கருணாநிதி ஒரு கம்யூனிஸ்ட்?
பொதுமக்கள் நம்பமாட்டார்கள் எனத் தெரிந்தும்கூடக் கருணாநிதி வாய்ப்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், தம்மைக் "கம்யூனிஸ்ட்" என அழைத்துக் கொள்வார். ஆனால் கம்யூனிஸ்ட்களின் வாழ்வின் நிழல்கூட அவரிடம் இல்லை என்பதை நிகழ்காலம் காட்டிக் கொண்டிருக்கிறது.
உலகில் தேர்தல் மூலம் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு எனவும் இந்தியாவின் மாநிலங்களில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு எனவும் கேரள மாநிலத்தில் அமைந்த முதல் மக்கள் அரசு எனவும் வரலாற்றில், "முதல்" இடம் பிடித்த பெருமை பெற்றது, "காம்ரேட் ஈ.எம்.எஸ்" எனப் பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் எளங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிபாடு' (ഏലങ്കുളം മനക്കല്ശങ്കരന്നമ്പൂതിരിപ്പാട്) தலைமையில் 1957 ஆம் ஆண்டு அமைந்த அரசு.
ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஈ.எம்.எஸ்., அப்போது கொச்சி - ஆலப்பாட்டில் ஒரு சிறு வீட்டில் தம் மனைவி ஆர்யா அந்தர்ஜனத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். முதலமைச்சராகப் பதவியேற்பதற்காகத் தலைநகர் திருவனந்தபுரத்துக்குப் புறப்படும் நேரம், ஈ.எம்.எஸ். அணிவதற்காகச் சட்டையை எடுத்துக் கொண்டு வந்தார் ஆர்யா! இஸ்திரிப் பெட்டியைக் கண்டிராத அச்சட்டையை அணியும் நேரத்தில், "இச்சட்டையில் பொத்தான் இல்லையே?" என வினவினார் ஈ.எம்.எஸ். "இதைக் குத்திக் கொள்ளுங்கள்" என ஆர்யா தாம் அணிந்திருந்த பிளவுஸில் குத்தியிருந்த ஒரு 'ஊக்கை'க் கழற்றிக் கொடுத்தார். இந்தக் காட்சிக்குச் சாட்சியாய், அவ்வீட்டினுள் நுழைந்த ஆலப்பாட்டு பிரமுகர் வேலாயுத மேனோன், "முதலமைச்சராகப் போகும் ஆள் அணிவதற்குரிய சட்டை இதுதானா?" எனக்கடிந்து கொண்டு, அச்சட்டையை எடுத்துக் கொண்டுபோய்ப் பொத்தான் தைத்து இஸ்திரி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.
திருவனந்தபுரத்தில், பதவிப்பிரமாணம் எடுக்க ஈ.எம்.எஸ். ஆயத்தமான கடைசி நேரத்தில் அவர் அணிந்திருந்த பழைய கைக்கடிகாரம் மணி காட்டுவதை எப்போதோ நிறுத்தியிருந்ததைக் கண்டனர் தோழர்கள். பதவியேற்பு நிகழ்ச்சியைக் கட்சிப் பத்திரிகையில் வெளியிடுவதற்காகச் செய்தியாளராக வந்திருந்த பவனன் என்பவரின் பழைய ஹிந்துஸ்தான் கைக்கடிகாரத்தை இரவல் வாங்கி அணிந்து கொண்டு முதலமைச்சராகப் பதவியேற்றார் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.
புல்லரித்துப்போகிறது நமக்கு!
நம்பித்தான் ஆக வேண்டும். இது கற்பனைக் கதையில்லை; நம்முன் வாழ்ந்த நிஜம்.
இப்படி வாழ்ந்த ஈ.எம்.எஸ். என்ன ஒன்றும் இல்லாதவரா? மக்களால் உயர் வகுப்பு எனக்கூறப்பட்ட "நம்பூதிரி" இனத்தில் பிறந்த ஈ.எம்.எஸ்., கேரளத்தில் அன்று நிலவியிருந்த சாதிப்பாகுபாட்டுக்கும் தீண்டாமைக்கும் எதிராகப் பெரும் போர் நிகழ்த்தியவர். காங்கிரஸ் கட்சியில் தம் அரசியல் வாழ்வைத் துவக்கிய ஈ.எம்.எஸ்., மார்க்ஸியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவர். நாற்பதுகளில், தம் முன்னோர் சொத்தில் தமக்குக் கிடைத்த பங்கு முழுவதையும் கட்சிக்கு வழங்கி விட்டு எளிமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்.
ஈ.எம்.எஸ். மட்டுமல்லர்; அவரைப்போல C I T U பொதுச்செயலாளராக இருந்த கே.என்.ரவீந்திரநாத், எர்ணாகுளம் நகரின் இதயப் பகுதியில் அமைந்த, இன்றைய நில மதிப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வரும் நிலத்தை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கட்சிக்கு வழங்கினார். மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த காம்ரேட் ஹர்கிஷன் ஸிங் ஸுர்ஜித்தும் தம் முன்னோரின் சொத்தில் தம் பங்காகத் தமக்குக் கிடைத்த அந்தக் காலத்துப் பத்துலட்சம் ரூபாயைக் கட்சிக்கு வழங்கினார்.
ஆனால் அவ்வப்போது 'தாம் ஒரு கம்யூனிஸ்ட்' எனச்சொல்லிக் கொள்ளும் கருணாநிதியோ கட்சிச் சொத்தை அடகு வைத்து, 'சன் தொலைக்காட்சி'யில் முதலீடு செய்தவர். கட்சித் தொண்டர்களின் அன்பளிப்பாலும் நன்கொடையாலும் உருவாக்கப்பட்ட கட்சிச் சொத்தைத் தம் சொந்த வருவாய்க்காகத் தொழிலில் முதலீடு செய்த தலைவர் கருணாநிதி ஒருவராகத்தானிருப்பார். அந்த அளவிற்குச் சுயநலம் கொண்டவர் கருணாநிதி. 'சன் தொலைக்காட்சி'யிலிருந்து கிடைத்த லாபத்தில் தம் பங்கான நூறு கோடி ரூபாயை அவர் தாம் பெற்றெடுத்த மக்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தாரே தவிர அந்தத் தொகையில் கட்சிக்கு ஏதும் கொடுக்கவில்லை.. "…… அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன்" என அவரே அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
தம் சொத்தை, செல்வத்தைக் கட்சிக்கு வழங்கிவிட்டு எளிமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள். ஆனால் ஏழ்மை நிலையிலிருந்த கருணாநிதி, கோடீஸ்வரக் குடும்பத்தின் பிதாமகனாக உருவெடுத்துள்ளார்.
"நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்வராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள்"எனக் கருணாநிதி தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கு அவரிடம் பொறுப்பை ஒப்படைத்த மக்கள், அப்பொறுப்பால் அவர் கோடீஸ்வரனாவார் என எதிர்பார்க்கவில்லை. 1949 முதல் எழுபத்தைந்து திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியதைத் தவிர வேறு பெரிய தொழிற்சாலைகளோ வணிக நிறுவனங்களோ எண்ணெய்க் கப்பல்களோ அவரது உடைமையாக இல்லா நிலையில் அவரது வாரிசுகளுக்கு எண்ணத் தொலையாத இத்துணைச் செல்வத்தை அவர் எப்படிச் சேர்க்க முடிந்தது என்று நாம் வினா எழுப்பத் தேவையில்லை. ஜெயலலிதாவே போதும்.
"...............1946ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாகச் சேர விண்ணப்ப படிவத்தில் தமக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை; வீட்டுமனை ஏதுமில்லை; தம்மிடம் நகை, பாத்திரம் வகையறா 1,000 ரூபாய் இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார் ..." என ஜெயலலிதா தம் அறிக்கையில் கூறியிருந்தார்.
கருணாநிதி, தாம் எழுதிய 'நெஞ்சுக்குநீதி' எனும் ஆடோபயாகிரஃபியிலும் ".............. பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பத்மாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணிஆர்டர் செய்வேன் ..............."
"........... பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்….." எனப் பதிவு செய்துள்ளார்.
இப்படி வாழ்வைத் துவக்கிய கருணாநிதியின் குடும்பத்துக்கு இன்றுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதை இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் பலரும் பதிவு செய்துள்ளனர். எனவே அவற்றை மீண்டும் இங்கே குறிப்பிடும் தேவையில்லை.
அரசியல்வாதியான கருணாநிதி, தாம் நாத்திகன் என்பார்; பகுத்தறிவாளன் என்பார்; பத்திரிகையாளன் என்பார்; சமூகச் சீர்திருத்தவாதி என்பார்; இலக்கியவாதி என்பார்; கவிதை எழுதுவேன் என்பார்; கம்யூனிஸ்ட் என்பார்; சிறை சென்றேன் என்பார்; தலித்களின் சம்பந்தி என்பார். இவை அனைத்திலும் இவரை விடச் சிறந்து விளங்கியவர் ஜீவா.
தம்மைச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளன் என்றெல்லாம் கூறிக் கொண்டாலும் கருணாநிதிக்குச் சாதிக் குறுகுறுப்பு அதிகம். எனவேதான் அடிக்கடி, தாம் "தலித்களின் சம்பந்தி" என்றும் "மகனுக்குத் தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் எடுத்தேன்" என்றும் "பேத்திக்கும் அவ்வாறே மணமகனைத் தேர்ந்தெடுத்தேன்" என்றும் சொல்லிக் கொண்டிருப்பார். இந்தியாவில் இதுவரை பல்லாயிரக் கணக்கில் கலப்பு மணங்கள் நடைபெற்றுள்ளன; நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் பலவும் இன்றைய சமூகத்தின் சாதிப்பாகுபாட்டில் தாழ்த்தப்பட்டுள்ளவர்களுடன் தாழ்த்தப்படாதவர்கள் செய்து கொண்டவை / கொள்பவை ஆகும். யாருமே தாம் செய்த தியாகமாக இதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. ஆனால் கருணாநிதி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தம் மருமகள் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் என்பதைச் சொல்லிக் காட்டி மருமகளை மேலும் தாழ்த்தும் வழக்கம் கொண்டவர். தமக்கு ஏதும் சிக்கல்கள் தோன்றும் போதெல்லாம் தம்மைச் "சூத்திரன்" என்றும் "சாமான்யன்" என்றும் சொல்லிக் கொள்வார். ஆனால் சாதிப்பாகுபாட்டிற்கும் தீண்டாமைக்கும் எதிராகப் போராடிய ஜீவாவோ தாம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேந்த கண்ணமாவை மணந்து கொண்டிருந்தும் அதைப் பெரிய தியாகம்போல் சொல்லிக் காட்டியதில்லை.
