விமல்வீரவன்ச தலைமையில் நாளை பிரித்தானிய தூதரகம் முற்றுகையாகின்றது.
பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றிருந்தபோது, அவருக்கு எதிராக லண்டன்வாழ் புலிஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அத்துடன் பல்கலைக்கழகத்தினால் நிகழ்த்தப்படவுள்ள ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்விடத்தை அவர்கள் முற்றுகையிடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பேச்சு ரத்து செய்யப்பட்டது.
இறைமை கொண்ட நாடொன்றின் தலைவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க முடியாது என பிரித்தானியா அறிவித்திருக்கின்றமையானது அந்நாடு தோல்வியடைந்த நாடு என்பதை நிருபித்துள்ளது வீடமைப்பு அமைச்சர் விமல்வீரவன்ச சாடியுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாம் எத்தனை குறைபாடுகளைக் கொண்டிருந்தபோதும் எந்தவொரு நாட்டின் தலைவர் எமது நாட்டினுள் கால்பதித்தாலும் அவருக்குரிய பாதுகாப்பினை வழங்க நாம் என்றும் தவறியதில்லை. ஆனால் இன்று பிரித்தானியா இலங்கையின் தலைவருக்கு தமது நாட்டில் பாதுகாப்பில்லை என தெரிவித்துள்ளது.
இது பிரித்தானியா , அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்தியங்கள் எமக்கு எதிராக மேற்கொள்கின்ற சதியினை வெளிப்படுத்துகின்றது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எவ்வாறு செயற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது என தெரிவித்துள்ளளார்.
இன்று இலங்கையில் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க எதிர்கட்சியிலுள்ள ஜெயலத் ஜெயவர்த்தன போன்றோர் சர்வதேச நாடுகளுடன் இணைந்து சதிசெய்கின்றனர். ஜனாதிபதி தனது பிரித்தானிய பயணத்தை ஆரம்பிக்கும்போது அங்கிருக்கும் தொலைக்காட்சிகள் போர்க்குற்றம் என்ற பெயரில் புனையப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இவ்வீடியோக்களை வெளிநாடுகளுக்கு உருவாக்கி கொடுப்பது இங்கிருக்கின்ற பாக்கியசோதி சரவணமுத்து, ஜெகான் பெரேரா போன்ற வெளிநாட்டு என்ஜிஓ க்களின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்படுவோரேயாகும். எனவே இவர்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நான் வேண்டுகின்றேன்.
இன்று பிரித்தானியா சென்றுள்ள எமது ஜனாதிபதி மீது பொய்குற்றச்சாட்டு ஒன்றை சுமத்துவதற்கு பிரித்தானிய அரசு புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டியது நாட்டு மக்கள் அனைவரதும் கடமையாகும். நாளை 10.30 பிரித்தானிய தூதரகம் முன்பே எமது எதிர்பினை காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றுகூடுமாறு வேண்டுகின்றேன் என விமல் அழைப்பு விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment