விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்ச் லண்டனில் கைது.
செக்ஸ் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அசாஞ்ச் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஸ்வீடனில் செக்ஸ் புகார் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக ஸ்வீடன் இன்டர்போல் உதவியை நாடியது. இதைத் தொடர்ந்து லண்டனில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்டு மாதம் சுவீடனில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்கச் சென்ற ஜூலியான், இரு பெண்களுடன் அவர்களது விருப்பமின்றி பலவந்தமாக செக்ஸ் வைத்து கொண்டதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகர போலீசில் அவர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், தன்னை முடக்கவும், விக்கிலீக்ஸில் தகவல்கள் வெளி வராமல் தடுக்கவும் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சதி வலை பின்னி தன் மீது இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக ஜூலியான் ஏற்கனவே புகார் கூறியிருந்தார்.
இந் நிலையில் இந்த வழக்கில் இவர் மீது இன்டர்போல மூலம் ஸ்வீடன் அரசு கைது வராண்ட் பிறப்பித்ததது. இதைத் தொடர்ந்து அசாஞ்ச்சின் 1,30,000 டாலர்கள் அளவிலான பணத்தை சுவிட்சர்லாந்தை சேர்ந்த போஸ்ட் பைனான்ஸ் வங்கி முடக்கியது.
இது குறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கியில் கணக்கு தொடங்கும்போது ஜூலியான் தவறான இருப்பிட முகவரியை கொடுத்துள்ளார். ஆய்வின்போது, அது பொய் என்று தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதாக பொய்யான இருப்பிட சான்றிதழ் வழங்கியுள்ளார். இதனால் அவரை எங்களால் சந்தித்து தகவல்களை பரிமாற முடியவில்லை. எனவே, அவரது வங்கி கணக்கை முடக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இன்று லண்டனில் வைத்து ஜூலியான் அசாஞ்ச்சை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக தெற்கு இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த ஜூலியான் லண்டன் நீதிமன்றத்திலோ அல்லது போலீசாரிடமோ சரணடைவார் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால், அதற்கு முன்பாகவே அவரை இங்கிலாந்து போலீசார் கைது செய்துவிட்டனர். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், இதை சட்டரீதியாக ஜூலியான் சந்திப்பார் என்றும் அவரது வழக்கறிஞர் மார்க்ஸ் ஸ்டீபன்ஸ் கூறியுள்ளார். ஜாமீன் கோரி அவர் விரைவிலேயே மனு தாக்கல் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜூலியான் கைது செய்யப்பட்டாலும் மிரர் செய்யப்படும் விக்கிலீக்ஸ் இணையத்தளங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
0 comments :
Post a Comment