ஐ.நா வந்து பார்வையிட்டால் போர்குற்றம் எதுவும் இடம்பெறவில்லை என்பது தெரியவரும்.
அமைச்சர் விமல் வீரவங்ச எப்போதும் சர்வதேசத்துக்கு எதிரான போக்கைக் கொண்டவர். அதன் காரணமாக ஐ.நா. நிபுணர் குழுவின் வருகையையும் அவர் எதிர்க்கின்றார். ஆனால் அக்குழு இலங்கை வரவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். அவ்வாறு வந்தால் தான் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெறவில்லை என்பதை அவர்களும் சந்தேகமின்றி அறிந்து கொள்வார்கள். அதனை நாமும் அவர்களுக்குப் புரிய வைக்கலாம் எனவும் பாரளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
லக்பிம செய்திப் பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பா.உ பிரபா கணேசன், விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு மக்கள் அடிமையாக நடத்தப்பட்டனர் எனவும் ஆனால் இப்போது அங்குள்ள மக்கள் பூரண சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டவர்களாக இருந்தால் யுத்தத்தின் காரணமாக சேதமடைந்த வீடுகள் மற்றும் பாடசாலைகளைப் புனரமைத்துக் கொடுக்க முன் வர வேண்டும். அல்லது இலங்கைக்கு வந்து புதிய தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும்.
விடுதலைப் புலிகள் பலமாக செயற்பட்ட காலத்தில் வடக்கு மக்கள் அடிமைகள் போன்று சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இடம்பெயர்ந்த மக்களில் தொண்ணூறு வீதமானவர்கள் தற்போதைக்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறான விடயங்கள் புலம்பெயர்ந்த மக்களைச் சென்றடையவில்லை.
எனவே இவ்வாறான விடயங்களைப் புலம்பெயர் தமிழர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் எதிர்வரும் நாட்களில் மீண்டும் ஐரோப்பாவிற்கு செல்லவுள்ளேன். தற்போதைக்கு இருபத்தி ஐந்து வீதமான புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இசைவாக நடந்து கொள்கின்றார்கள். ஏனையவர்களையும் அரசாங்கத்துடன் இசைவாக நடந்து கொள்ள வைப்பதே எனது நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கைப் பொறுத்தவரை அங்கு எழுபத்தி ஐந்து வீதமான பௌதீக வளங்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் யுத்தத்தின் காரணமாக சேதமடைந்துள்ளன. அங்குள்ள வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ள நிலையில் காணப்படுகின்றன.
0 comments :
Post a Comment