கருணா முழுப்பூசணிக்காயை சோற்றினுள் புதைக்கின்றார். முன்னாள் பொலிஸ் அதிகாரி.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இன நல்லிணக்க ஆணைக்குழு முன் கருணா சாட்சியமளிக்கையில் கிழக்கில் 600 பொலிஸார் கொல்லப்பட்டபோது தான் யாழ்பாணத்தில் இருந்ததாக கூறுவது முழுபூசணிக்காயை சோற்றினுள் புதைக்கும் பொய் எனவும் கிழக்கு மாகாணத்தில் 600 க்கு மேற்பட்ட பொலிஸாரை கொல்லூமாறு புலிக்கொலைஞர்களுக்கு கருணாவே நேரடியாக உத்தரவிட்டதாகவும், சம்பவத்திற்கு கருணா கிழக்கிலிருந்து நேரடியாக உத்தரவிட்டதாகவும் அச்சந்தர்ப்பத்தில் பொத்துவில் சியம்பலாண்டுவ வீதியிலிருந்த பொலிஸ் காவல் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு நீதிமன்றிலோ அன்றில் விசாரணைக்குழு முன்போ சாட்சியமளிக்க தான் தயாராகவுள்ளதாக லங்காஈநியூஸ் இணையத்தளத்திற்கு அஜித் தர்மபால அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் ,
அப்போது இலங்கையின் பொலிஸ் மா அதிபராக பிராங் சில்வா அவர்களும் நாட்டின் ஜனாதிபதியாக ஆர் பிறேமதாஸ அவர்களும் இருந்தனர். 1990 ஜூன் மாதம் 10 ம் திகதி அன்று புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான புரிந்துணர்வு இருந்த காலம் அது. திடீரென பொலிஸ் நிலையங்கள் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது. ஆயுதங்களை கீழே வைத்து விட்டு எம்மை பொலிஸ் நிலையங்களை விட்டு வெளியேறுமாறு புலிகள் பணித்தனர்.
அப்போது நான் பொத்துவிலுக்கும் சியம்பலாண்டுவவுக்கும் இடையேயுள்ள மகா கழுபொல எனுமிடத்திலமைந்திருந்த பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியாக இருந்தேன். எனது பொலிஸ் நிலையத்திற்கு பொத்துவில் பொலிஸ் நிலையத்திலிந்து ஆணைகள் பிறப்பிக்கப்படும். பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் ஹோகன்ன இருந்தார்.
நாம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தபோது அரசு புலிளுடன் பேச்சுவார்த்தை நாடாத்தியது. முடிவில் பொலிஸ் மா அதிபர் ஹெலிகொப்ரர் ஒன்றில் கிழக்கு பிரதேசத்தில் பறந்தவாறு மோட்டோரோலா தொலைத்தொடர்பு கருவிகளுடாக எம்மை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு புலிகளின் பஸ் வண்டிகளில் ஏறி அம்பாறை நகரத்திற்கு வருமாறும் அங்கிருந்து வேறு பஸ் வண்டிகளில் நாம் எமது வீடுகளில் அனுப்பி வைக்கப்படுவோம் என எமக்கு தெரியப்படுத்தினார். அவரது செய்தியை நான் எனது காதுகளுடாக மோட்டோரோலா கருவியில் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது பொலிஸாருக்கான மோட்டோரோலா கருவியூடாக பேசிய கருணா பொலிஸ் நிலையங்களில் வெள்ளைக்கொடிகளை ஏற்றிவிட்டு ஆயுதங்கள் யாவற்றையும் கீழே வைத்துவிட்டு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பஸ் வண்டிகளில் ஏறுமாறு கூறினார். இவற்றை அவர் அரை குறை சிங்களத்திலும் தமிழ் கலந்து பேசினார். அவருடைய அந்த உத்தரவை பிறிதொருவர் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது குறிப்பிட்ட பஸ் வண்டிகளில் ஏறும் பொலிஸாரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டதுடன் அவர்களை புலிகளின் பிரதேச பொறுப்பாளர்கள் அம்பாறை நகரத்திற்கு கொண்டு செல்வர் எனவும் அங்கிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்லலாம் எனவும் கருணா தெரிவித்தார்:
பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி எனக்கு நேரடி உத்தரவு வழங்கும் அதிகாரியாவும் சிறந்த நண்பனாகவும் இருந்த அவர் எமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு புலிகளின் பஸ் வண்டிகளில் ஏறுமாறு உத்தரவிட்டார். நான் ஏனைய உத்தியோகித்தர்களுடன் பேசிவிட்டு நாம் சரணடைவதில்லை எனவும் இறுதிவரை போராடுவது எனவும் முடிவு செய்தோம். அம்முடிவை நான் இன்ஸ்பெக்டர் ஹோன்னவிற்கு தெரிவித்தபோது அவர் என்னை தூஷணத்தில் பேசினார். ஆனாலும் நாம் எமது முடிவிலிருந்து பின்வாங்காமல் பிரதேச மக்களை ஒன்று திரட்டி அவர்களின் பாதுகாப்புடன் ஆயுதங்களை கீழே போடுவதில்லை என்ற முடிவில் இருந்தோம்.
