கே.பி யை அரச மாளிகையில் வைத்துள்ள அரசு எம்மீது புலி முத்திரை குத்துகின்றது. ரணில்
புலிகளின் தலைமையை இராணுவம் முள்ளிவாய்காலில் முடக்கிய பின்னர் அவ்வமைப்பின் தலைமை பொறுப்பினை ஏற்றுக்கொண்ட கே.பி எனப்படும் குமரன் பத்தநாதனை தம்பக்கம் அணைத்துக்கொண்டு அவரை அரச மாளிகையில் வைத்துள்ள அரசு எம்மீது புலி முத்திரை குத்துகின்றது என களனியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
புலிகளின் தற்போதைய தலைவரான கே.பி. குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வதற்கான அமைப்பின் தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ள ஜனாதிபதி, எம் மீது புலி முத்திரையை குத்த முயற்சிப்பது என்ன நியாயம்? மிகவிரைவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கலாம்" என எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை பதவிகளை கொண்டுள்ளது. ஆனால் கே.பி.எந்தப் பதவியும் இல்லாமல் அரச மாளிகையில் சுகபோகம் அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் அமைப்பின் தற்போதைய நிலைமை என்னவென்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும். அன்று விடுதலைப் புலிகள் அமைப்பை ஜனாதிபதி தடை செய்தார். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோல்வி கண்ட பின்னர் புலிகள் அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்ற கே.பி. யை ஜனாதிபதி தன்னோடு இணைத்துக் கொண்டதோடு அவர் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்கு கே.பி. தலைமையில் அமைப்பொன்றையும் உருவாக்கியுள்ளார். எனவே விடுதலைப் புலிகளும் கே.பி.யும் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றனர்.
அத்தோடு ஈ.பி.டி.பியினரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதோடு வடக்கில் ஜனாதிபதிக்காகவே பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இரு தரப்பினரும் மஹிந்த சிந்தனையை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பியினர் நாடாளுமன்றத்தில் உள்ளனர் புலிகள் அங்கில்லை. இதுவே இரு தரப்பினருக்கும் உள்ள வேறுபாடாகும்.
இவ்வாறானதொரு நிலைமையிலும் புலிகளின் கே.பி. அரச மாளிகையில் சுகபோகங்களை அனுபவிக்கின்றார். புலிகள் ஈ.பி.டி.பி, நீலப் படையணி உட்பட பல்வேறு அமைப்புக்களும் பணத்தை சேகரித்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் உதவி புரிகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் புலிக்கும் நீலப்படையணிக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன?
காட்டுச் சீருடைக்கு மேலாக சால்வையை போட்டுக் கொண்ட புலிகள் மஹிந்த சிந்தனை லேபலை ஒட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். இதுதான் உண்மை. ஆனால் இதனை மறைத்து ஐ.தே.க. மீது புலி முத்திரை குத்தி மக்களை திசை திருப்ப முயற்சிப்பது எதற்காக?
புலிகளின் 17 கப்பல்களை இங்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பொருட்களை இறக்குமதி செய்யலாம்.
வெளிநாடுகளிலுள்ள பெற்றோல் நிரப்பு நிறுவனங்களின் வருமானத்தை இங்கு கொண்டு வர வேண்டும். சுவிஸ் வங்கியிலுள்ள பணத்தையும் இங்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு கே.பி.யிடம் உள்ள புலிகளின் சொத்துக்களை நமது நாட்டுக்கு கொண்டு வந்தால் சம்பளத்தை அதிகரிக்க முடியும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும்.
அச்சொத்துக்கள் அனைத்தும் அவ்வாறே தேங்கிக் கிடக்கின்றன. அத்தோடு கே.பி.யும் பாதுகாப்பாக உள்ளார். எனவே மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கம் புலிகளுக்கு எதிரானது என எவ்வாறு கூற முடியும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கே.பி. இந்தியாவுக்குத் தேவை. எனவே எமது நாட்டுக்கு கே.பி. தேவையில்லையெனில் அரசாங்கம் கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
மிகவிரைவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியாக புலிகள் அமைப்புக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கும் என நம்பலாம்" என்றார்.
0 comments :
Post a Comment