ஜீவா, பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே காந்தியால் கவரப்பட்டார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது கதர் பற்றிக் கவிதை எழுதினார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை எழுதி. அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். ஜீவா தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தது ஊர் மக்களின் எதிர்ப்பத் தேடித் தந்தது. அவரது செயலுக்காக ஊர் அவரின் தந்தைய எதிர்க்க, மகனுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, தம் கொள்கையைத் துறக்க விரும்பா ஜீவா குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17. சேரன்மாதேவியில் வவேசு ஐயர் நடத்திய ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றினார். அங்கும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் கண்டு வெகுண்டு அங்கிருந்து விலகினார். பிறகு தாமே 1927 இல் அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் சிராவயலில் "காந்தி ஆசிரமம்" என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார். அவ்வாசிரமத்துக்கு வருகை தந்த காந்தி ஜீவாவிடம், "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது" என்று வினவினாராம்; ஜீவா, "இந்த தேசம்தான் எனது சொத்து" என விடையிறுத்தாராம். இதைக் கேட்டு வியந்த காந்தி, "நீங்கள்தாம் இந்நாட்டின் சொத்து" என்றாராம். நாட்டின் சொத்தாக ஜீவாவைக் காந்தி ஒப்புக் கொண்டார்.
இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பொறுக்க முடியாமல், நாட்டு விடுதலைக்காக நெருப்புப் பொறி பறக்கும் உரைகள் ஆற்றி இளைஞர்களையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்த ஜீவா, பகத் சிங் எழுதிய நூலை, "நான் ஏன் நாத்திகனானேன்?" எனத் தமிழில் மொழிபெயர்த்தார். அந்நூலை ஈ.வெ.ரா. பெரியார் வெளியிட்டார். பகத் சிங்கின் நூலை மொழிபெயர்த்த குற்றத்துக்காக ஜீவாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாட்டு விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் காந்தி அறிவித்த 'ஒத்துழையாமை இயக்க'த்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா, மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தோழர்களுடன் நெருங்கிப் பழகினார். இதனால் ஜீவாவின் சிந்தனைப் போக்கு மாறியது. சிறையிலிருந்து வெளிவந்தபோது, கம்யூனிஸ்டாக வந்தார்.
விடுதலைப் போராட்ட வீரரான ஜீவா, பல தொழிற்சங்கங்களுக்குத் தலைவராக இருந்துள்ளார். விடுதலைப் போராட்டக் களத்திலும் தொழிற்சங்கக் களத்திலும் தம் வீரார்ந்த சேவைக்காக வெஞ்சிறையில் வாடியவர் ஜீவா. அதைச் சொல்லி மக்களிடம் விளம்பரம் செய்யவில்லை அவர்.
கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராவதற்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்பே 1952 ஆம் ஆண்டு, வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஜீவா. குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்; கம்யூனிஸ்ட் கட்சியின் "ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்துள்ளார். திரைத்துறையைத் தவிரக் கருணாநிதி நுழைந்த அத்தனைத் துறைகளிலும் கருணாநிதிக்கு முன்பே வெற்றிபெற்றவர் ஜீவா.
ஜீவாவைப் பற்றிப் படித்த மற்றொரு செய்தியும் உண்டு. கம்யூனிஸக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஒரு நாளிதழ் தேவை என எண்ணிய ஜீவா, கட்சி நிதியாகவும் நாளிதழ் நிதியாகவும் பொதுமக்களிடம் பணம் பெற்றாராம். அதன் பின், சென்னை வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்துள்ளார். காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் எதுவும் சாப்பிடவில்லை; அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! தோழர் ஜீவாவிடம்,"பசிக்கிறது; ஏதாவது சாப்பிடலாமா?" என வினவ, "சாப்பிடலாம்; ஆனால் கையில் காசு இல்லையே" என்றாராம் ஜீவா. "உங்கள் கையில் பெரும் தொகை இருக்கிறதே" என்ற தோழரிடம், "அது மக்கள் பணம்; அதிலிருந்துஎடுக்கக் கூடாது" என்றாராம். அவர் கம்யூனிஸ்ட்.
ஜீவா போல, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போல மக்கள் தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் கருணாநிதி அடிக்கடித் தம்மையும் "கம்யூனிஸ்ட்" என்றும் "தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி" என்றும் கூறிக்கொள்ள வெட்கப்பட வேண்டும்; அப்படிக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
0 comments :
Post a Comment