Friday, December 17, 2010

இசைப்பிரியாவைக் கொன்றது யார்? அதற்கு துணை நின்றவர்கள் யார்? பி.இரயாகரன்

நானா!? நீயா!? சொல். நானும் நீயுமல்ல. அப்படியென்றால் யார்? இராணுவம் கொன்றது. சரி, அதற்கு துணை நின்றவர்கள் யார்? அவர்கள் எப்படித் துணையாக நின்றனர்? இதை ஆராயாத மந்தையா நீ! சொல், இல்லை என்றால்! உன் சொந்தப் பகுத்தறிவு மூலம் விடைகாண, உனக்கு என்ன தடை உண்டு!?

புலத்துப் புலிகளின் துணையுடன் தான், வன்னிப் புலிகளை அரசு கொன்று குவித்தது. இல்லை என்கின்றாயா? அரசிடம் வன்னிப்புலிகள் சரணடைந்த செய்தியை மூடிமறைத்த புலத்துக் கூட்டம் தான், அவர்களை இரகசியமாக கொல்ல உதவியது. இதுவொரு உண்மையில்லையா? வன்னிப்புலிகள் உயிர் வாழ்வதற்காகத்தானே சரணடைந்தார்கள்? அதற்கு துரோகம் செய்தவர்கள் யார்? அதை இருட்டடிப்பு செய்து, அவர்களுக்கு அதை மறுத்தவர்கள் வேறு யாருமல்ல, நீ நம்பும் புலத்துப் புலிகளே தான். மக்களை ஏய்க்கும் தம் பிழைப்பை அவர்கள் தொடர, அதை மூடிமறைத்தனர். இதன் மூலம் அவர்களைக் கொல்ல, அரசுக்கு மறைமுகமாக உதவினர். சரணடைந்த புலிகளால், தம் பிழைப்புக்கு இனி எந்த விதத்திலும் உதவ முடியாது என்பதனால், புலத்து புலிகளின் பிழைப்பு அரசியலே இதைச் செய்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள், அப்படித்தான் புலிகள் இருந்தவரை பிழைப்புக்கு பஞ்சமில்லை. சரணடைவை விட செத்தால் தான் புலம்பெயர் புலிப் பிழைப்புவாதிகளுக்கு வாழ்வாகின்றது. இப்படி தான் இசைப்பிரியா சரணடைந்தது முதல் அவற்றை மூடிமறைத்ததன் மூலம் அவரைக் கொல்ல உதவினர். இப்படி மூடிமறைத்து கொல்ல உதவியவர்கள், அந்தப் பிணத்தைக் காட்டி புலம்பெயர் புலிக் கூட்டம் மீண்டும் உருவெடுத்து ஆடுகின்றது.

இது தானே இன்று நடக்கின்றது. புலத்துப் புலிகளின் உதவியுடன் தான், சரணடைந்த வன்னிப்புலிகள் அரசியல் அனாதைகளாக அரசால் கொல்லப்பட்டனர். அவர்கள் கொலைகார அரசின் பிடியில் சிக்கியுள்ள செய்தியை, தமிழ்மக்களுக்கும் இந்த உலகுக்கும் மறைத்தவர்கள் யார்? நானும் நீயுமா!? இல்லை, மாறாக நீ நம்பிய புலத்து புலிகளே தான். இப்படி மூடிமறைத்ததன் மூலம்தான், அரசு அவர்களை இலகுவாக ஈவிரக்கமின்றி கொன்றது. இதற்காகவா புலத்துப் புலிகளை நம்பி, வன்னிப்புலிகள் சரணடைந்தனர்!? மனச்சாட்சியுடன் சொல்லுங்கள். அவர்கள் வாழ்வதற்காக சரணடைந்தனர். அதை உலகுக்கு மூடிமறைத்து, அவர்கள் வாழ்வை மறுத்தவர்கள் புலத்துப்புலிகள் என்ற உண்மை நிதர்சனமானது. அவர்களை இப்படி அனாதரவாக சரணடைய வழிகாட்டியவர்கள், புலத்துப் புலிகளும் சேர்ந்து தான். பின் அதை மூடிமறைத்தவர்களும் புலத்துப் புலிகள் தான். இதன் மூலம் அவர்களைக் கொல்ல உதவியவர்கள் புலத்துப் புலிகள். இதன் பின்னுள்ள உண்மை இதுதான்.

இது பொய் என்றால், வன்னிப் புலிகள் அரசிடம் சரணடைந்தார்கள் என்ற உண்மையை உங்களுக்கு மூடிமறைத்து யார்? அவர்களை அரசியல் அனாதையாக்கி கொல்ல அரசுக்கு உதவியவர்கள் யார்? சொல்லுங்கள். ஆம் அவர்கள் புலத்துப் புலிகள் தான். இந்த வகையில் கூட, இது சார்ந்த அரசின் போர்க்குற்றத்துக்கு புலித்துப் புலிகளே துணையாக இருந்துள்ளனர். இல்லை என்கின்றீர்களா!? யுத்தகாலத்தில் மக்களை புலிகள் பலிகொடுக்க, அரசு பலியெடுத்த அதே நிகழ்வைப் போன்றது தான் இதுவும்.

சரி, இந்தக் கொலைகார பேரினவாத அரசு, இன்று என்ன சொல்லுகின்றது? சண்டையில் தான் புலிகளைக் கொன்றனர் என்கின்றது. ஏன் இசைப்பிரியா கூட, அப்டித்தான் இறந்ததாக கூறுகின்றது. புலித்துப் புலிகள் என்ன சொல்லுகின்றனர்? இதைத்தான், அதாவது சண்டையில் புலிகள் இறந்தாக மீளச் சொல்லுகின்றனர். அதாவது இசைப்பிரியா உட்பட. இசைப்பிரியா சரணடையவில்லை என்பதுதான், அவரை கொல்லக் கொடுத்து பிழைக்கும் புலத்துப் புலி அரசியல் கூறுகின்றது. இப்படிச் சண்டையிலேயே புலிகள் இறந்ததாக இருதரப்பும் சொல்லும் போது, இதில் எங்கே எப்படி போர்க்குற்றம் உள்ளது!? இப்படி உண்மைக்கு புறம்பான பொய்கள் மூலம், அரசின் போர்க்குற்றத்தை பாதுகாத்து அரசுக்கு உதவுகின்றனர் புலிகள். மறுபக்கத்தில் புலிகள் தமது பொய்யையும் புரட்டையும் ஏமாற்றையும் மூடிமறைக்கவே, வெளியான காட்சிகளை முன்னிறுத்தி உலகத்தையும் சொந்த மக்களையும் ஏமாற்றுகின்ற இரட்டை வேடத்தை போடுகின்றனர்.

1. ஒருபுறம் போர்க் குற்றத்தை அரசுடன் சேர்ந்து பாதுகாத்தல். அதாவது சரணடைந்தவர்கள் கொல்லப்பட்ட சூழலை மறுத்தல். புலிகள் சரணடையவில்லை என்று கூறுவது. சரணடையாமல் அவர்களைக் கொல்லும் போர்க்குற்றத்தை அரசு எப்படி செய்ய முடியும்?

2. மறுபக்கம் வெளியாகும் போர்க்குற்றத்தை முன்னிறுத்தி, அதை மேற்கின் காலுக்கு ஏற்ற கம்பளமாக்கி, அவர்களின் குறுகிய நலனுக்குள் சிதைத்து தம் சொந்தப் பிழைப்பை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் புலிகளைக் கொல்லும் வீடியோ காட்சி உட்பட புலித் தலைவர்கள் இரந்து நிற்கும் அவலமான காட்சிகள் வரை வெளியாகின்றன. இதை உருவாக்கிய அரசியல் சூழல் முதல் அதன் பின்னணி சார்ந்த அனைத்தையும் புலிகள் மூடிமறைக்கின்றனர். இப்படி நடந்த அந்தப் பாரிய போர்க்குற்ற நிகழ்வுக்குரிய உண்மைகள், புலித்துப் புலிகளால் மூடிமறைக்கப்படுகின்றது. அன்று யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் போக, எஞ்சிய முக்கியமான புலிகள் அனைவரும் சரணடைந்தனர். இந்த உண்மையும், அதன் பின் அவர்கள் கொல்லப்பட்டனர் என்ற உண்மையும், புலத்துப் புலிக்கு நன்கு தெரியும்.
இந்தச் சரணடைவு கூட எந்த நிலையில், யாருடைய அனுசரணையில், எப்படி என்ற உண்மை அனைத்தும் புலத்துப் புலிக்கு நன்கு தெரியும். இதில் சம்மந்தப்பட்டவர்கள், போர்க்குற்ற விசாரணையின் மிக முக்கியமான சாட்சியங்கள். இவர்களில் பலர் போர்க் குற்றவாளிகள். ஏமாற்றி சரணடைய வைத்து அவர்களைக் கொல்ல சதி செய்தவர்கள். அவர்கள் யார் என்பதையும், இந்தச் சாட்சியங்களையும் போர்க்குற்றக் கூட்டத்தையும் புலத்துப் புலிகள் மூடிமறைக்கின்றனர். நிச்சயமாக இதில் அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மேற்கு வரை புலத்துப் புலிகள் நக்கி வழிகாட்டிய அனுசரணையுடன் பலர் சம்மந்தப்பட்டது. கறுப்புத் தோல் முதல் வெள்ளைத் தோல்வரை. இந்த சரணடைவு என்ற முடிவை வன்னிப் புலிகள் மட்டும் தனித்து முடிவெடுக்கவில்லை. புலத்துப் புலிகளும் சேர்ந்து தான், அன்று இந்த முடிவு எடுத்தனர்.

இதில் நம்பிக்கை ஊட்டப்பட்ட சதியின் எல்லையில், முக்கிய புலிகள் தங்கள் சுயநலத்துடன் தப்பிச் செல்ல தம்மை குறிப்பாக முன்னிலைப்படுத்தி தனியாக சரணடைந்தனர். இப்படி அரசுக்கு இங்கு யார் முக்கிய புலிகள் என்ற விசாரணைக்கு எந்த அவசியமுமற்ற வகையில், அவர்கள் தம்மை பாதுகாத்து தப்பிச்செல்லும் நம்பிக்கையுடன் தம்மைத்தாம் வேறுபடுத்தி தனியாக சரணடைந்தனர். இதில்தான் இசைப்பிரியாவும் அடங்கும். இப்படி அவர்கள் அனைவரும் சரணடைந்த பின், அவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வை புலத்துப் புலிகள் இன்றுவரை மூடிமறைக்கின்றனர்.

இப்படி தங்கள் வழிகாட்டலில் நடந்த இந்தச் சதி உள்ளடங்கிய சரணடைவை புலத்துப் புலிகள் மூடிமறைத்ததன் மூலம் தான், சரணடைந்தவர்களை இலகுவாக அரசு கொன்று குவித்தது. யுத்த காலத்தில் மக்களை அரசு பலியெடுக்க, புலிகள் மக்களை பலிகொடுத்தனர். புலி அன்று மக்களை பலி கொடுக்கவில்லை என்றால், இவ்வளவு மக்கள் பலியெடுக்கப்பட்டு இருக்கவே மாட்டார்கள். இதுவொரு உண்மை. புலிகள் தாங்கள் யார் முன்னிலையில், எந்த நிலையில் யாருடைய துணையுடன் சரணடைந்தனர் என்ற உண்மையை உலகுக்கு அறிவித்து இருந்தால், சரணடைந்தவர்கள் கொல்லப்படுவது என்பது இலகுவானதல்ல. இதைச் செய்யாததும், அதை மூடிமறைத்ததன் மூலமும், புலித்தலைவர்கள் அரசால் கொல்லப்பட புலத்து புலித்தலைமை அரசுக்கு உதவியது.

நடேசன் உள்ளிட்ட அரசியல் பிரிவே சரணடைந்ததாக கூறும் புலத்துப் புலிகள், தங்கள் இராணுவ பிரிவு சரணடையவில்லை என்கின்றனர். இந்த விவகாரத்தில் கூட நடேசன் உள்ளிட்ட பிரிவு உடனடியாக கொல்லப்பட்டதும், அதை அரசே சண்டையில் இறந்ததாக காட்டிய காட்சியின் பின் புலத்தில்தான், இந்தச் சரணடைவை உடனடியாக புலிகள் ஒத்துக் கொண்டதாகும். இந்த விசித்திரமான தடுமாறிய புலிகளின் வங்குரோத்த அரசியலால், இந்த உண்மையின் முழுமையை மறுத்தனர். இதன் மூலம் மற்றவர்களை சித்திரவதை செய்யவும், கொல்லவும் அரசுக்கு பச்சைக் கொடி காட்டினர்.

