Tuesday, January 11, 2011

விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சிம் - புன்னியாமீன்

21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆரம்பித்துள்ள நிலையில் இணையக் கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும், இலவசமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது.

இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால் புத்திஜீவிகளுக்கும், கற்றவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தாம் தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. மொழி ரீதியாக ஒன்றுபட்டாலும்கூட பல்வேறுபட்ட கலை, கலாசார, பாரம்பரிய மரபுகள் சமூக ரீதியில் வித்தியாசப்படலாம். அவற்றையும் திரட்டி எதிர்கால சந்ததியினருக்கு தம் முன்னைய தலைமுறையினரின் வரலாறுகளைப் பற்றியும், கலாசார பாரம்பரியங்களின் மான்மியங்கள் பற்றியும் தம் மொழியினூடே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் விக்கிப்பீடியா இன்றைய காலகட்டத்தில் முன்நிற்கின்றது.

கலைக்களஞ்சியங்கள் என்றால் என்ன?
மனிதனின் அறிவியல் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இயந்திரமயமான இத்தகைய யுகத்தில் ஒரு மனிதனால் சகல அறிவியல் விடயங்களையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. இருப்பினும், தனது தேவைகளுக்கேற்ப அவசியப்படக்கூடிய தகவல்களை எவ்வாறு, எங்கே பெறலாம் என்ற விபரத்தினை தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகின்றது. இவ்வாறாக மனிதனின் அறிவுப் பசிக்கு தீனி போடக்கூடிய விடயங்களில் ஒன்றாகவே கலைக்களஞ்சியங்கள் விளங்குகின்றன.

கலைக்களஞ்சியம் என்றால் "எழுத்துருவிலான அறிவுத்தொகுப்பு" என வரைவிலக்கணப்படுத்தலாம். உலக அறிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் அகரவரிசைப்பட தொகுக்கப்பட்டதாகவுமுள்ள நூல் தொகுதிகளையே பொதுவாகக் கலைக்களஞ்சியங்கள் என்கிறோம். இவை ஆங்கிலத்தில் என்சைக்ளோபீடியா (Encyclopedia) என அழைக்கப்படுகின்றன. Enkyklos Paideia என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே இப்பெயர் உருவாகியுள்ளது. இதன் பொருள் 'சகலவற்றையும் உள்ளடக்கிய கல்வி" என்பதாகும்.

கலைக்களஞ்சியங்கள் வரலாற்றுச் சுருக்கம்.

கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டோட்டில் (Aristotle) பல்வேறு அறிவுத்துறைகளைப் பற்றித் தனது நூலில்களில் எழுதிவைத்திருந்தார். அத்தோடு அன்றைய உலகிலிருந்த அறிவையெல்லாம் சுருக்கித் தொகுத்துவைக்க அவர் முயற்சிஎடுத்திருந்தார். இதன் காரணமாக ‘கலைக்களஞ்சியங்களின் தந்தை" என அவர் அழைக்கப்படுகிறார். எனினும், முதலாவது கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் எனக் கருதப்படுபவர் கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானியான Speusippus என்பவராவார். இவர் பிளேட்டோவின் மாணவர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாவது கலைக்களஞ்சியத் தொகுதியொன்றை உருவாக்கியவர் மார்கஸ் வரோ (Marcus Terentius Varro) என்பவரே. இலத்தீன் மொழியில் Disciplinae என அழைக்கப்பட்ட இத்தொகுதி இவரால் கி.மு. 30ம் ஆண்டளவில் எழுதப்பட்டது. இத்தொகுதியில் 9 புத்தகங்கள் இருந்தன. எனினும், இவற்றில் ஒன்றுகூட இப்போது இல்லை என்பது வேதனைக்குறிய விடயமாகும். இந்நிலையில் தற்போதும் முழுமையாகப் பேணப்பட்டிருக்கும் மிகப் பழைய கலைக்களஞ்சியம் Historia Naturalis (இயற்கை வரலாறு) என்பதாகும். இதனை மூத்த பிலினி (Piliny the Elder) என்பவர் கி.பி. 79ம் ஆண்டளவில் தொகுத்தார். இந்தக் கலைக்களஞ்சியத் தொகுப்பில் 37 நூல்களும், 2493 அத்தியாயங்களும் இருக்கின்றன. 1500 ஆண்டுகளுக்கு மேலாக இது மிகப் பிரபல்யம் பெற்றுவிளங்கியது.

நவீன கலைக்களஞ்சியங்கள்
தற்போது பயன்பாட்டிலுள்ள கலைக்களஞ்சியங்களுள் நீண்ட வரலாறு கொண்டது Encyclopedia Britannica எனும் பிரித்தானியக் கலைக்களஞ்சியமாகும். இது 1768ல் Andrew Bell, Colin Mac Farquhar, William Smellie ஆகிய 3 ஸ்கொட்லாந்தியர்களால் உருவாக்கப்பட்டது. 1929ல் இது முற்றாகத் திருத்தியமைக்கப்பட்டு 24 பாகங்களாக வெளியிடப்பட்டது. பின்னர் 1974ல் முற்றிலும் புதிய பதிப்பாக 30 பாகங்களுடன் New Encyclopedia Britannica என்ற பெயரில் வெளிவந்தது. இதன் திருத்திய பதிப்பு 32 பாகங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்தத் தொகுதி தற்போது ஐக்கிய அமெரிக்காவிலிருந்தே வெளியிடப்படுகின்றது. இதே போல சிறுவர்களுக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கலைக் கலைக்களஞ்சியத் தொகுப்புகள் பல தற்போது இருக்கின்றன.

நூலுருப்பெறாத கலைக் கலைக்களஞ்சியங்கள்

1980களில் இலத்திரோனிக் முறைகளில் CD களில் பதிவு செய்யப்பட்ட கலைக் கலைக்களஞ்சியங்கள் வெளிவரத் தொடங்கின. இவற்றைக் கனணிகளில் உள்ள CD Drive களைப் பயன்படுத்தி இயக்க முடியும். இந்த CD தட்டுக்களில் எழுத்துக்கள் மட்டுமன்றி சித்திரங்கள், போட்டோக்கள், வீடியோக்கள், ஒலிகள் என்பனவும் பதிவு செய்யப்பட்டிருக்கும். எழுத்துக்களையும், படங்களையும் கனணித்திரையில் பார்க்கும் அதேவேளை ஒலிகளை ஒலிபெருக்கி மூலம் கேட்கலாம். இவ்வாறான கலைக் கலைக்களஞ்சியங்கள் எழுத்து, படங்கள், வீடியோ, ஒலி போன்ற பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக Multi-Media Encyclopedia என அழைக்கப்படுகின்றன. நூலுருவிலுள்ள கலைக் கலைக்களஞ்சியங்களை விட அதிக தகவல்களை வழங்கக்கூடியனவாக இவை இருக்கின்றன.

கலைக்களஞ்சிய தளங்கள்

கலைக்களஞ்சிய தளங்கள் என்பன நவீன இலத்திரனியல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியில் பெறப்பட்ட ஆவணமாக்கல் பொக்கிசங்களாகும். இன்று கலைக்களஞ்சிய தளங்கள் என்ற அடிப்படையில் விக்கிபீடியா, மைக்ரோசொஃப்ட் என்கார்ட்டா, பிரிட்டானிக்கா, என்சைக்ளோபீடியா டொட் கொம் போன்ற சில தளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் விக்கிபீடியா கலைக்களஞ்சிய தளம் முதன்மை நிலையைப் பெற்று விளங்குகின்றது.

விக்கி என்றால் என்ன?
விக்கி (Wiki) என்னும் சொல், ஹவாய் மொழியில் வழங்கப்படும் 'விரைவு" என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். இந்த இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களால் தளத்தின் உள்ளடக்கத்தை திருத்தவோ, கூட்டவோ குறைக்கவோ மாற்றியமைக்கக் கூடியதாகவோ இருக்கும். நடைமுறைக்கும் தொடர்பாடல்களுக்கும் இது எளிமையானதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்கு சிறந்த கருவியாகத் திகழ்கின்றன.

'விக்கி" என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் ' விக்கி மென்பொருளை'க் குறிக்கும். 'விக்கிவெப்' என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாக உள்ளது. விக்கிவெப் என்ற பெயரை 'வார்ட் கன்னிங்ஹாம்" என்பவர் முதலில் வைத்தார். விக்கி இணையத்தளங்களுக்கு எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிய இணையத்தளங்களை குறிப்பிடலாம். விக்கி (Wiki) + என்சைக்கிளோபீடியா (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்தே விக்கிபீடியா (Wikipedia) என்ற சொல் உருவானது.

விக்கிபீடியா உருவாக்கமும், வளர்ச்சியும்
புதிய மிலேனியத்தின் ஆரம்பத்தில் 'நுபீடியா" என்ற இலவச இணைய கலைக் களஞ்சியப் பணியைப் புரிந்தவரும், தற்போது விக்கிப்பீடியாத் திட்டங்களை முன்னின்று நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும், வேறுபல விக்கிதிட்டங்களை நடத்துபவருமான அமெரிக்காவைச் சேர்ந்த "ஜிம்மி வேல்ஸ்" (ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் - பிறப்பு ஆகஸ்ட் 7, 1966, மற்றும் அமெரிக்க மெய்யியலாளரும், விக்கிப்பீடியாவினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல் களஞ்சியமான சிடிசென்டியம் (குடிமக்கள் தொகுப்பு) உருவாக்குனருமான லாரன்சு மார்க் லாரி சாங்கர் (பிறப்பு ஜுலை 16, 1968) ஆகிய இருவரும் இணைந்து கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை ஆரம்பித்தனர்.

அனைவரும் பங்களிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட கலைக்களஞ்சியம் உருவாக்கும் இலக்குகளை வேல்ஸ் தீர்மானித்தார். அந்த இலக்கினை அடைய, விக்கி மென்பொருளை பயன்படுத்தும் திட்டத்தினை சாங்கர் செயற்படுத்தினார். இவ்விதமாக ஜனவரி 15, 2001 இல் விக்கிப்பீடியா பிறந்தது. ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டும் பதிப்பித்த விக்கிப்பீடியா படிப்படியாக பல மொழிகளில் வியாபகமடைந்தது. விக்கபீடியாவின் பிரதான கொள்கையான நடுநிலைநோக்கு மற்றும் பிற கொள்கை வழிகாட்டல்கள், நுபீடியாவில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளையொட்டியே உருவாக்கப்பட்டன.

விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் இறுதியில் 18 மொழிகளில் சுமார் 20,000 கட்டுரைகளை உள்ளடக்கியிருந்தது. பத்தாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் இந்நிலையில் 278 மொழிகள் என பல மொழிகளில் இது ஓர் இயக்கமாக வியாபித்து வளர்ச்சியடைந்துள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் சனவரி 10, 2011இல் 3,525,027 கட்டுரைகளும், 278 மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 17, 625, 096 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆங்கில விக்கிபீடியாவில் சனவரி 10, 2011இல் 13,728,700 பயனர்களும், 278 மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 27,028,206 பயனர்களும் பங்களித்துள்ளனர். விக்கிப்பீடியாவில் பயனர்கள் என்ற கூறும்போது விக்கியில் எழுதி, பங்களிப்பவர்களை குறிக்கும்.

தமிழ் விக்கிப்பீடியா

எளிய தமிழில், தரமான, கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே தமிழ் விக்கிப்பீடியாவின் முதன்மைக் குறிக்கோளாகும். தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஓர் இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது. தமிழ் விக்கிப்பீடியா தளம் ஆங்கில இடைமுகத்துடன் காணப்பட்ட நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகக் கருதப்படும் இ. மயூரநாதன் நவம்பர் 2003இல் தளத்தின் இடைமுகத்தின் பெரும்பகுதியைத் தமிழாக்கினார். ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் கட்டிடக் கலைஞராகப் பணியாற்றிவரும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன், யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரியில் பழைய மாணவராவார். செப்டம்பர் 19, 2003 இல் இவரின் முதல் கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்தும் இவர் பணியாற்றி அக்டோபர் 03, 2005ல் 500 கட்டுரைகளையும், நவம்பர் 16, 2010ல் 3289 கட்டுரைகளையும் உள்ளிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாக ஏழாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிவரும் இவரின் பணி இன்றுவரை தொடர்கிறது. இவர் நாளொன்றுக்கு 1.26 கட்டுரைகளை எழுதுகின்றார் என புள்ளிவிபரங்களிலிருந்து கண்டுகொள்ளலாம்.

ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த அமல்சிங் என்ற பயனர் ஆங்கில தலைப்புடன் நவம்பர் 12, 2003 இல் முதல் தமிழ் கட்டுரையை வெளியிலிருந்து உள்ளிட்டார். சனவரி 10, 2011வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 27,033 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் மிகவும் மெதுவாகவே தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்தாலும், எவ்வித தொய்வும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டே வருகின்றது. பிறமொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பிடுகையில் கட்டுரைகள் உள்ளாக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா 68வது இடத்தில் இருக்கின்றது. சனவரி 10, 2011வரை 24,051 தம்மைப் பயனர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக பங்களித்து வருபவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். மேலும் விக்கியுடன் இணைந்த வகையில் பின்வரும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவை: விக்சனரி (கட்டற்ற அகரமுதலி), விக்கி மேற்கோள்கள் (மேற்கோள்களின் தொகுப்பு), விக்கி இனங்கள் (உயிரினங்களின் கோவை), விக்கி செய்திகள் (கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை), விக்கி மூலம் (கட்டற்ற மூல ஆவணங்கள்), விக்கி பொது
(பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு), விக்கி பல்கலைக்கழகம் (கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்), விக்கி நூல்கள் (கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்), மேல்-விக்கி (விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு.

