உலகின் மிக இளம் யோகா கலை பயிற்றுநராக விளங்கும் 6 வயது சிறுமி.
ஸ்ருதி பாண்டே எனும் ஆறு வயது சிறுமி உலகின் மிக இளமையான யோகா கலை பயிற்றுநராக விளங்குகின்றார். இவ்வளவு சிறிய வயதில் அவர் யோகா கலையை பயிற்றுவிப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உடலை வளைப்பதில் திறமைமிக்க ஸ்ருதி பாண்டே, வட இந்தியாவில் உள்ள ஆச்சிரமம் ஒன்றில் கடந்த இரண்டு வருடங்களாக தன்னைவிட பெரியவர்கள் பலருக்கு யோகா கலையை பயிற்றுவித்து வருகிறார்.
அவருடைய பயிற்றுவிப்பாளரான ஹரி சேட்டன் (வயது 67), 35 வருடங்களுக்கு முன்பு இந்த ஆச்சிரமத்தை தோற்றுவித்தார். இந்த ஆச்சிரமத்தில் 4 வயதில் மாணவியாக வந்து சேர்ந்த ஸ்ருதியின் யோகா திறமையை ஹரி சேட்டன் கண்டுகொண்டார்.
தற்போது ஸ்ருதி, ஜுன்ஸி நகரிலுள்ள பிரமானந்தா சரஸ்வதி தாம் நிலையத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு வெள்ளை ஜீன்ஸ், சிவப்பு நிற சேட் அணிந்து யோகா கலை வகுப்பை ஆரம்பித்துவிடுகிறாள்.
அவளிடம் வர்த்தகர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், ஓய்வுபெற்றவர்கள் என 30 பேர் யோகா கலையை பயில்கின்றனர்.
'என்னுடைய அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றுவதை பார்த்து நான் சந்தோசப்படுகின்றேன். அவ்வேளையில் நான் உண்மையான ஓர் ஆசிரியர் போன்று உணர்கிறேன்' என ஸ்ருதி கூறுகிறார்.
'எனது சகோதரன் யோகா செய்வதை பார்த்த பின்புதான் எனக்கும் இந்த கலை மீது ஆர்வம் வந்தது. அந்தக் கலைகளை நான் சுயமாக பயில்வதற்கு முயன்றேன். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது. எனவே நான் எனது பெற்றோரிடம் யோகா வகுப்பிற்கு என்னை அனுப்பும்படி கூறினேன்' என அவர் மேலும் குறிப்படுகின்றார்.
ஸ்ருதியின் சகோதரன் ஹார்ஸ் குமார் (வயது 11), தனது 5 ஆவது வயதில் 84 யோகா நிலைகளையும் பயின்று லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
'ஸ்ருதி ஓர் ஆச்சரியம' என்கிறார் அவரின் பயிற்றுநர் ஹரி சேட்டன்.
'அவள் வேகமாக கற்றுக்கொள்பவள். தனது வயதையொத்த ஏனையோரைவிட அவள் நுட்பங்களை விரைவாக கற்றுக்கொள்வாள். 6 மாதங்களுக்குள் அவள் கடினமான யோகா நிலைகளை செய்வதில் ஏனைய அனைவரையும் விஞ்சினாள்' என ஹரி சேட்டன் கூறுகிறார்.
90 வயதுடைய ஓய்வுப்பெற்ற ஆசிரியரான சுவாமி பானு என்பவர் ஸ்ருதியின் அபிமானியாக உள்ளார். ஸ்ருதி குறித்து அவர் குறிப்பிடுகையில் 'ஸ்ருதியின் சிறந்த விடயம் என்னவென்றால் என்னைப் போல் வயதானவர்கள் செய்ய முடியாத யோகா நிலைகளுக்குப் பதிலாக மாற்று நிலையொன்றை வழங்க முயற்சிப்பதுதான். அவள் மிகவும் பொறுமையானவள்' எனக் கூறியுள்ளார்.
ஸ்ருதியின் யோகா வகுப்பில் கடந்த 03 மாதங்களாக யோகா கலை பயின்று வரும் தொழிலதிபரான லோகேந்திரா போல் சிங் (வயது 48) கருத்துத் தெரிவிக்கையில், 'நான் எனது வாழ்க்கையில் சாதகமான பல மாற்றங்கள் நிகழ்வதை காண்கின்றேன். நான் முன்பு அதிகமாக கோபப்படுபவனாக இருந்தேன். ஆனால், தற்போது எனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடிகிறது. நான் அமைதியானவனாக மாறிவிட்டேன். இவை அனைத்துக்கும் நான் ஸ்ருதிக்கே நன்றிக் கூறவேண்டும்' என்கிறார்.
0 comments :
Post a Comment