சோமாலிய கடல் கொள்ளையரால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி இழப்பு.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் உலக நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. ஆப்ரிக்க நாடான சோமாலியா, உலகின் மிக ஏழை நாடாக இருக்கிறது. பல கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் கடல் வழி போக்குவரத்து பாதை அருகே சோமாலியா உள்ளதால், அதைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் அதிகரித்து வருகின்றனர். தங்கள் கடல் பகுதி வழியாக கடந்து செல்லும் கப்பல்களை படகுகளில் சென்று துப்பாக்கி முனையில் சிறைபிடித்து, கொள்ளை அடிக்கின்றனர்.
கப்பல்களை சிறைபிடித்து அவற்றின் உரிமையாளர்கள், நாடுகளிடம் இருந்து பணயத் தொகையை பறிக்கின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோமாலிய கடற் கொள்ளையர்களால் உலக நாடுகளுக்கு ஏற்படும் இழப்பு பற்றி அமெரிக்காவை சேர்ந்த ஒன் எர்த் ப்யூச்சர் பவுண்டேஷன் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில் வெளியான தகவல்கள் வருமாறு:
சோமாலிய கடற் கொள்ளையர்கள் ஏகே 47 ரக துப்பாக்கி உட்பட அதிநவீன ஆயுதங்களுடன் கப்பல்களை சிறை பிடிக்கின்றனர். எண்ணெய் கப்பல்களை பிடித்து, கச்சா எண்ணெயை சோமாலியாவுக்கு திருப்புகின்றனர். விலை உயர்ந்த பாய்மரப் படகுகளையும் தங்கள் வசப்படுத்திக் கொள்கின்றனர்.
இதை தடுக்க சோமாலிய கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க சர்வதேச ரோந்து கப்பல்கள் பணியில் ஈடுபடுகின்றன. எனினும், கொள்ளையை முற்றிலும் தடுக்க முடிவதில்லை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகளின் படைகள் ரோந்து சுற்றி வருகின்றன.
2006ம் ஆண்டு முதல் இதுவரை 1,600 கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. சோமாலிய கொள்ளையரால் உலக நாடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.
0 comments :
Post a Comment