Friday, January 28, 2011

யாழ் இராணுவத் தளபதி : டக்ளசிற்கு எச்சரிக்கை.

ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் யாழ் இராணுவத் தளபதிக்குமிடையேயான முரண்பாடுகளுக்கு மத்தியில் டக்ளஸ் தேவானந்தா மீது தனது அதிகாரத்தை பயன்படுத்தும் நிலைக்கு யாழ் இராணுவத் தளபதி மஹிந்து ஹத்துருசிங்க தள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் கொலை கொள்ளைகளுக்கான குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன்நிறுத்துமாறு பலதரப்பாலும் நெருக்குவாரங்கள் அதிகரிக்கின்ற நிலையில், டக்ளஸ் தேவானந்தாவை தனது அலுவலகத்திற்கு அழைத்த யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஈபிடிபி அமைப்பினரின் சட்டவிரோத நடவடிக்கைகள் யாவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என எச்சரித்ததாக யாழ் இராணுவத் தலைமையக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

யாழ்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத கொலை , கொள்ளை , கற்பழிப்பு , கப்பம் போன்ற விடயங்களுக்கு முன்னாள் மற்றும் இன்னாள் ஆயுதக்குழக்கள் காரணமாக இருப்பின், அவசர காலச்சட்டத்தின் கீழ் இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு பிறப்பிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நாளொன்றுக்கு முற்றாக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தாவது, பிரதேசத்தில் இயங்குகின்ற ஆயுததாரிகளை கைது செய்வதுடன் ஒழித்து வைத்திருக்ககூடிய ஆயுதங்கள் யாவற்றையும் பிடுங்குமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபையினர் விடுத்துள்ள வேண்டுகோளை அடுத்தே மேஜர் ஜெனரல் இவ் எச்சரிக்கையை விடுத்ததாக மேலும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தது:

யாழ்பாணத்தின் சகல பிரதேசங்களுக்கும் ஈழமக்கள் ஜனநயக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் என ஒவ்வொருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வப் பிரதேசங்களில் அவர்கள் கட்டப்பஞ்சாயத்து தலைவர்களாக செயற்பட்டு வருவகின்றனர். இவர்கள் அரச, தனியார் செயற்பாடுகள் யாவற்றிலும் மூக்கினை நுழைப்பதாக பரவலாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

அதேநேரம் புலிகளியக்கத்திலிருந்து இராணுத் தினரிடம் சரணடைந்து பின்னர் புனவாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சுமார் 300 பேரை டக்ளஸ் தனது இயக்கத்தில் இணைத்துக்கொண்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் பல சதிகள் இடம்பெறலாம் என யாழ் புலனாய்வு வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com