இலங்கை விடயத்தில் ஐ.நா. விடம் பிற்போக்கான செயற்பாடு தொடர்கிறது.
இலங்கை தொடர்பான விடயத்தில் ஐ.நா. சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்வதாக ஐ.நா. செயல்படுகள் குறித்த செய்திகளை வெளியிடும் இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாற்றியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கை செல்லும் என கடந்த 17 ஆம் தேதி ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் அறிவித்தார்.
ஆனால் கடந்த 23 ம் தேதி இந்த குழு இலங்கைக்கு செல்வது குறித்த திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிட்டி பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐ.நா. சபையில் நாள்தோறும் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று பிற்பகல் நடைபெறவிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஐ.நா. நிபுணர்கள் குழு மேற்கொள்ளவுள்ள இலங்கை பயணம் தொடர்பாக இன்னர்சிட்டி பிரஸ் பல கேள்விகளை எழுப்புவதாக இருந்தது.
ஆனால் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால், அதற்கான விளக்கத்தை கோரி, இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக்கிற்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும், நிபுணர்கள் குழுவின் இலங்கை பயணம் தொடர்பான விளக்கம் ஆகியவை குறித்து அந்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கு, இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், நாளை செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என்றும் வெறும் நான்கே வார்த்தைகளில் பர்ஹான் ஹக் பதில் வழங்கியதாகவும், இலங்கை தொடர்பான விடயத்தில் ஐ.நா. சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்வதாகவும் இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாற்றியுள்ளது.
0 comments :
Post a Comment