இந்திய தலைவர்களை கொல்ல புலிகள் திட்டம். கரையோர கண்காணிப்பு அதிகரிக்கின்றது.
பிரதமர் மன்மோகன் சிங் வரும் ஆண்டு ஜனவரி 3 ம் தேதி சென்னையில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வொன்றில் பங்குகொள்ளவுள்ளார். இந்நிகழ்வின்போது புலிகள் இயக்கம் அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவு அமைப்பான இண்டலிஜென்ஸ் பீரோ (ஐ.பி.) தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ள பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க உள்ளார்.
தமிழக கடலோரப் பகுதி வழியாக புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தமிழக காவல்துறையும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியிருந்ததாகவும் காவல்துறை மற்றும் உளவுத் துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்திருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியும், மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளோடு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை நடத்தி வருவதாக லத்திகா தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட 13 கடலோர மாவட்டங்கள் உஷாராக இருக்கும்படி கடந்த 14ஆம் திகதி க்யூ பிரிவு காவல்துறை தகவல் அனுப்பியிருந்தது. இதையடுத்தே கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கு கடற்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் உட்பட மேற்கு கடற்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி கடற்படை அதிகாரிகளுக்கு மேற்கு கடற்படை பிரிவு உத்தரவிட்டுள்ளது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடற்படை உயர் அதிகாரி ஊடகமொன்றுக்கு கூறுகையில், 'மேற்கு கடற்பகுதியில் கடற்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல் படை ஆகியவை தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்படை முழு உஷார் நிலையில் உள்ளது. போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் 200 மீட்ட சுற்றளவுக்கு கப்பல், படகு மற்றும் தோணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளார்.
இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கான பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் லத்திகா சரண் கூறியுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிவிரைவு படையினர் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் சிதம்பரம் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடலோர பாதுகாப்பு படை, முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வி.வி.ஐ.பி பாதுகாப்பு படையும் உஷார் படுத்தப்பட்டிருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிரிந்து கிடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் தமிழகத்தில் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களால் முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய புலனாய்வு பிரிவு தகவல் ஒன்று அனுப்பி இருக்கிறது.
0 comments :
Post a Comment