Wednesday, December 22, 2010

விக்கிலீக்சு காரங்க பொய் சொல்றாங்க என்கிறார் பேர்ஆசியர் ஜீஎல் பீரிசு.

கொழும்பிலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து வெளியானாதாகக் கூறி விக்கிலீக்ஸ் இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள ராஜதந்திர தகவல் பறிமாற்றங்களில், இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை செய்தது, அல்லது அவ்வாறான நடவடிக்கைக்கு துணையாக இருந்தது என்கிற தகவல்களை இலங்கை அரசு மறுத்துள்ளதுடன் இலங்கை தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானது என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு கூறப்படும் பொய்கள் என்று கூறியுள்ள இலங்கை அரசு, இரகசியத் தகவல்கள் சட்டவிரோதமான முறையில் வெளியிடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பட்ரீஷியா புட்டனிஸை நேற்று சந்தித்து பேசிய போதே, கடந்த வியாழக்கிழமை விக்கிலீக்ஸ் இணையதளத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ள தகவல் பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறார்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள், சிறுவர்கள் முகாம்களில் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள், சிறுமிகள் பாலியல் வலையமைப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை, பேராசிரியர் பீரீஸ் இந்தக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு பரப்பபடும் பொய்யுரைகள் என்று வர்ணித்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர், இது தேவையற்ற ஒன்று எனவும், இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் செய்யப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

இந்த மாதத்தின் முற்பகுதியில் இரகசியத் தகவல்கள் சட்டவிரோதமான முறையில் வெளியாவதை அமெரிக்கா கடுமையாக கண்டித்திருந்தது.

இந்த ராஜாங்க தகவல் பறிமாற்றங்களில் இருக்கும் தகவல்கள் வெளிப்படையான மதிப்பீடுகளேயன்றி அவை அமெரிக்க அரசின் கொள்கைகளை பிரதிபலிக்கவில்லை என்று கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்தது.

இலங்கை தொடர்பாக கசிந்ததாகக் கூறப்படும் இந்தத் தகவல்கள் 2007 ஆம் ஆண்டு முதலானவை என்றும், அதில் இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த கண்டனங்கள் இருந்தன என்றும், அவை தூதரகத்திலிருக்கும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டன எனவும் விக்கிலீக்ஸ் கூறியிருந்தது என பிபிசி செய்திச் சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்று விக்கிலீக்ஸ் இலங்கை தொடர்பான மேலுமோர் விடயத்தை வெளியிட்டுள்ளது. அதில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்த சூனிய வலயத்தில் பணிபுரிந்த 5 வைத்திய அதிகாரிகள், அழுத்தங்களுடன், இலங்கை அரசினால் பயிற்றுவிக்கப்பட்ட கருத்துகளையே, 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஜேம்ஸ் மோர், ஐக்கிய அமெரிக்காவிற்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 24 ஆம் திகதியிடப்பட்டு வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி, யுத்தத்தின் முடிவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பில் வைத்திய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களை சுட்டிக்காட்டி குற்றப்புலனாய்வுத் துறையினர் அவர்களை விசாரணை செய்தனர்.

பின்பு அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அழுத்தங்களினால் பயிற்றுவிக்கப்பட்ட ஒருசில வார்த்தைகளையே இவர்கள் அன்று ஊடகங்களுக்கு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட நான்கு வைத்திய அதிகாரிகள் தற்போதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தற்போதும் கூட அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டாயப்படுத்தியதன் காரணமாகவே, பொதுமக்கள் யுத்தத்தின் போது அதிகளவில் கொல்லப்பட்டதாக தாம் சர்வதேச ஊடகங்களுக்கு தவறான கருத்துக்களை வெளியிட்டதாக குறித்த வைத்தியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி செய்தியினை அமெரிக்க தூதரகம் அதன் ராஜங்க அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது என நாம் எடுத்துக்கொண்டால் அமெரிக்க அதிகாரிகளின் புலனாய்வு மற்றும் பகுத்தாய்வு திறன் என்பது எவ்வாறானது என்பதை உணரக்கூடியதாகவுள்ளது. மேற்படி வைத்தியர்கள் ஏதோ மனித நேயம் கொண்டவர்கள் எனவும் அவர்கள் அழுத்தத்தின் பெயரால் எதோ கதை சொல்லியுள்ளார்கள் எனவும் அமெரிக்கா கருதுமானால் அதன் பகுத்தறிவு பற்றி பேசுவதற்கு ஏதும் இல்லை. மேற்படி வைத்தியர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் தமது லாபங்களுகாக புலிகளை பயன்படுத்தினார்கள் தற்போது அரசுடன் இணைந்து கொண்டு அதே வேலையை செய்கின்றார்கள் என்பதை உணர தகுதியற்ற அமெரிக்க ராஜதந்திரிகளின் செய்தியினை விக்கிலீக் வெளியிட்டுள்ளதும் வியப்புக்குரியதாகும்:


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com