அரசியலுக்கு வழிவிட்ட இயற்கையும் , இணைந்த தமிழ் கட்சிகளும். -இரா.வி.விஸ்ணு-
இலங்கையின் அரசியலில் அரசியல்வாதிகளும் , மக்களும் செல்வாக்கு செலுத்துகின்றனரோ இல்லையோ அவ்வப்போது இயற்கை தன் செல்வாக்கை செலுத்திவருகின்றது. சிறிது காலம் உறங்கியிருந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கு வெள்ள அனர்த்தம் தம் அரசியலை செய்ய வழி விட்டிருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமானால் கிழக்கில் இயங்கும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தம்மால் இயன்ற உதவிகளை செய்துதான் இருக்கின்றனர். அத்தோடு சேர்த்து உறங்கிக்கிடந்த தம் அரசியலையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கின்றனர். அரசியல்வாதியையும் பார்க்க சமூக அமைப்புகளும் , ஊடக நிறுவனங்களும் ,வடக்கு , கிழக்கு , தென்பகுதி தமிழ் ,சிங்கள ,முஸ்லீம் நன்கொடையாளர்கள் என உள்நாட்டிலுள்ள அனைவரும் தம்மால் இயன்ற அதிகபட்ச உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக கொடுத்து தமது மனித நேயத்தையும் , இன ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மறுபக்கம் புலம்பெயர் உறவுகளும் தமது தாயக உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர.; ஆனாலும் குறிப்பிட்டளவு உறவுகளாலேயே தமது உதவிகளை சில அமைப்புக்கள் மூலமாகவும் தனிப்பட்ட ரீதியிலும் செய்ய முடிந்திருக்கிறது . இதற்கு காரணம் கடந்த கால செயற்பாடுகளும் நம்பிக்கையீனங்களுமேயாகும். புலம் பெயர் தமிழர்கள் பலர் தாயக உறவுகளுக்கு மனிதநேய உதவிகளை செய்ய தயாராகவே இருக்கின்றனர். ஆனாலும் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களோ , அமைப்புக்களோ புலம்பெயர் நாடுகளில் இல்லை. அவ்வாறு சில அமைப்புக்களை சிலர் நிறுவ முயற்சித்தாலும் அதை விமர்சித்து ஏதோ ஒரு பக்கம் சார்பானவையாக மக்களுக்கு காட்டிவிடுகின்றனர். அது மாத்திரமல்ல கடந்த காலங்களின் தமிழர்களால் இயக்கப்பட்ட மனித நேய அமைப்புக்களாக செயற்பட்டவை. பல மோசடிப் பேர்வழிகளாக நிருபிக்கப்பட்டதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை நேரடியாக தமது உதவிகளை செய்யவில்லை என்பதை மக்கள் உணர்ந்;துகொண்டதும் ஒரு காரணம் . இது எமது புலம்பெயர் சமூகத்திலுள்ள ஒரு இழிகேடான நிலை. அத்தோடு எமது சமுகத்துக்கு ஒரு வெக்கக்கேடான நிலை என்றே கொள்ளவேண்டும். ஒரு தனி மனிதன் தமது சமூகம் அல்லலுறும் போது மனித நேய உதவி செய்ய எண்ணுகிறான.; அனாலும் தமது சமுக அமைப்புகளின் மேலுள்ள நம்பிக்கையீனம் காரணமாக அவனால் அந்த உதவிகளை செய்ய முடியவில்லை என்பது எமது தமிழ் சமுகத்துக்கு (குறிப்பாக தாயக மக்களுக்கு ) அது பொருளாதார ரீதியிலும் , உளவிலை ரீதியிலும் மிகவும் பாதிப்பான நிலை. இந்நிலை மாற தாயக சமுக , மனிதநேய அமைப்புகளும் , அரசியல்வாதிகளும் புலம்பெயர் சமூகத்தோடு இணைக்கப்படவேண்டியதும் , மனிதநேய அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையும் அவசியம். இவற்றையெல்லாம் முன்னெடுப்பது யாரென்ற கேள்வி இன்றைய நிலையில் கேள்விக்குறியாகவே உள்ளது.
தாயகத்தை பொறுத்தவரை இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும்போது இலங்கையரில் ஒன்றை காண முடிகின்றது. அது இன ஒற்றுமையின் முக்கியத்துவமும், இனங்கள் ஒன்றுபடவேண்டுமென்ற ஏக்கமுமே. இது பரவலாக இலங்கையருக்கு காணப்படுகின்றது. அவை இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின் போதும் , பாரிய இடம்பெயர்வுகளின் போதும் வெளிப்படுவது மகிழ்சிக்குரியவை. ஆனாலும் துரதிஸ்டவசமாக அரசியல்வாதிகள் இனவாதத்தை முன்னிறுத்தியே தமது அரசியலை கொண்டுசெல்ல நினைப்பதனால் இனங்களின் ஒற்றுமை என்பது அரசியல்வாதிகளின் கருத்துக்களிலும் செயற்பாடுகளிலுமே தங்கியுள்ளது. இன்றைய நிலையில் சில அரசியல் தலைவர்கள் இன ஒற்றுமை பற்றி பேசினாலும் அவை வருங்காலத்திலேனும் செயற்படுத்தப்படவேண்டுமென்பதே எமது அவா .
