டக்ளசுக்கு பிரித்தானிய வீசா மறுப்பு. மூன்றாம் தரப்புக்கு பதில் கூறமுடியாது என்கிறது தூதரகம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் யாழ் மாவட்டத்திற்கான பாராளுன்ற உறுப்பினரும் அமைச்சருமான டக்களஸ் தேவானந்தாவிற்கு பிரித்தானியாவிற்கான வீசா மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பிரித்தானியாவில் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் அதற்கான காரணம் என்னவெனவும் டெய்லிமிரர் இணையத்தளம் பிரித்தானிய தூதரகத்தினை மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டபோது டக்கிளசிற்கு பிரித்தானியாவினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரித்தானிய தூதரகத்திற்கு டெய்லி மிரர் இணையத்தளம் விடுத்த கேள்விகளும் பதில்களும் இவ்வாறு அமைகின்றன.
கேள்வி : பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமென தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கும் சுமார் 400-500 தமிழர்களின் அழுத்தங்களுக்கு தேம்ஸ் வெல்லி பொலிஸார் பணிந்தது எப்படி?
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பதில்: பிரித்தானிய பொலிஸார் ஜனாதிபதிக்கு பொருத்தமான பாதுகாப்பு வழங்கியிருந்தனர். அவரின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானது என்ற கேள்வி ஒருபோதும் எழவில்லை.
கேள்வி : மேற்படி தடை காகிதத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதா?தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் அங்கத்தவர்கள் இலங்கைக்கும் அதன் ஜனாதிபதிக்கும் எதிராக எல்.ரி.ரி.ஈ.யின் கொடிகளை ஏந்தியவாறு பகிரங்கமாக செயற்படுவது எப்படி சாத்தியமானது?
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பதில்: பிரிட்டனில் 2001 ஆம் ஆண்டு எல்.ரி.ரி.ஈ. அமைப்பு ஓர் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது இத்தடையின் மூலம் கிரிமினல் குற்றமாகிறது. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் கூட்டமொன்றை தெரிந்துகொண்டே ஏற்பாடு செய்வது அல்லது அவ்வமைப்பின் ஆடைகளை அணிவது அவற்றின் பொருட்களை பகிரங்கமாக கொண்டு செல்வதும் கிரிமினல் குற்றமாகும். கிரிமினல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது பிரித்தானிய பொலிஸாரின் பொறுப்பாகும். பொலிஸாரின் செயற்பாட்டு விடயம் குறித்து பிரித்தானிய அரசாங்கம் கருத்துக் கூற இயலாது.
கேள்வி : ஜனாதிபதி ஒபாமா பிரிட்டனுக்கு விஜயம் செய்யும்போது அல்குவைதா அல்லது தலிபான்கள் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் பிரித்தானிய அரசாங்கமும் பிரித்தானிய பொலிஸும் இதேபோன்றே நடந்துகொள்ளுமா?
இக்கேள்விக்கு பதிலளிப்பதை தூதரகம் தவிர்த்துள்ளது.
கேள்வி : நட்புறவான பொதுநலவாய நாட்டின் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொள்ளும்போது அது தனிப்பட்ட விஜயமாக இருப்பினும் அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவது பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பில்லையா?
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பதில்: ஒக்ஸ்போர்ட் யூனியன் நிகழ்ச்சியை திட்டமிடுவதிலோ அதை இரத்துச் செய்யும் தீர்மானத்திலோ பிரித்தானிய அரசாங்கம் சம்பந்தப்படவில்லை. பொதுமக்கள் ஒழுங்கும் பாதுகாப்பு விவகாரமும் ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் பொலிஸார் தொடர்பானவையாகும்.
கேள்வி : தடைக்கு மத்தியிலும் எல்.ரி.ரி.ஈ. யினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கமும் பிரித்தானிய சட்ட அமுலாக்கல் அமைப்புகளும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகின்றன?
பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பதில்: கிரிமினல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது பிரித்தானிய பொலிஸாரின் பொறுப்பாகும். பொலிஸாரின் செயற்பாட்டு விடயம் குறித்து பிரித்தானிய அரசாங்கம் கருத்துக் கூற இயலாது.
கேள்வி : பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டங்களை மீறும் இத்தகைய சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ள பிரித்தானிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது?
இக்கேள்விக்கும் பதிலிலளிக்கப்படவில்லை
கேள்வி : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயத்தினால் ஏன் விஸா மறுக்கப்பட்டது?பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பதில்: தனிப்பட்ட விஸா விண்ணப்பங்கள் குறித்து மூன்றாம் தரப்புக்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம் கருத்துக் கூற முடியாது.
0 comments :
Post a Comment