சீனாவில் 258 நகரங்களில் அமில மழை. புத்தர் சிலையின் மூக்கு கறுப்பாகியது.
சீனா தனது அபரிமிதமான பொருளாதார முன்னேற்றத்திற்கு, மிக அதிகமான விலை கொடுத்திருக்கிறது. ஆம்., அதன் 258 நகரங்களில், அமில மழை பெய்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி எரிவதால், சல்பர் டையாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் வெளியேறும். இவை காற்றில் கலக்கும் போது மழை பொழிந்தால், நீரோடு சேர்ந்து சல்ப்யூரிக் மற்றும் நைட்ரிக் அமிலங்களாக மாறும். உலகளவில் நிலக்கரியை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முக்கிய இடம் வகிக்கிறது. சீனாவில் ஆண்டுதோறும், 300 கோடி டன் நிலக்கரி பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், உலகில் அதிகளவில் அமில மழை பெய்யும் பகுதிகளில் சீனா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2005ன் அறிக்கை ஒன்று, நாட்டின் 28 சதவீத பகுதிகள் குறிப்பாக, யாங்க்ட்ஸி ஆற்றுப் பகுதி மிக மோசமாக அமில மழையால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. நாட்டின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளான செங்டு, சோங்கிங், பான்-பெய்பு வளைகுடா பொருளாதார மண்டலப் பகுதிகள் ஆகியவற்றில், அமில மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகள் தான், நாட்டின் அடுத்த தலைமுறை பொருளாதார மையங்களாகக் கருதப்படுகின்றன.
இந்நிலையில் சமீபத்தில், ப்யூஜியான் மாகாணத்தின் ஷியாமென் நகரில் நடந்த ஓர் ஆய்வு, அதிர்ச்சியான தகவல்களை அளித்துள்ளது. கடந்த 2010ன் முன்பகுதி மழைக்காலங்களில் ஒவ்வொரு துளியிலும் அமிலம் கலந்திருந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. கட்டடங்களில் படிந்த இந்த அமிலத் துளிகள், துருப்பிடித்தது போல காணப்படுகின்றன. அங்குள்ள பாறைப் பிளவில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தர் சிலையின் மீதும் இந்த அமில மழைத் துளிகள் விழுந்ததால், அதன் மூக்கு கறுப்பாகி விட்டது. சிலையின் தலைமுடியில் உள்ள சுருண்ட பகுதிகள் கீழே விழுந்து விட்டன. இதுவரை செந்நிறமாக இருந்த அந்த சிலை, தற்போது சாம்பல் நிறமாக மாறி வருகிறது. கடந்த 2009ல் சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய ஆய்வில், இந்த அமில மழையால், சீனாவின் 258 நகரங்களும் பகுதிகளும் பாதிக்கப்பட்டது தெரிந்தது.
0 comments :
Post a Comment