தமிழ் கட்சிகளின் இணைவு
புலிகளின் தோல்விக்கு பின்பு தெற்கிலும் அதைவிட வடக்கு , கிழக்கிலும் புதியதொரு அரசியல் சூழ்நிலை காணப்படுவது கண்கூடு. இதில் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைப்பு, சிறுபான்மை இனங்களின் ஒன்றிணைப்பு போன்றவற்றுக்கான முயற்சிகள் ஆரம்பத்தில் தனியார் நிறுவங்களின் ஏற்பாட்டில் தாயகத்திலும் பின்னர் சுவிஸ் அரசாங்கம் மற்றும் மனிதநேய நிறுவனங்களின் ஏற்பாடுகளில் நடந்த சுவிஸ் மகாநாடு அதையடுத்து பல கட்சிகள் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் அரங்கம் என்று நீண்டு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு , த .வி .கூட்டணி , புளொட் ஆகிய கட்சிகள் இணைந்த தேர்தல் கூட்டு வரை வந்திருக்கின்றது. இந்த ஒற்றுமை ஏற்பட ஒரு நீண்ட காலம் ஏற்பட்டிருக்கிறது. இக்கூட்டென்பது தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை எதிர்பார்க்கும் தாயக மக்களுக்கும், ஒற்றுமையை விரும்பும் அனைவருக்கும் மகிழ்சியான விடயம்.
இந்த கூட்டில் மேலும் சில தமிழ் கட்சிகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படபோதும் அவை இணைக்கப்படவில்லை. அவை ஏன் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் கட்சிகள் அரங்கம் பற்றியும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடனான பேச்சுவார்த்தைகள் , தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி தகவல்கள் வெளியிடுவதில் மிக முக்கியமானவராக காணப்பட்டவர் சிவாஜிலிங்கம். அப்படியிருந்தும் அவர் ஏன் இந்த கூட்டணிக்கும் உள்வாங்கப்படவில்லை என்பது புதிர்தான். இதில் சிவாஜிலிங்கம் முன்னாள் டெலோ அமைப்பை சேர்ந்தவர் என்பதனால் இவரும், ஸ்ரீகாந்தாவும் இணைப்பதில் கூட்டமைப்பில் செல்வாக்குமிக்க செல்வம் அடைக்கலநாதன் தடையாக இருக்கிறாரா? இது டெலோ சார்பான உட்கட்சி பிரச்சனையா? அல்லது இவர்களின் பேச்சுவார்த்தையில் சிவாஜிலிங்கம் உள்வாங்கப்படாதவர்க்கு என்ன காரணமிருக்கும் ? தமிழ் மக்களின் தீர்வு பற்றி யோசிப்பவர்களும் பெற்றுகொள்ள முயற்சிப்பவர்களும் என்ன காரணத்துக்காக புளொட்டையும், த .வி. கூட்டணியையும் இணைக்க முடிந்தவர்களுக்கு சிவாஜிலிங்கத்தை இணைக்க முடியவில்லை. அது மாத்திரமல்ல. தெற்கிலுள்ள இடதுசாரி சிங்கள கட்சிகளிடமும் , தலைவர்களிடமும் உறவுமிக்கவரும் அதோடு அக்கட்சிகளுடன் தேர்தலில் ஒன்றாய் கூட்டுச் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிடுமளவுக்கு உறவுகளை பேணிவருபவர், தமிழ் மக்கள் மத்தியிலும் அவருக்கு குறிப்பிட்டளவும் செல்வாக்குமிருக்கின்றது . இன்றைய ஒரு சாதகமான சூழலில் அதுவும் பழையவற்றை எல்லாம் மறந்து ஒன்று சேரவேண்டும் என்றளவுக்கு தமிழ் அரசியல் வாதிகள் பலர் வந்திருகின்ற நிலையில் விரும்பும் அனைவரும் உள்வாங்கப்படாதது துரதிஸ்டவசமே. அத்தோடு இன உறவுகளை பேணக்கூடிய தொடர்புமிக்கவர்கள் உள்வாங்கப்பாடாமை வருங்கால இன ஒருமைச் செயற்பாடுகளில் இவர்களின் சேவைகள் இழக்கப்படலாம்.
அடுத்ததாக ஈ.பி.ஆர் .எல் எப் - பத்மநாபா அணியும் இக்கூட்டில் இணைவதற்கும் விருப்பமுள்ள கட்சி இவையும் கூட்டமைப்புடனும் , த.க.அரங்கத்துடனும் பல பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்தது .பலருக்கும் நினைவிருக்கும் கடந்த பாராளுமன்ற தேர்தலின் பொது கிழக்கு மாகாணத்தில ;ஈ.பி.ஆர் .எல் எப் - பத்மநாபா அணியின் தலைவர் தற்போதைய கிழக்கு மா.ச .உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தமிழ் தேசிய கூட்டுசேர்ந்து தேர்தலில் போட்டியிட முயற்சித்தார். இருந்தும் அது கைகூடவில்லை (கட்சியாக இல்லாமல் தம்முடன் வந்து இணைந்தால் சேர்ப்;போமென்று சுரேஷ் கூறியதாக அவர்களின் உட்கட்சி வட்டாரங்கள் அன்று பேசிக்கொண்டன) இன்றைய நிலையில் ஈ.பீ.ஆர் .எல் எப் - பத்மநாபா கட்சியும் இவருடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளின் சிறீதரன் தலைமையில் முன்னெடுத்து வந்தன. இங்கும் சில கேள்விகள் எழுகின்றன. இவர்கள் இணைக்கப்படாததற்கு கூட்டமைப்பில் செல்வாக்குமிக்க சுரேஷ் பிரேமசந்திரன் காரணமா ? இது ஈ.பீ.ஆர்.எல்.எப் இன் உட்கட்சி முரண்பாடா ? அல்லது சுரேஷ் பிரேமசந்திரனுக்கு ஈ.பீ.ஆர் .எல் எப் - பத்மநாபா அணியின் வரதராஜப்பெருமாளை இணைத்து கொள்வதில் ஏதும் பிரச்சனை இருக்குமோ ? அல்லது வேறு என்ன காரணமாகவிருக்கும் ? இன்றைய சூழ்நிலையில் ஈ.பீ.ஆர் .எல் எப் - பத்மநாபா சரி கூட்டமைப்பிலுள்ள அனைவருமே ஒன்று சேரவேண்டுமென்றே விரும்புவதாக தோன்றுகிறது. ஆனாலும் மேற்கூறியது போல் தமிழ் மக்களின் தீர்வு பற்றி யோசிப்பவர்களும் பெற்றுகொள்ள முயற்சிப்பவர்களும் என்ன காரணத்துக்காக புளொட்டையும், த .வி.கூட்டணியையும் இணைக்க முடிந்தவர்களுக்கு ஈ.பீ.ஆர் .எல் எப் - பத்மநாபா அணியையும் அதிலுள்ள வரதராஜபெருமாளையும் இணைக்க முடியவில்லை.
ஒன்று சேர்வதென்று முடிவெடுத்துவிட்டீர்கள் இதில் ஈ.பீ.ஆர் .எல் எப் அல்லது ரெலோவோ பழையபடி அனைவரும் ஒன்றாவதில் என்ன பிரச்சனை இருக்கிறது (சொத்து பிரச்சனையா ?) சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாமே. சிலர் விவாதிக்கலாம் தங்கள் தலைவரை கொன்றவரிடம் சரணடைந்தவர்கள் அவர்களோடு சேர முடியாதென்றும், மற்றவர்கள் அவர்கள் தமக்கு பிரச்சனையானவர்கள் என்றும் இருதரப்பும் யோசிக்கலாம். பழையவற்றை மறந்து தமிழர்களுக்காகவும் தமிழ்ப் பகுதியில் ஒரு புதியதொரு அரசியல் சூழலை உருவாக்கத்தானே முயற்சிக்கிறீர்கள?; அப்படியிருக்க பழையவற்றை மறந்து ஒன்றுபடுங்கள். அது எமது சமுகத்துக்கே ஆரோக்கியமானது.
ஒருவேளை இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைக்கப்படாத பட்சத்தில் இக்கட்சிகளில் அரசியல் எதிர்காலம் இன்றைய நிலையிலேயே இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இக்கட்சிகள் ஒன்றிணைக்கப்படாத போதும் இவை இத்தேர்தலில் தற்போது உருவாகியிருக்கின்ற புதிய கூட்டணிக்கு நிச்சயம் ஆதரவை தெரிவிக்குமென்று எதிர்பார்க்கலாம். வருங்கால தமிழ் அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்று பிரார்த்திப்போம்.
'என்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன் செய்யாமை நன்று '
(என்ன தவறு செய்துவிட்டோமென நினைத்து கவலைப்படக்கூடிய காரியங்களை செய்யக்கூடாது ஒருவேளை அப்படி செய்துவிட்டாலும் அதை மீண்டும் செய்யாதிருப்பதே நன்று ?
0 comments :
Post a Comment