கடுந்தொனியில் பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அந்தரங்கமான கடிதத்தினை சிறிலங்காவினது முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவிற்குக் காட்டுவதற்கு நோர்வே விரும்பவில்லையாம். இவ்வாறு விக்கிலீக்ஸஸ் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு இதுபோன்ற அந்தரங்கக் கடிதங்களின் பிரதியினை வழங்குவது வார இதழ்களுக்கு வழங்குவதற்கு ஒப்பானது என சிறிலங்காவிற்கான முன்னாள் தூதுவர் ஹான்ஸ் பிறஸ்கர் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் துணைத் தூதர் ஜேம்ஸ் என்ட்விசிலிடம் கூறியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் இரகசியத் தகவலின்படி அமெரிக்கத் துணைத் தூதுவர் இந்தத் தகவலை அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவித்திருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஓகஸ்ட் 18 2005 அன்று இந்த இரகசிய தகவல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த இரகசியத் தகவலில் இவ்வாறு என்ட்விசில் கூறியிருக்கிறார்.
ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது].
சிறிலங்கா அரசாங்கத்திற்கு வேண்டுகைக்கமைய கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினது தூதுவர் விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடுமாறு பிறசல்சுக்குப் பரிந்துரைக்கும்.
ஓகஸ்ட் 16ம் நாளன்று கொழும்பில் இடம்பெற்ற இணைத்தலைமை நாடுகளில் தலைவர்களின் சந்திப்பு தொடர்பாக எடுத்துக் கூறுவதற்காக ஓகஸ்ட் 18ம் நாளன்று நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் அமெரிக்கத் துணைத் தூதுவரைச் சந்தித்திருக்கிறார்.
லண்டனில் வைத்து விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் பாலசிங்கத்தினைச் சந்தித்து நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கான கடிதத்தினை வழங்கியிருந்ததை இந்தச் சந்திப்பின்போது ஹான்ஸ் பிறட்ஸ்கர் உறுதிப்படுத்தியிருந்தார்.
பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதியினைத் தாம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப் போவதில்லை என்றும் இவ்வாறு வழங்குவது வழமையான நடவடிக்கை இல்லை என்றும் பிறட்ஸ்கர் கூறியிருக்கிறார்.
முன்னதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசன், ஹெல்கீசன் ஆகியோர் அதிபர் சந்திரிகாவினைச் சந்தித்துக் கலந்துரையாடிய அந்தரங்க விடயங்கள் கொழும்பு ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டிருந்தது.
ஆதலினால் குறிப்பிட்ட இந்தக் கடிதத்தின் பிரதியினைச் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்குவதானது கொழும்பு ஊடகங்களுக்கு வழங்குவதற்கு ஒப்பானது எனப் பிறட்ஸ்கர் கூறுகிறார். இந்தத் கடிதத்தினை எவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என பிறஸ்கர் அமெரிக்காவினைக் கோரியிருக்கிறார்.
குறித்த இந்தக் கடிதத்தினை மிகவேகமாக தமிழுக்கு மொழிபெயர்த்து அதனைக் கிளிநொச்சிக்கு அனுப்புவதாக பாலசிங்கம் ஜான் பீற்றசனிடமும் ஹெல்கெசனிடமும் உறுதியளித்ததாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.
வடக்குக் கிழக்குப் பகுதியில் அண்மைய நாட்களாக விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் பாலசிங்கம் தனது கரிசனையினை வெளியிட்டிருக்கிறார். ஆனால் கதிர்காமரது படுகொலை தொடர்பில் தெளிவான பதிலெதனையும் வழங்காமல் தவிர்த்திருக்கிறார்.
நோர்வேயினது வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதையிட்டுத் தான் மகிழ்வடைவதாகவும் பிரபாகரனுக்கும் நோர்வேக்குமிடையிலான நேரடிச் சந்திப்புக்கள் விரைவில் இடம்பெறுவதைத் தான் விரும்புவதாக பாலசிங்கம் கூறியிருக்கிறார். [அந்தச் சந்திப்பில் தானும் கலந்துகொள்ளுவதற்கு விரும்புவதாகப் பாலசிங்கம் கூறியிருக்கிறார். பாலசிங்கம் இல்லாத நிலையில் ஒரேயொரு முறை மாத்திரமே நோர்வே கடந்தகாலத்தில் பிரபாகரனைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது].
ஜான் பீற்றசனுடனான இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவிற்கான பயணம் தொடர்பாக பாலசிங்கம் எதுவும் குறிப்பிடாத போதும் முன்னதாக தான் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்தபோது ஒக்ரோபரில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யும் எண்ணத்தில் தானிருப்பதாக பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.
நோர்வே பிரபாகரனுக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கான பதில் விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்தபின்னர் தான் மீண்டும் அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்து உரையாடுவதாக பிறட்ஸ்கர் கூறுகிறார். தானறிந்தவரை ஜான் பீற்றசனுக்கும் ரைசுக்கும் இடையிலான சந்திப்பு இந்தவாரம் இடம்பெறும் என பிறஸ்கர் தொடர்ந்தார். செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தினை நியூயோர்க்கில் நடாத்தும் எண்ணத்திற்கு தாங்கள் தொடர்ந்தும் விருப்பம் தெரிவிப்பதாக பிறட்ஸ்கர் கூறுகிறார்.
இது இவ்வாறிருக்க சிறிலங்காவிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளை அழைத்திருந்த சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடவேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறது [குறித்ததொரு அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடவேண்டுமெனில் அதற்கென ஐரோப்பிய ஒன்றியம் தனியான நடைமுறைகளைக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது].
விடுதலைப் புலிகளமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யவேண்டும் என்ற வேண்டுகையினை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பிறசல்சுக்கு வலியுறுத்தவுள்ளார்கள்.
நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தின் முழுமையான பகுதி இங்கு தரப்படுகிறது [தயவுசெய்து இதனைக் கவனமாகப் பாதுகாக்கவும்].
வெளிவிவகார அமைச்சு,
ஒஸ்லோ
16 ஓகஸ்ட் 2005
திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்,
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
அன்புடன் பிரபாகரனுக்கு,
அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.
விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.
சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.
எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என சிறிலங்காவிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.
இந்தப் புறநிலையில் கீழ்க்காடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.
01. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.
02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.
04. வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திற்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.
05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.
தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
ஜான் பீற்றசன்
தமிழாக்கம்: புதினப்பலகைக்காக தி.வண்ணமதி.
2 comments :
தலைக்கனம், தற்பெருமை, ஆணவம், அகங்காரம் கூடி உலகத்தை புரியாமல், உலகத்தை மதிக்காமல் சண்டிதனத்தால் மட்டும் எதையும் சாதித்து விடலாம் என்ற முட்டாள் சிந்தனையால்,
கிடைத்த சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் எல்லாவற்றையும் கோட்டை விட்டு, இன்று ஒட்டுமொத்த தமிழினமும் எவரும் கேட்பாரற்று நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
tamils should elect their leader by using democratic system then they must propose their rights next. now the tamils should concentrate on their improvements and their family not the nation.
tamilnadu everyone care their family , this way let them to change their life because the world has changed , all the countries are slave to america in many forms, there is no freedom and there is no nation, all are humbug so , forget all , improve your families , it is first freedom .
Post a Comment