தமிழ் விக்கிப்பீடியா குறிக்கோளும், கொள்கைகளும்.

விக்கிப்பீடியா பல மொழிகளில் அமையப்பெற்றிருந்தாலும்கூட, குறித்த மொழியின் குறித்த மொழிசார் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றது. இவ்வடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இலகு தமிழில், தரமான, கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முதன்மைக் குறிக்கோளைக் கொண்டுள்ளமையால் இது நடுநிலை நோக்கு, பதிப்புரிமைகளை மீறாமை, மெய்யறிதன்மை, இணக்க முடிவு, பாதுகாப்புக் கொள்கை, தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல், பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளித்தல் போன்ற கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு இதன் பணிகள் தூரநோக்குடன் செயற்படுத்தப்படுகின்றன.

தமிழ் விக்கிப்பீடியா ஐந்து அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றது. இந்த அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் ஐந்து தூண்கள் என்று சுருக்கி வரையறுத்துள்ளனர். அவை:

1) கலைக் களஞ்சியம் வடிவில் அமைதல்,
2) கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு அமைதல்,
3) கட்டற்ற உள்ளடக்கம்,
4) அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள்,
5) இறுக்கமான சட்ட திட்டங்கள் இல்லாமை.

தமிழ் விக்கிப்பீடியாவில் பிரதான உள்ளடக்கம்.
தமிழ் விக்கிப்பீடியாவின் பிரதான உள்ளடக்கமாக பின்வரும் பிரதான தலைப்புகள் அமைகின்றன. தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் இவை மேல்விக்கியில் எல்லாமொழி விக்கிப்பீடீயாக்களிலும் இருக்க வேண்டிய மூல கட்டுரை அமைப்புகள் என பரிந்துரை செய்யப்பட்டவையாகும். மேற்படி ஒன்பது பிரதான தலைப்புகளுக்கமைய விக்கிப்பீடியாவில் காணப்படக்கூடிய கட்டுரைகள் பல துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்படுத்தலின் கீழ் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. விக்கியின் மென்பொருள் தொழில்நுட்பம் மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் காணப்படுவதினால் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில் பயணிப்பது இலகு. மேலும் குறித்த விடயம் தொடர்பாக தேடல் மேற்கொள்ள வேண்டுமெனில் தேடல் கட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்து உரிய தலைப்பைத் தேடலாம்.

ஒரு தகவல் களஞ்சியம் என்ற வகையில் விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் தரமானவை. ஆதாரபூர்வமானவை. மேலும் உரிய கட்டுரைகள் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் வெளியிணைப்புகளை தேர்ந்து அதனைச் சொடுக்குவதன் மூலம் விரிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெளியிணைப்புக்கள் தமிழ் மொழியிலேயே இருக்குமெனக் கருத முடியாது.

எதிர்பார்க்கை
காலமாற்றங்களுக்கேற்ப மனிதச் செயற்பாடுகளும் நடத்தைகளும் மாற்றமடைய வேண்டுமென்பது அறிவு ஜீவிகளின் எதிர்பார்க்கையாகும். உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இலாப நோக்கமற்றஇ அரசியல் - சமய - பக்க - சாதி - வர்க்க சார்பற்ற அறிவுத்தொகுப்பான தமிழ் விக்கிபீடியாவில் இணைந்து அதன் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யவேண்டியது அத்தியாவசியமானது. இதன் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க அனைவரும் முன்வரவேண்டும். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எம் அனைவரினதும் செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்தும் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் தமிழ்மொழியின் வளத்துக்கும், பாதுகாப்புக்கும் துணைநிற்க வேண்டியது காலத்தின் தேவைக்கேற்ப தார்மீகப்பொறுப்பாகும்.

1 comments :

Anonymous ,  January 11, 2011 at 4:28 PM  

புன்னியாமீன் எழுதிய விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம் கட்டுரை விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழாவின் போது வெளியிடப் பெற்றிருப்பது சிறப்பாக உள்ளது. -தேனி.எம்.சுப்பிரமணி, ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ் (www.muthukamalam.com)

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com