தமிழர்கள் வந்தேறு குடிகளேயன்றி.. காலம் காலமாக வாழ்ந்தவர்கள் அல்லர். சோபித தேரர்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழு முன்னிலையில் சாட்சியமளித்த ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவரும், ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் “ தமிழர்கள் வந்தேறு குடிகளேயன்றி இங்கு காலம் காலமாக வாழ்ந்தவர்கள் அல்லர் எனவும் , வடக்கு,கிழக்கு தமிழரின் தாயகம் அல்ல, அவர்கள் வந்தேறு குடிகளே. தமிழர்கள் சிறிலங்காவில் வாழலாமே தவிர, ஆட்சி செய்யும் அதிகாரம் அவர்களுக்கு கிடையாது.“ எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
“ இப்போது சிங்கள அரசியல்வாதிகள் யாரும் தமிழர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கூடப் பேசுவதில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளே சிங்களவர்களுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
வடக்கு, கிழக்கில் வாழ்ந்த பெருமளவு சிங்களவர்கள் பயங்கரவாதத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டனர். வெளிநாட்டவர்களும், தமிழ்,சிங்கள அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீள்குடியேற்ற வேண்டும், அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்றே குரல் எழுப்புகின்றனர். ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் புலிகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர்கள் தான். சிங்களவர்களை மீள்குடியேற்ற வேண்டும். புனர்வாழ்வளிக்க வேண்டும் என்று சிங்கள அரசியல்வாதிகள் கூடச் சிந்திக்கவில்லை.
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 42 ஆயிரம் சிங்களவர்கள் நிரந்தமாக வாழ்ந்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. இவர்கள் மீண்டும் வடக்கில் குடியேறுவதற்கு சகல உரிமைகளும் உள்ளன.
பதினேழு இலட்சம் மக்கள் வாழும் கொழும்பு மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு 32 பாடசாலைகளே உள்ளன. ஆனால் ஐந்து இலட்சம் மக்கள் வாழுகின்ற யாழ்ப்பாண மாவட்டத்தில் க.பொ.த. உயர்தரம் கற்பதற்கு 33 பாடசாலைகள் இருக்கின்றன.
நாட்டில் இடம்பெற்ற அனைத்து அநீதிகளுக்கும் பிரபாகரனின் பயங்கரவாதமே காரணம். இங்கு ஏதாவது போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அது பிரபாகரனாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் இணைந்து வாழலாம். ஆனால் எந்தப் பிரதேசத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரம் தமிழர்களுக்குக் கிடையாது. முழு நாட்டையும் ஆண்டவர்கள் சிங்களவர்கள் தான். அதற்கான ஆதாரங்களும், வரலாற்றுச் சான்றுகளும் நிறையவே உள்ளன.
வடமுனை தொடக்கம் தென்கரை வரை ஆட்சி செய்தவர்கள் சிங்களவர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தும் கல்வெட்டுக்கள் உள்ளன. இலங்கை ஒரு சிறிய நாடு. இதில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வோம். இது தான் எமது கொள்கை. இந்த நாட்டை இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ துண்டுபோட முடியாது. அதற்கு இடமளிக்கவும் மாட்டோம். இப்படி நாம் கூறினால் எம்மை இனவாதிகள் என்று விமர்சிக்கின்றனர்.
நாங்கள் தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ விரோதமானவர்கள் அல்ல. சிங்களவரோ தமிழரோ அல்லது முஸ்லிமோ பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கே நாம் எதிரானவர்கள்.
சிங்களவர்கள் எப்போதும் தமிழர்களுடனோ, முஸ்லிம்களுடனோ சண்டையிடவில்லை. ஏனைய மதங்களை நிந்திக்கவில்லை. பிறமத வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் இல்லை.
இலங்கையை ஆண்ட பாராக்கிரமபாகு, பர்மாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் எதிராகப் போரிட்டு, எமது நாட்டின் மீது மேற்கொள்ள முயன்ற ஆக்கிரமிப்பை முறியடித்தார்.
