Thursday, January 13, 2011

வெள்ளம், நிலச்சரிவுக்கு பிரேசிலில் 350 பேர் பலி!

பிரேசில் நாட்டின் மலைப் பகுதியில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு 350 பேர் பரிதாபமாக பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ளது டெரசோபோலிஸ் என்ற நகரம். தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இருக்கும் அது மலைப்பாங்கான இடம்.

அங்கு ஆண்டுதோறும் கனமழையால் மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் பாய்வதும், நிலச்சரிவுகள் ஏற்படுவதும் வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் 26 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால், மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு செம்மண் கலந்த வெள்ளம் தரையை நோக்கி பாய்ந்தது. மலையில் மரச் சட்டங்கள், பிளைவுட் ஆகியவற்றை பயன்படுத்தி அஸ்திவாரமின்றி வீடு கட்டி ஆயிரக்கணக்கானோர் வசித்து வந்தனர்.

திடீர் வெள்ளம் மற்றும் செம்மண் ஆற்றால் வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் வேரோடு பெயர்ந்து வெள்ளத்தில் மிதந்தன. இந்த இயற்கை பேரழிவில் சிக்கி 350 பேர் பலியாகி விட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. மீட்புப் படையினர் அங்கு போர்க்கால அடிப்படையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை நின்றதால் நேற்று வெள்ளம் குறைந்தும் நிலச்சரிவு, சகதி காரணமாக மண்ணில் புதைந்தவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. சகதி மற்றும் பூமிக்கடியில் உயிருடன் யாராவது இருக்கிறார்களா என படையினர் கைகளாலும், மண்வெட்டிகளாலும் தோண்டிப் பார்த்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com