சிறையிலிருந்து புத்தாண்டு வாழ்துச் சொல்லும் முன்னாள் இராணுவத் தளபதி.
இராணுவக் குற்றவியல் நீதிமன்றின் பரிந்துரையின்பேரில் நாட்டின் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு சிறையிலிருந்தவாறு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அச்செய்தியில் அவர் தனது விடுதலைக்காக மக்களின் உதவியையும் நாடியுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில் 2010 ம் ஆண்டு பிறந்தபோது, 2011 பிறக்கையில் இந்நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு வன்செயல்கள் , மோசடிகள் ஒழிக்கப்பட்டதோர் சிறந்த நாடாக உலகப்பதந்தில் இலங்கை மிளிரும் என நான் கனவு கண்டிருந்தேன். ஆனால் எனது கனவு நிறைவேறும் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இன்று கிடையாது.
இந்த புத்தாண்டு மலரும்போது நான் சிறை கூண்டினுள் இருந்துகொண்டு, இன்றைய ஆட்சியாளர்களினால் மக்களுக்கு எந்த நல்வாழ்வும் கிடைக்கப்போவதில்லை என தெரிந்திருந்தும் சம்பிரதாயத்தின் நிமிர்த்தம் உங்களை வாழ்த்துக்கின்றேன என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்நாட்டின் பயங்கரவாத அரசாங்கத்திடமிருந்து மக்களை காப்பாற்றும் ஒரே நோக்கில் அரசியலில் குதித்த ஒரே ஒரு குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்டுள்ள என்னை மக்களாகிய நீங்களே காப்பற்றவேண்டும் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளார். ஏனது சுதந்திரத்தை பெறுவதற்கு உதவுங்கள் என இரந்து வேண்டியுள்ள அவர், நீங்கள் என்னை விடுவிப்பதற்காக மேற்கொள்ளும் பூசைகள், ஆர்பாட்டங்கள், மறியல்போராட்டங்கள், மனுக்கள் என்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.
பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாட்டின் இன்றைய பயணத்தை தடுத்து நிறுத்துவதற்காகப் பாடுபடும் அனைவருக்கும் தன்னைப் போல் சிறைவாசம் தான் கிட்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
ஆயினும் அழகானதொரு நாட்டை, நல்லிணக்கம் கொண்ட சமூகமொன்றை கட்டியெழுப்புவதாயின் அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தை நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment