புலிகளின் ஆயுதக்கப்பலை காப்பாற்றிய கண்காணிப்புக்குழு: விக்கிலீக்ஸ்
விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றுக்கு சரியான நேரத்தில் தகவல்களை வழங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு, அதனை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை வடகிழக்கு கடற்பகுதியில் பயணித்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையினர் தாக்க முனைந்த சமயம், விடுதலைப்புலிகளுக்கு சரியான சமயத்தில் தகவல்களை கொடுத்து போர்நிறுத்த கண்காணிப்புக்குழு காப்பாற்றியதாக 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அனுப்பப்பட்ட அமெரிக்க தூதரகத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவரான நார்வேயின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ரெலிப்சென் என்பவரை நீக்கவேண்டும் என கடிதம் அனுப்பியிருந்தார்.
விடுதலைப்புலிகளின் கப்பலை இலங்கை கடற்படையினர் கண்டறிவதை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தடுத்துள்ளது. அதற்கு ரெலிப்சென் தான் முக்கிய காரணம். அவர் தொலைபேசி மூலம் விடுதலைப்புலிகளுக்கு தகவல்களை வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் கப்பல் தப்பிச்சென்றுவிட்டது என சந்திரிகா, நார்வேக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, அமெரிக்கத் தூதர் கண்காணிப்புக்குழுவின் தலைவர் ரெலிப்சென் உடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, விடுதலைப்புலிகளின் கப்பல் ஒன்று வடகிழக்கு கடலில் பயணிக்கின்றதா என தாம் தவறுதலாக விடுதலைப்புலிகளிடம் தொலைபேசி மூலம் கேட்டுவிட்டதாக ரெலிப்சென் தெரிவித்திருந்தார்.
எனினும் ரெலிப்செனின் நடவடிக்கைகளில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், அவரை நீக்கும்படியும் சந்திரிகா வலியுறுத்தியிருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி குறித்து நோர்வே உற்றுநோக்கியது - விக்கிலீக்ஸ்
2004 ஆம் ஆண்டில் இலங்கையின் சமாதான செயற்பாடுகளிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் நோர்வேயின் பங்கிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நோர்வே அதிகளவில் கவனத்தில் கொண்டதாக கூறப்படும் விக்கிலீக்ஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியினரை சமாதான நடவடிக்கையின் பாதையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இழுக்க தயங்கியமையே இவ்வாறான மோசமான சூழ்நிலைக்கு காராணமென நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் உரையில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலை சமாதான நடவடிக்கைகளுக்கு பாரியதொரு இடையூராக உள்ளதாக தெரிவித்துள்ளார் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் மீதான பார்வையை விசாலமாக்கியுள்ளதுடன், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைள் குறித்தும் கவனம் கொண்டு வருவதாகவும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர், டோக்கியோவில் உள்ள அதிகாரி ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார் எனவும் விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment