தென் கொரிய உளவாளிக்கு சீனாவில் கடும் தண்டனை.
சோல் வட கொரியா பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரித்ததற்காக சீனாவில் பிடிபட்ட தென் கொரிய ராணுவ அதிகாரி ஒருவருக்கு சீனா 14 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. வட கொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களைப் பற்றிய தகவல்களை திரட்ட முயன்ற தென் கொரிய ராணுவ அதிகாரி சோவ், சீனாவின் சென்யாங் நகரில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
வட கொரியாவின் உளவு ரகசியங்களைப் பற்றி கூறுபவர் போல் நடித்த சீன ராணுவ அதிகாரியிடம் அவர் சிக்கிக் கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக கொரியப் பத்திரிகைத் தகவல் கூறியது.
அந்த ராணுவ அதிகாரியை தென் கொரியாவுக்கு திருப்பி அனுப்புமாறு தென் கொரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும் சீனா அவருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கொள்ளை, மோசடி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள தென் கொரிய நாட்டவர்களிடம் சீனா கடுமையாக நடந்துக் கொள்ளக்கூடும் என்று தென் கொரிய உளவுத் துறையினர் அஞ்சுவதாக தென் கொரிய பத்திரிகைத் தகவல் கூறியது.
தென் கொரியாவை அச்சுறுத்தும் வட கொரிய வீரர்களின் சீருடை.
சோல் இரு கொரியாக்களின் எல்லையில் நிறுத்தப்பட்ட வட கொரிய வீரர்களில் சிலர் தென் கொரிய படை வீரர்களைப் போல சீருடை அணிந்திருப்பதாக தென் கொரிய தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.
எல்லையில் புதிய சீருடையில் காணப்படும் வட கொரிய சிறப்புப் படையினர் ராணுவப் பயிற்சியில் ஈடுபடக்கூடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தென் கொரிய வீரர்களைப் போல் அவர்கள் சீருடை அணிந்திருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும் இதனால் தென் கொரியப் படை வீரர்களுக்கு சீருடையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியதாக ஏஎப்பி தகவல் கூறியது.
இதற்கிடையில் தென் கொரியா அவசர அவசரமாக அதன் வீரர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கி வருவதாக சோல் தகவல்கள் கூறின. எல்லையில் வட கொரியாவின் சிறப்புப்படை வீரர்கள் 200,000 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லையில் கூடுதலாக 50,000 வீரர்களை நிறுத்த வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment