கே.பி யும் பிரபாகரனைப் போன்றதோர் மிலேச்சத்தனமான பயங்கரவாதியே. Dr ஜெயலத்.
புலிகளியக்கத்தின் அனுமானி என சிங்கள அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா, அவர் மீது புலிச்சாயம் பூசும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்துள்ளதுடன் புலிகள் பயங்கரவாதிகள் எனவும் தான் அப்பாவி மக்களின் காவலனாகவே செயற்பட்டதாகவும் தொடர்ந்தும் செயற்பட தயாராகவுள்ளதாகவும் அததெரணவிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் புலிகளின் தாக்குதல்கள் பலவற்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகவும், ஏறாவூர் பிரதேச முஸ்லிம் மக்களுக்கு மருத்துவ உதவி செய்யச் சென்றபோது புலிகள் தாக்குதல் தொடுத்துள்ளதாவும், ஜனாதிபதி சந்திரிகாவின் இரண்டாவது தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்க சார்பாக கம்பஹா மாவட்ட பிரதான தேர்தல் பிரச்சார அமைப்பாளராக பாரிய பேரணி ஒன்றை தான் ஒழுங்கு செய்திருந்தபோது அப்பேரணியை புலிகள் தற்கொலைதாரிகள் கொண்டு தாக்கியதாகவும் அதில் தனது மெய்பாதுகாவலர்கள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேஜர் ஜெனரல் லக்கி அல்கம ஆகியோர் உயிரிழந்தமையை குறிப்பிட்ட அவர், தான் புலிகளின் ஆதரவாளனாக அல்லது உறவுகளை கொண்டவனாக இருந்திருந்தால் புலிகள் ஏன் தனது பேரணிமீது தாக்குதல் மேற்கொள்ளவேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
புலிகளியக்கம் பாரியதோர் நாசகார பயங்கரவாத அமைப்பு எனவும் அவ்வமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதில் தான் திருப்தி அடைவதாகவும், பிரபாகரனைப் போன்றதோர் மிலேச்சத்தனமான பயங்கரவாதியே கே.பி எனவும் அவருக்கு எதிராக இதுவரை அரசாங்கம் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யாமை அதிருப்தி அளிப்பதாகவும், இவ்விடயம் தொடர்பாக சர்வதேச மனிதஉரிமை ஸ்தாபனங்களுக்கு தான் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டினை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டவர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவே எனவும் , அவரே புலிகளின் முதலாவது இலக்காகவும் எதிரியாகவும் இருந்தவர் எனக் குறிப்பிட்ட ஜெயலத், ஜெனரல் பொன்சேகா அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஜெனரல் பொன்சேகாவினை மீட்பதற்காக உலகிலுள்ள மனித உரிமை அமைப்புக்கள் யாவற்றையும் நாடிவரும் என்னை எவ்வாறு புலிகளின் ஆதரவாளர் எனக் கூறமுடியும்? ஜெனரல் பொன்சேகாவை காப்பாற்ற முனையும் என்னுடன் புலிகள் தொடர்புகளை வைத்துக்கொள்ள முயல்வார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment