Tuesday, January 4, 2011

பீகார் மாநில எம்எல்ஏ குத்தி கொலை. மனுக்கொடுக்கச் சென்ற பெண்ணின் கைவரிசை.

பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் கேசரி (வயது51). இவர் பூர்னியாவில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைகேட்டார். ஏராளமானோர் கியூவில் நின்று மனு கொடுத்தனர். அவர்களிடம் ராஜ் கிஷோர் மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது ரூபம் பதக் என்ற பெண்ணும் பார்வையாளர் போல் நின்றிருந்தார். அவர் எம்.எல்.ஏ. அருகில் வந்ததும் திடீர் என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எம்.எல்.ஏ.வின் விலா பகுதியில் குத்தினார். இதில் எம்.எல்.ஏ. ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். அங்கு கூடியிருந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

ஆதரவாளர்கள் தாக்கியதில் அந்தப் பெண்ணும் படுகாயம் அடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எம்.எல்.ஏ.வை குத்திக்கொன்ற ரூபம் பதக் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

அவரை எம்.எல்.ஏ. தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 3 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் கேசரி மீது ரூபம்பதக் 6 மாதத்துக்கு முன் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது கற்பழிப்பு புகார் கூறப்படுவதாக எம்.எல்.ஏ. கூறி வந்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பூர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்- மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டார்.

அப்போது எம்.எல்.ஏ. மீதான கற்பழிப்பு புகார் குறித்து நிதிஷ்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ. மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் பின்னணி காரணமாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியை பார்வையாளர் போல் வந்து எம்.எல்.ஏ.வை தீர்த்து கட்டிவிட்டார்.

ஏற்கனவே ராஜ்கிஷோர் கேசரி மீது 2008-ல் ஒரு பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால் புகாரில் உண்மை இல்லை என்று போலீசார் வழக்கை கைவிட்டனர். கொலை செய்யப்பட்ட ராஜ்கிஷோர் கேசரி பூர்னியா தொகுதியில் இருந்து பாரதீய ஜனதா சார்பில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட தகவல் கேட்டதும் முதல்- மந்திரி நிதிஷ் குமார் அதிர்ச்சி அடைந்தார். எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது ஆதரவாளர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கொலையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முதல்- மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ.வின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துணை முதல்- மந்திரி சுஷில்குமார் மோடி பூர்னியா நகருக்கு விரைந்துள்ளார். எம்.எல்.ஏ. கொலை குறித்து முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில பாரதீய ஜனதா தலைவர் சி.பி. தாகூர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com