்கு அப்பாற்பட்ட பதில் சொன்னார். "இழப்பா..? உங்களுக்கா..?" என வினவினேன். "மக்களுக்கு.." என பதில்சொன்னார். அது எனக்கும் தெரியும் . "மக்களின் இழப்புக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டபோது மௌனமாக இருந்தார். அதைவிடுவோம் "மக்களிடம் வாங்கிய பணத்திற்கு என்ன நடந்துள்ளது?" எனக்கேட்டேன், "அதைத்தானே எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள், ஆட்களைப் பிடிக்கமுடியவில்லையே" என்றார். ஓடியவர்களை விடுங்கள் "நீங்கள் வசூலித்த பணத்திற்கு என்ன நடந்தது?" எனக் கேட்டேன். நாங்கள் வசூலித்தவை யாவற்றையும் எமது பொறுப்பாளர்களிடம் கொடுத்துள்ளோம். எம்மிடம் எதுவுமில்லை என்றார். அவ்வாறானால் பொறுப்பாளர்களிடம் பணத்திற்கு என்னவாகப் போகின்றது என நீங்கள் கேட்கவில்லையா என வினவினேன். நாம் அவர்களிடம் கேட்டோம். உங்களுக்கு பதில் சொல்லமுடியாது. வருபவர்கள் வந்தால் பதில்சொல்வோம் என்கின்றனர் ஏன்றார்.
இறுதிக்கட்ட யுத்தம் என இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்திருந்த 2009 ஜனவரி மாதம் தொட்டு வசூலிப்பு மிகவும் களைகட்டியிருந்ததுடன், புலிகள் தோல்வியை தழுவப்போகின்றனர் என்பதையும் அவ்வியக்கம் முற்றாக அழிக்கப்படப்போகின்றது என்பதையும் நன்குணர்ந்து கொண்ட புலிகளின் நிதிகையாளுனர்கள் பலரும் தமக்கு கிடைத்தவை யாவற்றையும் சுருட்டிக்கொண்டதுடன் , தாம் பணத்தினை சுவிஸ் புலிகளின் தலைமையிடம் வழங்கிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அவ்வாறாயின் இவர்கள் யாவரும் முற்றாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்படவேண்டும். விசாரணை செய்யப்படும்போது யார் யார் இப்பணத்தினை கையாண்டுள்ளனர் என்பது தெளிவாகும்.
அத்துடன் பணவசூலிப்பு , வன்செயல்கள் என்பவற்றிற்கப்பால் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் திட்டமிட்ட முறையில் பொய்ப் பிரச்சாரங்களை செய்து தவறாக வழிநடாத்தி , புலிகளை ஆதரிக்குமாறும் , அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்குமாறும் , புலிகள் சார்பாக ஆர்பாட்டங்களை நாடத்துமாறும், ஆர்பாட்டங்களை ஒழுங்கு செய்தும், பிரச்சாரங்களை நாடாத்தியும் வந்த புலிசார்பு ஊடகங்கள் மற்றும் புலிகளின் துணைக்குழுக்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
சுவிஸ் தமிழர் பேரவை எனும் அமைப்பு ஒன்று சுவிற்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பானது உலகிற்கு புலிகள் சார்பாக பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதுடன், புலிகள் சார்பாக பிரச்சாரங்களை செய்து வந்துள்ளது. இவ்வமைப்பு உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு கடிதங்களை எழுதியிருந்தது. அக்கடித்தில் தமது அமைப்பு 750க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அவ்வமைப்புக்கள் யாவும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக எற்றுக்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் உலகம் தமிழீழ விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது. இக்கோரிக்கைக் கடிதத்தில் அவ்வமைப்பின் தலைவர் நமசிவாயம் கையொப்பம் இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 30 வருடங்களாக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்திருந்த புலிகள் அமைப்பு எந்தவொரு தேர்தலிலும் பங்குபற்றியிராத நிலையில் அவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்? எனவே தமிழ் மக்கள் புலிகளை ஏகப் பிரதி நிதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளதாக உலகிற்கு கடிதங்கள் மூலம் தெரிவித்த மோசடிக்குற்றத்திற்காக நமசிவாயம் போன்றோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பவேண்டியவர்களாகும்.
கைதுக்கெதிரான போலிப்பிரச்சாரங்கள்.
புலிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில் உள்ள நியாயத்தையும் மறுதலிக்க முடியாத எஞ்சியுள்ள புலிகள் மறைந்திருந்து கைதுக்கு எதிரான போலிக்கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள புலிகளுக்கெதிராக சாட்சிகள் திரள்வதை தடுக்கும்பொருட்டு திட்டமிட்டவகையில் பரப்பப்படும் இக்கட்டுக்கதைகளில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் புலிகளின் பணத்தை சூறையாடும்நோக்குடன் இக்கைதுகளை மேற்கொண்டுள்ளது எனவும் , புலிகளிடம் பணம்கொடுத்து பாதிக்கப்பட்ட சிலர் இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினரால் விலைக்கு வாங்கப்பட்டு அவர்களுடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இக்கைதுகள் இடம்பெற்றதாகவும் வதந்திகளை பரவவிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள புலிகள் யாவரும் தாம் ஒழிந்திருந்து இலங்கை அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தங்களிடமிருந்த பணத்தின் பெரும்தொகையினை இலங்கையில் முதலிட்டுள்ளார்கள் அல்லது பாதுகாப்பான முறையில் அங்கு பதுக்கியுள்ளார்கள் என்பதனை அறிந்திராக புலியாதரவாளர்கள் எவ்வித ஆதாரங்களுமற்ற அக்குற்றச்சாட்டுக்களை பரப்பி வருகின்றனர்.
சுவிஸில் புலிகளின் பணத்தின் பெரும் தொகையினை தன தாக்கிக்கொண்டிருந்த அப்துல்லா எனப்படும் நபர், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என தன்னை அறிமுகப்படுத்தியிருந்தவரும் தற்போது கொழும்பில் அரச மாளிகையில் விருந்தினராகவுமுள்ள குமரன் பத்தமநாதன் (கே.பி) என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பா மற்றும் லண்டன் கனடாவிலிருந்து இலங்கை சென்று கே.பி யைச் சந்தித்துவந்த புலிச்செயற்பாட்டாளர்களுள் சுவிற்சர்லாந்தில் புலிகளுக்காக தீவிரமாக செயற்பட்டுவந்து பவானி எனப்படும் பெண்ணும் சென்றுவந்திருந்தார். இப்பெண் அப்துல்லாவிற்கு நெருங்கியவராவர். இவரின் பயணமானது அப்துல்லாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்திருந்தாகவே தெரியவருகின்றது. இவர் அங்கு சென்று கே.பி யை சந்தித்து வந்த பின்னர் தம்மிடமிருந்த பணத்தின் பெரும்பகுதியை இலங்கைக்கு மாற்றியுள்ளதாக தெரியவருகின்றது.
மறுபுறத்தில் தாய்வீடு எனப்படும் நிறுவனத்தின் உரிமையாளரான கரன் என்பவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கதை ஒன்று பரவ விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் உண்மையில் கைது செய்யப்பட்டாரா? அதன் பின்னணி புரியாத புதிராகவே உள்ளது. மஹிந்த விஜயம் செய்யவிருந்த ஹோட்டல் ஒன்றில் இவர் தங்கியிருந்தபோது, மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகத்திற்குள்ளான இவர் எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டார். கரன் கைது செய்யப்பட்ட விடயம் ஹோட்டல் சிப்பந்திகளுடாக ஊடகங்களுக்கு கசிந்ததை தொடர்ந்து. அரச தரப்பில் இவர் கைது செய்யப்பட்டதான தகவல் ஊர்ஜிதமானது. பின்னர் ஊடகங்களுக்கு கரன் தொடர்பான செய்திகளை வழங்குவதை இலங்கை பாதுகாப்பு தரப்பு தவிர்த்துள்ளது. எனவே கரன் காலப்போக்கில் கே.பி போன்று இராஜதந்திரிகள் தங்கும் அரச மாளிகையிலிருந்து வெளிவரலாம் என்பது எனது ஊகம்.
காரணம் கரன் இலங்கையில் இதுவரை 190 மில்லின் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக தெரியவருகின்றது. பிரபாகரன் மே 17 இல் கொல்லப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட இவர் 2009 - 09 ம் மாதம் முதன் முறையாக பிராங்போர்ட்டிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார். தூதரகம் சார்பாக ஜேர்மனுக்கான இலங்கைத்தூதரகத்திலுள்ள அதாவுட என்பவருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது இவரின் கடையில் தொழில்புரியும் விஜயராஜா என்பவரும் உடனிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சந்திப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டின் பின்னரே இவர் இலங்கை சென்று முதலிட்டுள்ளார். எனவே சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கதுடன் இணைந்து செல்லமுடியாது என பாடம் கற்பிக்கும் புலிகள் மறுபுறத்தில் தமிழ் மக்களிடம் சுரண்டிய பணத்தினை இலங்கையில் தனிப்பட்ட தமது முதிலீடுகளை பெருக்கி வருகின்றனர். எனவே மக்கள் புலிகளின் உண்மை முகத்தினை உணர்ந்து புலிகளிடமுள்ள சகல பணம், சொத்துகளை பறிமுதல் செய்து அப்பணத்தினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவிடப்படுவதற்கு ஒத்துழைக்கவேண்டும்.
புலிகளை எதிர்ப்பவர்கள் , அல்லது அவர்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு சாட்சியம் சொல்ல முற்படுபவர்கள் துரோகிகள் என தமிழ் மக்களுக்கு பாடம் கற்பித்து தரப்பட்டிருக்கின்றது. ஆனால் புலிகளியக்கம் முற்றாக அழிக்கப்பட்டபின்னர் கோடிக்கணக்கான பணத்தினை கொண்டிருந்த புலிகள் அப்பணத்தில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வியை சுவிற்சர்லாந்தில் புலிகளுக்கு பணம்கொடுத்தவர்கள் புலிகளை நோக்கி கேட்கவேண்டும். உண்மையில் சுவிற்சர்லாந்தில் புலிகளுக்காக பணம் கொடுத்தவர்கள் தமிழ் மக்களின் நல்வாழ்வினை கருத்தில்கொண்டு பணம் வழங்கியவர்களா? அன்றில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பணம் வழங்கியவர்களா? இவர்கள் தமிழ் மக்களின் நல்வாழ்வின் பொருட்டு பணம் வழங்கியவர்களாக இருந்தால் சுவிஸ் புலிகளுடனான தமது அனுபவங்களை பொலிஸாருக்கு தெரியப்படுத்தவேண்டும்.
சுவிற்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள புலிகள் , புலிகளியக்கத்திற்கு ஆயுதங்களை வாங்கினார்கள், மேலும் அவ்வியக்கத்திற்கான நிதிஉதவியினை செய்தார்கள் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியுள்ளனர். எனவே இலங்கையில் புலிகள் மேற்கொண்ட கொலைகள் உட்பட சகல பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் சுவிஸ் புலிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது நிருபணமாகின்றது. எனவே புலிகளியக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், புலிகளியக்கத்தினரால் இலங்கையில் நேரடியாக பாதிக்கப்பட்ட பலர் சுவிற்சர்லாந்து நாட்டில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இப்படியானவர்கள் நேரயாக பொலிஸாரை (+41) 0800 10 20 60 எனும் இலவச தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு சுவிஸ்புலிகள்மீது வழக்கு பதிவு செய்து இவர்களிடமிருந்து தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நஸ்டஈட்டினை பெற்றுக்கொள்ள எந்த தயக்கமும் காட்டவேண்டாம் என வேண்டப்படுகின்றீர்கள்
புலிகளுக்கு எதிராக சாட்சியம் சொல்பவர்கள் துரோகிகள் என்ற புலிகள் உருவாக்கிய அந்தப் பழங்கதையை மக்கள் மறக்கவேண்டும். அக்கதை எவ்வாறு உருவானது? போராட்ட இயக்கங்கள் தமிழருக்காக போராடுகின்றது, அவர்களுக்கு எதிராக செயற்படுவோர் துரோகிகள் என சொல்லப்பட்டது. ஆனால் புலிகள் மக்களுக்காக போராடினார்களா? இல்லை இவர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் , இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழினத்தை அதன்பெயரால் ஆயுதம்தாங்கி குறைக்கு தாங்களும் அடக்கியாண்டதே வரலாறு. எனவே இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வருவோர் துரோகிள் அல்ல என்பதையும் அவர்கள் தியாகிகளே என்பதையும் வரலாறு உணர்த்தும்.
சுவிற்சர்லாந்தில் மோசடி செய்து புலிகள் பலரின் பெயரில் வங்கிக்கடன்களை எடுத்தனர். இவ்விடயங்கள் பல இடங்களில் கணவன் மனைவிக்கு தெரியாமல் இடம்பெற்றது. மே 17 2009 இற்கு பின்னர் புலிகள் சுருட்டிய தொகைளுடன் ஓடி மறைந்தனர். அப்போது கடன்சுமை தனிக்குடும்பங்கள் மீது சுமத்தப்பட்டது. கடன் தொல்லை தாங்காமல் குடும்பங்களிடையே சச்சரவுகள் உருவாகி விவாகரத்துவரை சென்றுள்ளது. இந்நிலையில் இக்கடன் சுமைக்கு பொறுப்பானவாகள் யார் என்பதை தெரியப்படுத்தினால் அவர்கள் துரோகிகளா? எனவே இம்மக்களின் இச்சுமையில் பங்கெடுக்க முடியாத தமிழ் சமுதாயம் சட்ட உதவியை நாடும் நபர்கள் மீது துரோகிப்பட்டம் சுமத்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
அத்துடன் சுவிற்சர்லாந்திலே தம்மை ஜனநாயகவாதிகள் என பிதற்றிக்கொண்டு ஆழுக்கு 10 சங்கங்களை பதிவு செய்து பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒன்று உண்டு. அவர்களிடம் ஒரு வேண்டுதலை விடுக்கின்றேன். நீங்கள் பேசும் ஜனநாயகம் உண்மையாக இருப்பின் வெளியே வாருங்கள். உங்கள் சங்கங்கள் ஊடாக தமிழ் மக்களை ஒன்றிணைத்து பாதிக்கப்பட்டவர்கள், புலிகளுக்கு எதிரான சாட்சியங்கள் வழங்கவேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு வலியுறுத்துங்கள்.
நான் இவ்வாறு வேண்டும்போது சுவிற்சர்லாந்து பொலிஸார் புலிகளை சாட்சியங்கள் இல்லாது கைது செய்துவிட்டனரோ என்ற சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டாம். புலிகள் செய்த சகல தவறுகளுக்கும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதே நியதி. எனவே புலிகளால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்று திரட்டி புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை உணர்த்த யாவரும் முன்வரவேண்டும். இன்று புலிகள் கைது செய்யப்பட்டபின்னர் சுவிற்சர்லாந்திலுள்ள தமிழர்கள் யாவருமே புலிகளா? இவர்கள் வன்முறைமீது இத்தனை காதல்கொண்ட மனிதர்களா? என பிற சமூகத்தினர் பார்க்கின்றனர்.
எனவே புலிகள் பிழைப்புவாதிகள். அவர்கள் தமிழரின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்தார்கள். புலிகளின் வன்செயல்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை, புலிகள் தமிழ் சமூகத்தை எவ்வாறு வாட்டி வதைத்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் நிருபித்துக்காட்டவேண்டும். VIII
3 comments :
ஈழத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே தமிழ் மக்களின் சாபக்கேடு தமிழீழ விடுதலிப் புலிகள் என்ற உண்மையை உணரும் காலம் வந்துவிட்டது.
விடுதலை என்ற பெயரில் ஆடிய ஆட்டங்கள், அட்டகாசங்கள், அடாவடித்தனங்கள் அளவிடவே முடியாது. ஈழத்தில் புலிகள் அழிக்கப்பதுபோல் உலகெங்கும் புலிப்பினாமிகள் அழிக்கப்பட வேண்டும்.
அதற்கான ஒத்துழைப்பு சுவிஸ் தமிழரின் கடமை மட்டுமல்ல அனைத்து உலகத் தமிழரின் முதற்கடமை.
தமிழ்மக்களே பயமின்றி, தயக்கமின்றி சாத்தான்களை அருகிலுள்ள பொலிசாருக்கு விரைவாக காட்டிகொடுங்கள்.
இனியாவது நமது இனத்திக்கு நன்மையை செய்யுங்கள்.
புலிப்பினாமி மாபியாக்களின் மோசடி வழக்கு வெற்றி பெறுவதற்கு பாதிக்கப்பட்ட சுவிஸ் தமிழர்களின் முழு ஒத்துழைப்பும், ஊக்கிவிப்பும் மிக முக்கிய தேவையாகும். இந்தத் தருணத்தில் பெரும்பாலான தமிழர்கள், சற்றும் தயங்காது, முழு மூச்சுடன் முழு ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என்றே தென்படுகிறது.
தமிழர் வாழ்வு வளம்பெற, தமிழர் நிம்மதியாக வாழ, மாபியாக்கள் அழிக்கப்படவேண்டும்.
இதுவே நல்ல தருணம்.
சுவிஸ் வாழ் தமிழ் மக்களே பொங்கி எழுங்கள்.
தமிழரின் சாபக்கேடு புலிகள் மாத்திரமல்ல யாழ்மேலாதிக்கவாதிகளும் சாதியமும் தான்.புலிகள் அழிக்கப்பட்டதுபோல் யாழ்மேலாதிக்கவாதிகளும் சாதியமும் அழிக்கப்பட வேண்டும்.
Post a Comment