ஹோகன்ன பொத்துவில் பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் புலிகளின் பஸ்களில் ஏற்றி திருக்கோயில் வீதி வழியாக புலிகளுடன் அனுப்பி விட்டு அவர் தனது வோல்ஸ்வகன் காரில் சியம்பலாண்டுவ பாதை வழியாக கொழும்பு சென்றார். திருக்கோயில் வழியாக புலிகளுடன் அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் கல்குடா பழைய பொலிஸ் நிலையம் மற்றும் கல்குடா ஜெற்றியில் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைக்கு கருணா நேரடி உத்தரவை வழங்கியிருந்தார். எவ்வாறு இன்று கருணா இதை மறைக்க முடியும்?
மேற்படி பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக எனது அபிப்பிராயம் யாதெனில் இதற்கு கருணா மாத்திரம் பொறுப்பு அல்ல எமக்கு சரணடையுமாறு உத்தரவிட்ட பொலிஸ் மா அதிபர் பிராங் சில்வாவும் , பிராங் சில்வாவிற்கு உத்தரவிட்ட முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸ ஆகியோரும் பொறுப்பாளிகள் ஆகும்.
இதற்கும் அப்பால் 11-05-1997 ம் ஆண்டு மொறவவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரும் பொதுமக்களும் கொலை செய்யப்பட்டமைக்கும் கருணாவே பொறுப்பாளியாகும். சம்பவ இடத்திலிருந்து 75 மீற்றர் தொலைவில் நின்று கருணா கொலையாளிகளுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்தற்கான ஆதாரங்கள் என்னிடம் உண்டு.
இவ்விடயங்கள் தொடர்பாக பீ அறிக்கையினூடாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் நிலுவையில் உள்ளபோது இன்று கருணா மிகவும் சுதந்திரமாகவும் அரசாங்கத்தில் பலம்பொருந்திய நபராகவும் இருப்பதை காணும்போது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்
2 comments :
விடுதலைப் புலிகள் செய்த நம்பிக்கை துரோககமான, கோழைத்தனமான கொலைகள் என்று நீண்ட பட்டியல் உண்டு.
அவற்றிக்கான தண்டனைகளை அனுபவித்துவிட்டார்கள் எனினும் ஒரு சிலர் மிஞ்சியுளார்கள்.
அவர்கள் தப்பிவிட முடியாது.
விடுதலைப் புலிகள் செய்த நம்பிக்கை துரோககமான கொலைகள், கோழைத்தனமான கொலைகள் என்று நீண்ட பட்டியல் உண்டு.
அவற்றிக்கான தண்டனைகளை அனுபவித்துவிட்டார்கள் எனினும் ஒரு சிலர் மிஞ்சியுளார்கள்.
அவர்களும் தப்பிவிட முடியாது.
வன்னி மக்கள்
Post a Comment