விபச்சாராம், கொள்ளை, கப்பம் : விக்கிலீக்ஸ் கசிவுகளுக்கு கருணா , டக்ளஸ் மறுப்பு
இலங்கையில் போர் நடந்துக்கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடும் கருணா, டக்ளஸ் குழுக்களை 'தடுக்க வேண்டாம்' என்று இராணுவத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதரம் வாஷிங்டனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்களிலிருந்து தெரியவருகின்றது.
விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. தூதரகத்தின் நம்பிக்கைக்குரிய தொடர்புகளை மேற்கோள் காட்டி, தூதரக அதிகாரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கும் தகவல்களின்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு, குடும்பத்திற்கு ஒருவரை தமது படையணியில் கட்டாயப்படுத்தி சேர்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலைக்கு சென்ற தங்களின் பிள்ளைகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து, ஆயுதம் ஏந்த வைக்க மறுக்கும் குடும்பத்தவரை விடுதலைப்புலிகள் மிரட்டியதாகவும் இந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரம் இந்த அறிக்கையை அனுப்பிவைத்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (டக்ளஸ்), கருணா ஆகிய குழுக்கள் தமிழ் வணிகர்களிடம் பணம் பெறுவதற்கு அமெரிக்க குடியுரிமையினை கொண்டுள்ள, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்பய ராஜபக்ச, அனுமதியளித்துள்ளார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டக்ளஸ், கருணா குழுக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த அனுமதியே நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு, குறிப்பாக மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல் ஆகியவற்றிற்கு வழிவகுத்துள்ளது. இவ்விரு குழுக்களும் தமிழர்களைக் கொண்டது என்றாலும், இவர்களின் குற்றச்செயல்கள் யாவும் தமிழர்களுக்கு எதிராகவே இருக்கின்றன' என்று அமெரிக்கத் தூதரக அறிக்கை கூறுகிறது.
'இலங்கை இராணுவத்தினரால் செய்ய முடியாத சில செயல்களை இந்தக் குழுக்களால் மட்டுமே செய்ய முடியும், எனவே அவர்களைத் தடுக்காதீர்கள்' என்று கூறியே கோத்தபாய சிறிலங்கா இராணுவத்திற்கு இக்கட்டளையை பிறப்பித்ததாக அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
'போரினால் உள்நாட்டிலேயே அகதிகளாகி, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களை கருணா குழுவினர் கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனர். சிங்கள இராணுவ சிப்பாய்களுக்கு அவர்களை விருந்தாக்குகின்றனர். இப்படிப்பட்ட வற்புறுத்தலிற்கு உள்ளாகும் பெண்களுக்கு வேறு வழியில்லாததால் இதற்கெல்லாம் இணங்கிவருகின்றனர்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டில் (அப்போது போர் நடக்கவில்லை) கருணா, டக்ளஸ் குழுக்கள் செய்த குற்றச்செயல்களை சிறிலங்க அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததை பல்வேறு தலைப்புகளில் அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
1. தமிழர் ஒட்டுக்குழுக்களை (டக்ளஸ், கருணா குழுக்கள்) அவசியமானதாக ஏன் சிறிலங்க அரசு கருதுகிறது?
2. இக்குழுக்கள் செய்யும் குற்றச்செயல்களை தாங்கள் செய்யவில்லை என்று மறுப்பதற்கான ஒரு வாய்ப்பு சிறிலங்க அரசிற்கு கிடைக்கிறது.
3. இப்படிப்பட்ட ஒட்டுக்குழுக்களுக்கு சிறிலங்க அரசே தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறது.
4. இவ்விரு குழுக்களில் கருணா குழுவே இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பெரிய குழுவாக உள்ளது.
5. கருணா குழு செய்த கொலைகளும், கடத்தல்களும்
6. கருணா குழுவில் உள்ள சிறுவர் போராளிகள்
7. கருணா குழு நடத்திவரும் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் விபச்சார வளையங்கள்
8. கருணாவை அதிகாரப்பூர்வமான பிரதிநிதியாக்குவது
9. சிறிலங்க இராணுவத்துடன் இணைந்து டக்ளஸ் குழு செய்த படுகொலைகள்
என்று தலைப்பு இட்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிற்கு வெளியே நடந்த சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், கடத்தல்கள், சிறுவர்கள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், விபச்சாரம் ஆகிய அனைத்து மனித உரிமை மீறல்களையும் கருணா, டக்ளஸ் குழுக்களே செய்கின்றன. இவர்களுக்கு நிதியுதவி செய்வது சந்திரிகா குமாரதுங்கா காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. அந்த நிதியுதவியை நேரடியாகச் செய்வதை ராஜபக்ச அதிபரானது நிறுத்தினார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
சிறிலங்க அரசுடன் இணைந்து ஒட்டுக்குழுக்கள் செய்த குற்றச்செயல்களை தங்களுடைய உயிரை பணயம் வைத்து தூதர ஆட்கள் அறிந்து கூறியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேற்படி கசிவுகளை இலங்கை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான டக்ளஸ் கருணா ஆகியோ மறுத்துள்ளனர். தாங்கள் பணம் பறிப்பதிலோ ஆட்கடத்துவதிலோ ஈடுபடவில்லை என்று இருவருமே பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் மறுத்தனர்.
0 comments :
Post a Comment