பிரபாகரன் சிறிதும் மனிதாபிமானற்ற முறையில் மாவிலாறு அணையை மூடி அப்பாவிகளான 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைப் பட்டினி போட்டார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சமாதான வழியில் தீர்வு காணவே முயன்றார். ஆனால் பிரபாகரன் அதனை ஏற்கவில்லை. மாவிலாறு அணை மூடப்பட்டதால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்கும் மனிதாபிமானப் போராட்டத்தை ஆரம்பித்த சிறிலங்கா அதிபர் முழு நாட்டையுமே பிரபாகரனின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டு அனைவருக்கும் விடுதலை பெற்றுக் கொடுத்தார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழர்களை அழிக்கவில்லை. பயங்கரவாதத்தையே அழித்துள்ளார். எந்த ஒரு வெளிநாட்டுச் சக்திக்குமே சிறிலங்கா அதிபரின் செயற்பாட்டை விமர்சிக்கும் அருகதை கிடையாது.
சிறிலங்காவை 2500 வருடங்களுக்கு மேலாக 186 சிங்கள மன்னர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இதற்கான கல்வெட்டுகளும் சான்றுகளும் இருக்கின்றன. இங்கு தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் என்று கூறுவது வெறும் கட்டுக்கதை. இதில் எந்த ஒரு உண்மையும் கிடையாது.
அவர்கள் கூறுவது போல் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்திருந்தால் அவர்கள் எந்த ஒரு குளத்தையோ, வாவியையோ அல்லது அணைக்கட்டையோ கட்டியிருக்கின்றனரா? இல்லவே இல்லை.
வன்னி என்பது ஒரு சிங்கள சொல். முன்னர் ஒரு காலத்தில் இது காடாக இருந்தது. இந்தப் பகுதியை சிங்கள மன்னர்கள் தான் புனரமைத்தனர். நல்லூரில் கோவிலைக் கட்டியது கூட சப்புமல்குமாரய என்ற பராக்கிரமபாகுவின் பிரதிநிதியான சிங்களவர் தான்.
இந்தியாவிலிருந்து வந்த கலிங்க மன்னரின் படையெடுப்பை முறியடித்து வெற்றி கொண்டதை நினைவு கூரும் வகையிலேயே நல்லூர் கோவில் கட்டப்பட்டது.
கலிங்க மன்னருடன் வந்த கேரள படைவீரர்கள் பலர் இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தான் பின்னர் தமிழர்கள் ஆனார்கள். ஆனால் இவர்கள் தமிழர்கள் இல்லை. வந்தேறு குடிகளேயன்றி காலம் காலமாக வாழ்ந்தவர்கள் அல்ல. தமிழ் மொழி இங்கே இருந்தது என்றும் கூற முடியாது.
எந்தவொரு சிங்களவரும் பிற மத வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிராகச் சண்டை செய்யவும் இல்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் பௌத்தர்களின் பாரம்பரிய விகாரைகள், தூபிகள் தமிழர்களால் அழிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
கட்டிய கோவில்கள் இடிக்கப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை.அவை அப்படியே இருக்கட்டும். சிங்களவர்களின் புராதன இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நான் 1950களில் புதைபொருள் ஆய்வுக்காக அங்கு சென்று பல விவரங்களைத் திரட்டியுள்ளேன். வடக்கு,கிழக்கில் 1583 வாவிகளும்,1083 கிராமங்களும், 1583 பௌத்த விகாரைகளும் இருந்தன. அவற்றைத் திரட்டி ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
ஒவ்வொரு வாவிகளதும், கால்வாய்களினதும் தொடக்க இடத்தில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டன. ஆனால் அவை இப்போது அழிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் புனரமைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் தொடக்கம் மாத்தறை வரை 'தத்த' என்ற பெயர் கொண்ட இனத்தவர்கள் இருந்தனர். இவர்கள் சிங்களவர் என்பதற்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.
காங்கேசன்துறைத் துறைமுகம் கூட முதலாவது பராக்கிரமபாகு மன்னரால் ஸ்தாபிக்கப்பட்டது. அங்கு காணப்படும் கல்வெட்டுகள் இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன. வர்த்தக ரீதியான கட்டளைகளும், சட்டங்களும் அறிவிப்புகளும் அங்கு கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து தமிழர்கள் வியாபார நோக்கமாக இங்கு வந்தனர். இவர்களின் மொழி தமிழ். இவர்கள் இந்த அறிவிப்புகளைத் தெரிந்து கொள்வதற்காகத் தான் தமிழிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இதுதான் உண்மை". என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment