உளவாளியை விடுவிக்குமாறு அமெரிக்காவை நெருக்கும் இஸ்ரேல்
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற இஸ்ரேலிய உளவாளியை விடுவிக்கக் கோரி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக இஸ்ரேலிய முதல்வர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (21.12.2010) இஸ்ரேலிய முதல்வர் தெரிவித்துள்ள செய்தியில், எதிர்வரும் சில தினங்களுக்குள் அமெரிக்கச் சிறையில் உள்ள இஸ்ரேலிய உளவாளியான ஜோனதன் போலார்டை விடுதலை செய்யுமாறு கோரும் மக்கள் மனுவொன்றைத் தாம் ஒபாமாவிடம் கையளிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வாஷிங்டனில் இருந்து இதுவரை எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கரான போலார்ட் 25 வருடங்களுக்கு முன்னர் ஆயுள்தண்டனை விதிக்கப்பெற்றார். போலார்டின் வழக்கு இன்றுவரை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சுமுக உறவில் உரசலை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது
கடந்த திங்கட்கிழமை (20.12.2010) நெத்தன்யாஹூவுடனான சந்திப்பின் போது போலார்டின் மனைவி எஸ்தர், தன்னுடைய கணவனின் வழக்கு தொடர்பாக இஸ்ரேலிய அரசு இதுவரை பேணிவந்த மௌனத்தைக் கலைத்து, அவரை விடுதலை செய்வதற்கான பகிரங்க முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
1984 மே மாதம் முதல் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அரபுலகம் தொடர்பான அமெரிக்க உளவு நடவடிக்கைகள் குறித்த ஆயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஜோனதன் போலார்டுக்கு அமெரிக்கா ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
0 comments :
Post a Comment