ஆனால் அரசு சண்டையில் கொல்லப்பட்டவர் பட்டியல் மூலம், முன்கூட்டியே சரணடைந்தவர்கள் பெயரையும் உள்ளடக்கி ஒரு பட்டியலை வெளியிட்டு இருந்தது. இதில் இசைப்பிரியாவின் பெயரும் அடங்கும். அவரும் சரணடைந்தார் என்ற உண்மையை, அரசு கொல்வதற்கு முன்பே மறுத்து சண்டையில் இறந்ததாக அரசு அறிவித்து இருந்தது. புலிகள் அதை இல்லை என்று மறுக்கவில்லை. அவர் சரணடைந்தார் என்று சொல்லவில்லை. புலிகள் சரணடைந்தனர் என்பதை மறுத்ததன் மூலம், அரசின் கொலைப்பட்டியலுக்கு அமைவாக அனைவரையும் கொல்ல உதவினர். சரணடைந்த அதே இசைப்பிரியா இன்று வெளியாகிய வீடியோவில், பச்சை இரத்தத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்றார். இது எதைக் காட்டுகின்றது? சரணடைந்த பின், அந்த வரிசையில் வைத்துதான் அவரும் கொல்லப்படுகின்றார் என்பதைத்தான்.

அரசோ சண்டையில் கொல்லப்பட்டதாக அறிவித்திருகின்றது. புலியோ யாரும் சரணடையவில்லை, சண்டையில் தான் இறந்ததாக கூறுகின்றது. ஆனால் சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள், அரச அறிவித்தலையும் காட்சியையும் வைத்து முறைப்படியான போர்க்குற்றச்சாட்டை ஆணித்தரமாக முன்வைத்திருக்கின்றது. இங்கு இதை வைத்தது புலிகள் அல்ல. மாறாக புலிகள் இதை மூடிமறைக்கவே வெளிக்கிட்டனர்.

இந்த வீடியோக் காட்சிகளை புலிகள் வெட்டிச் சுருக்கி வெளியிடுவதன் மூலம், தம்மை பாதுகாக்க முனைகின்றனர். பல காட்சிகளை மறைக்க முனைகின்றனர். இதன் மூலம் காட்சியின் உண்மை சார்ந்த நம்பகத் தன்மைகளை, ஓட்டுமொத்தமாக தங்கள் சுயநலம் மூலம் சிதைத்து வருகின்றனர்.

1. முதலில் ஒரு பகுதியை வெளியிட்டவர்கள், பின் இசைப்பிரியா உள்ளடங்கிய காட்சியை முழுமையாக நீக்கிவிடுகின்றனர். இதன் மூலம் புலிச் சரணடைவை மறுக்க முனைகின்றனர். அரசைப் பாதுகாக்க முனைகின்றனர்.

2. பெண் சார்ந்த பாலியல் உறுப்புகள் தெரிவது, தங்கள் ஆணாதிக்கத்துக்கு இழுக்கு என்று கருதுகின்ற ஆணாதிக்க கலாச்சாரம் பேசும் வக்கிரம் இங்கு இதை நீக்குகின்றது. பெண் குழந்தைகளின் சட்டையைத் தூக்கி, ஏதாவது புதிதாக மாதவிடாய் வருகின்றதா என்று தேடிப் பார்த்து, சாமத்தியச் சடங்கு செய்யும் இந்தக் கலாச்;சாரக் கூட்டம் தான் இதையும் செய்கின்றது. இதைச் செய்யும் தமிழ் தேசிய பாசிச கூட்டம் பேசும் மொழி எது தெரியுமா? பெண் உறுப்பை மையப்படுத்தி, அதை இழிவுபடுத்திய தூசணம் தான். காட்சி முழுமையாக வெளியிடும் போதும், எம்மைத் திட்டும் போதும் சரி, போடும் பின்னூட்டங்கள் அதே பெண்ணின் பெண் உறுப்பைக் குறித்த வக்கிரமான இழிவான பச்சையான தூசணம் தான்.
இவர்கள்தான் பெண் உறுப்பை மறை என்று பேசுகின்றனர். தன் சொந்த ஆணாதிக்க வக்கிரமான பார்வை சார்ந்து, மக்களும் அப்படித்தான் பார்ப்பதாக பார்க்கின்றது.

செத்துப்போன பெண்ணின் பெண் உறுப்பைக் கூட வக்கிரமாக பார்க்கின்ற தன் பார்வையைக் கொண்டும், அதை தான் சித்தரிக்கின்ற அதே வக்கிரமான கண்ணோட்டம் சார்ந்தும், மற்றவர்கள் அப்படிதான் பார்ப்பார்கள் என்று அதே முத்திரையைக் குத்தி ஆணாதிக்க பாசிச ஆட்டத்தைப் போடுகின்றனர். புலியல்லாத அனைத்தும், துரோகம் என்ற அதே பணி பாசிச அரசியல். பெண் உறுப்பு என்றால், பாலியல் ஊடாக பார்க்கின்ற அதே வக்கிர புத்திதான். இறந்த பெண்களின் உடுப்பைக் கூட திறந்து ரசிக்கின்ற அதே ஆணாதிக்க இராணுவ வக்கிரம் தான், இங்கும் அதே தன் பார்வையுடன் தன்னை வெளிப்படுத்தி அதை மூடுகின்றது. சாமத்திய சடங்குக்காக பெண் உறுப்பில் புதிதாக மாதவிடாய் வருகின்றதா என்று தேடும் கூட்டம், அடுத்த நிமிடம் பெண்ணை சிறைவைக்கின்ற அதே ரகம் தான் இதுவும்.
இப்படி காட்சிகள் வெட்டப்படுவதும், நீக்கப்படுவதும், பகுதியை வெளியிடுவதும், எல்லா உண்மைகளையும் மூடிமறைக்க முனையும் புலி அரசியலின் ஒரு தொடர்ச்சி. இசைப்பிரியா கொல்லப்படும் காட்சி கூட, இந்த வீடியோவில் இருந்து வெட்டப்பட்டதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. எது வரை வெட்டினார்கள்? புலத்துப் புலிகள் பல போர்க்குற்ற ஆவணங்களை தொடர்ந்து மூடிமறைத்துவிட்டதையே, இவை எடுத்துக்காட்டுகின்றது.

இது போன்ற பல வீடியோக்கள், காட்சிகள் எம் மக்கள் முன் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கும் என்பது மட்டும் உண்மை. இவை போன்றவைகளை மேற்கத்தைய தங்கள் எஜமானர்களின் கால்களை நக்கியபடி அவர்களிடம் கொடுத்து, அதை மூடி இருப்பார்கள் என்பதும் உண்மை.

வீக்கிலீக்ஸ் யாருக்கு எதிராக உண்மைகளைப் பகிரங்கப்படுத்தி இன்று போராடுகின்றதோ, அவர்களிடம் நாக்கை தொங்கவிட்டுக் கொண்டுதான் புலத்துப் புலிகள் அனைத்து உண்மைகளையும் தொடர்ந்து புதைக்கின்றனர். சொந்த மக்களை அவர்கள் நம்புவது கிடையாது. தன்னையொத்த பாலியல் வக்கிரம் ஊடாகத்தான் பெண் பாலியல் உறுப்புகளை மக்கள் பார்ப்பார்கள் என்று கருதி, அதை வெட்டி நீக்குகின்ற வக்கிரமான மக்கள் விரோத கூட்டம் தான் புலிக் கூட்டம்.

தொடர்ந்து புலித்துப் புலிகள் மூடிமறைக்கும் போர்க்குற்ற ஆவணங்கள் உங்கள் கைககளில் இருந்தால், அதை தாருங்கள் நாங்கள் வெளியிடுகின்றோம். போர்க்குற்றத்தை மூடிமறைக்கும் புலிகளின் கபடத்தனத்துடன் கூடிய நடிப்பும் தான், போர்க்குற்றம் பற்றிப் பேசுகின்றது. அது தன்னை மூடிமறைக்கவே, அதைப் பேசுகின்றது.

போர்க்குற்றம் பற்றிய புலித்தனம் என்பது, புலத்துப் புலிகள் காட்டும் சில காட்சிகளை சார்ந்ததல்ல. இவை பொய்யும், புரட்டுகளும் உள்ளடங்கிய, ஒரு பக்கம் மட்டும்தான். இந்த உண்மையை புரிந்து, போர்க்குற்றத்தை மக்கள் தங்கள் சொந்தப் பலத்தில் நின்று போராட வேண்டிய காலமிது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com