Wednesday, January 12, 2011

அமெரிக்க பெண் எம்.பி.,யைச் சுட்டவர் பின்னணி தெரிந்தது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி எம்.பி., கேப்ரியல் கிப்போர்டு மீது கண்மூடித்தனமாக சுட்ட இளைஞன் ஜேர்டு லீ லானர் (22) மீது போலீசார், ஐந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி பீனிக்ஸ் நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், அவனது வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து, அவன் இந்தத் தாக்குதலுக்கு ஏற்கனவே திட்டமிட்டுள்ளதும், அவன் வலதுசாரி பயங்கரவாதியாக இருக்கக் கூடும் என்பதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டக்சான் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இரு நாட்களுக்கு முன் நடக்க இருந்த கூட்டம் ஒன்றுக்காக வந்திருந்த ஜனநாயகக் கட்சி எம்.பி., கேப்ரியல் கிப்போர்டு மீது, ஜேர்டு லீ லானர் கண்மூடித்தனமாக சுட்டதில், அவரது தலையில் குண்டு பாய்ந்து ஆபத்துக்கிடமான நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தில் நீதிபதி, பெண் குழந்தை, எம்.பி.,யின் உதவியாளர் உட்பட ஆறு பேர் பலியாயினர். 14 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட லானரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் மீது, கொலை செய்ததற்காக தனித் தனியாக ஐந்து குற்றங்கள் சுமத்தப்பட்டு நேற்று பீனிக்ஸ் நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.

கடந்தாண்டு நவம்பர் மாதம், டக்சான் நகரில் உள்ள ஓர் ஆயுதக் கடையில் சட்டப்பூர்வமாக அவன் "க்ளாக்" வகை கைத்துப்பாக்கியை விலைக்கு வாங்கியிருக்கிறான். அத்துப்பாக்கியால் கேப்ரியல் கிப்போர்டையும் மற்றவர்களையும் சுட்டு முடித்த பின், அவன் தனது துப்பாக்கியில் மீண்டும் குண்டுகள் இருந்த மற்றொரு "மேகசீனை" பொருத்த முற்பட்டான். அப்போது அவன் அருகில் இருந்த ஒரு பெண் அதைத் தடுத்து "மேகசீனை" பறித்துக் கொண்டார். அவன் மறுபடியும் தன்னிடம் இருந்த மற்றொரு "மேகசீனை" எடுத்து பொருத்த முற்பட்டபோது இரண்டு பேர் அவனைப் பிடித்து விட்டனர். இத்தகவலை டக்சான் நகர் ஷெரீப் க்ளேரன்ஸ் டப்னிக் தெரிவித்தார்.

இதற்கிடையில் டக்சான் நகரில் உள்ள லானிரின் வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அதில் "நான் முன்பே திட்டமிட்டேன்" என்றும், "எனது தாக்குதல்" மற்றும் "கிப்போர்டு" என்றும் எழுதப்பட்ட ஒரு கவர் கிடைத்தது. நேற்று டக்சானுக்கு வந்த அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் (எப்.பி.ஐ.,) இயக்குனர் ராபர்ட் முல்லர், இவ்வழக்கின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தீவிர வலதுசாரி அமைப்புகளுக்கும் லானருக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற நோக்கிலும் விசாரணை நடப்பதாகத் தெரிவித்தார். அதேநேரம், பல்வேறு சமூக வலைத் தளங்கள் மற்றும் "யூ டியூப்" ஆகியவற்றில் லானர் எழுதி வெளியிட்ட கருத்துக்களும் கிடைத்துள்ளன. அவற்றில் அவன் அரிசோனா மாகாணத்தில் உள்ளவர்கள் எழுத்தறிவு குறைவாக இருப்பதைப் பற்றி மிகவும் கவலைப்பட்டிருக்கிறான். அமெரிக்க அரசின் போக்குக் குறித்து வசைமாரி பொழிந்துள்ளான். அவன் குடியிருந்த டக்சான் நகரில், ஆங்கிலம் பேசும் வெளிநாட்டவர்கள் பலர் குடியிருக்கின்றனர். அவர்களின் ஆங்கில உச்சரிப்பு அவனை எரிச்சலூட்டியிருக்கிறது. அதுபற்றி அவன் குறைப்பட்டிருக்கிறான்.

கல்லூரி நாட்களில் வகுப்பை நடத்தவிடாமலும், நூலகத்தில் பலருக்கும் தொந்தரவு செய்வது அவனது இயல்பாகி விட்டது. இதனால் அவன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டான். இந்நிலையில் அவனது பெற்றோர் அமி மற்றும் ரேண்டி லானர், கல்லூரி நிர்வாகிகளிடம்,"அவனது பாதிக்கப்பட்ட மனநிலை காரணமாக அவனால் கல்லூரிக்கோ மற்றவர்களுக்கோ எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை" என்று ஒரு சான்றிதழ் தரும்படி கேட்டதாக, அக்கல்லூரி நிர்வாகம் இப்போது தெரிவித்துள்ளது.

அவன், இறுதியாகப் பதிவு செய்த ஒரு வீடியோவில்,"குட்பை! நண்பர்களே! நான் அரசையும், கடவுளையும் நம்பவில்லை! ஜேர்டு இப்போது தூங்கப் போகிறான்" என்று குறிப்பிட்டிருக்கிறான். அவனுடன் கல்லூரியில் படித்த கதே பார்க்கர் (22)என்ற இளம் பெண் அவனைப் பற்றிக் கூறுகையில், "அவன் பல நேரம் தனிமையில் தான் இருப்பான். அவன் 2007க்கு முன்பு ஒரு முறை கிப்போர்டைச் சந்தித்த போது, அவன் அவரிடம் கேட்ட கேள்விக்கு, அவர் ஸ்பானிய மொழியில் பதில் அளித்தது அவனை கடும் கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறது. பின்னர் என்னிடம் அவரைப் பற்றி,"அவர் ஒரு முட்டாள், அறிவில்லாதவர்" என்று கூறியிருக்கிறான்" என்று தெரிவித்துள்ளார். அவனது வேறு சில ஆவணங்கள் மூலம்,"பாராபெர்னாலியா" என்ற போதை மருந்துக்கு அவன் அடிமைப்பட்டிருந்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கேப்ரியல் கில்லார்டின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com