வன்னி, யாழ்பாணத்தில் ஏன் சிங்களவர்கள் இல்லை? சம்பிக்க சாட்சியம்.
1983 ஆண்டு ஜூலை கலவரம் தந்த பரிசே இன்று வன்னி , யாழ் பிரசேங்களில் சிங்களவர்கள் இல்லை எனவும் அன்று யாழ், வன்னி பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள் எனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்முன் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வில் சாட்சியமளிக்கும்போது ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜுலை கலவரத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆறு மாதங்களில் மீள்குடியேற்றப்பட்டனர். எனினும் கலவரத்தினால் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் இன்று வரை மீள்குடியேற்றப்படவில்லை.
யுத்தம் ஆரம்பித்தவுடன் நூற்றுக்கனக்கான தமிழர்கள் நகர் பகுதிகளுக்கு வர ஆரம்பித்தனர். இதனை சிங்களவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கொழும்பில் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழும் தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் வடக்கில் மீளக்குடியேற்றப்படுவதை இன்னும் எதிர்க்கின்றனர்.
பொதுமக்கள் தமது தாய் மொழியில் பேசுவதற்குள்ள உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அரச சேவையில் சிறுபான்மையினரின் சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும்
1983 ஜூலை கலவரத்தினால் கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டது போன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டனர்.
கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அதேபோன்று சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மிகிந்தலை மற்றும் குருநாகல் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
பின்னர் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். எனினும் இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் இன்று வரை மீள்குடியேற்றப்பட்டவில்லை.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் சிங்கள மக்கள் ஏன் யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது?
அண்மையில் யாழ்ப்பாணத்தில் குடியேறிய சிங்கள மக்களை அங்குள்ள தமிழ் மக்கள் வரவேற்று அரவணைத்தனர். எனினும் தமிழ் அரசியல் தலைவர்களும் கட்சிகளும் அதை விமர்சிக்கின்றனர்.
கொழும்பில் 35 சதவீதமான தமிழர்கள் வாழ்கின்றனர். அதேவேளை 29 சதவீதமான சிங்களவர்களே வாழ்கின்றனர்.
இன்று கொழும்பு மற்றும் புற நகர்களில் அதிக வீடுகளை கொள்வனவு செய்பவர்களாக தமிழர்களே காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் ஏன் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ முடியாது?
சிங்களம் மாத்திரம் எனும் கொள்கை ஆயுத போரட்டத்திற்கு காரணமாக இருந்திருந்தால் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் மாத்திரமே ஆங்கிலத்தில் தேர்ச்சியுடைய எல்.ரி.ரி.ஈ தலைவர்களாக இருந்தனர்.
சிங்கள மொழி மாத்திரம் அரச மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டமை யுத்தம் உருவாவதற்கு காரணமல்ல. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருந்தது. வடக்கு கிழக்குக்கு வெளியே நிர்வாக மொழியாக சிங்களம் இருப்பதால் தமிழ் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவது போன்று வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலை புலிகளின் குடும்பத்திலிருந்த அனைவரும் யுத்தத்தில் ஈடுப்பட்டனர். உதாரணமாக தந்தை ஆயுதம் தூக்கினால் அந்த குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் அதற்கு உதவினார்கள்.
இதேபோன்று தான் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோரின் குடும்ப வாழ்க்கையும் இருந்தது.
யுத்தத்தின் கடைசி மூன்று நாட்களுக்கு முன்னர் விடுதலை புலி உறுப்பினர்கள் எக்காரணங்கொண்டும் சிங்கள இராணுவத்திடம் சரணைடைய கூடாது. அதற்கு பதிலாக சயனைட் அருந்தும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதனாலேயே இறுதிக்கட்ட யுத்தத்தில் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள்.
1983 ஜூலை கலவரத்தினையடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சிங்கள மாணவர்கள் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றப்பட்டனர். இதனால் அங்கிருந்த சிங்கள பீடம் மூடப்பட்டது. இதன் பிற்பாடு சிங்கள மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பேராதனை, மொறட்டுவ, ஸ்ரீஜெயவர்தனபுர உட்பட நாட்டின் அனைத்து பல்கலைகழகங்களிலும் சிங்கள மாணவர்களுடன் ஒற்றுமையாக தமிழ் மாணவர்கள் கல்வி கற்றும் சந்தர்ப்பத்தில் ஏன் சிங்கள மாணவர்கள் - தமிழ் மாணவர்களுடன் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியாது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
0 comments :
Post a Comment