செருப்பு, கூழ்முட்டை கொண்டு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் வாகனம் மீது தாக்குதல்.
பிரிட்டனில் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா பார்க்கர் சென்ற கார் மீது மாணவர்கள் செருப்பு, முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இத்தகைய தாக்குதலில் இறங்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இளவரசர் சார்லஸும், கமீலா பார்க்கரும் காயமின்றித் தப்பினர்.
இது குறித்த விவரம்: பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களில் 2012-ம் ஆண்டு முதல் 6.5 லட்சம் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்போது கட்டணம் 2.5 லட்சம் அளவில் உள்ளது. கல்விக் கட்டண உயர்வால் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாள்களாக லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனில் வியாழக்கிழமை இரவு, லண்டன் பால்டியம் தியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா பார்க்கருடன் காரில் சென்றார்.
அவர்கள் சென்ற காரை பார்த்ததும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் ஆத்திரம் அதிகமானது. கல்விக்கட்டண உயர்வை எதிர்த்து கோஷம் எழுப்பினர். மாணவர்களில் பலர் இளவரசர் சென்ற காரை நோக்கி சரமாரியாக ஷுக்கள், முட்டை என கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த திடீர் தாக்குதலால் காரில் இருந்த சார்லஸும், கமீலா பார்க்கரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து பால்டியம் தியேட்டர் சென்ற அரச குடும்ப தம்பதியினர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் நடத்திய தாக்குதலில் இளவரசர் சென்ற ரோல்ஸ் ராய்ஸ் காரின் கண்ணாடிகள் சேதமடைந்தன என்று போலீசார் தெரிவித்தனர். அரச குடும்பத்தினர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய இந்த சம்பவம் பிரிட்டனில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் பொது நிதியில் பெரும் பகுதி பல்கலைக்கழகத்துச் செல்கிறது என்று கூறி பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியைக் குறைத்தது. இதனால் பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
ஆனால் இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு மிக அதிகமாக 6.5 லட்சத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
1 comments :
Brits enjoy the vaues of democracy,
becuse it is a democratic country.but
if it exceeds the level the
consequences may be unpredictable
Post a Comment