இந்திய இராணுவத்தினால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒருவரே ராஜீவ் மீது தாக்குதல் நடாத்தினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக திங்கட்கிழமை சாட்சியமளித்த அமைச்சர் முரளிதரன், அமைதிகாக்கும் படை எனும் பெயரில் இலங்கையின் வடகிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் பலரைக் கொன்றதற்காகவும், பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காகவுமே விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொல்வது என்று முடிவெடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அத்துடன் இந்திய இராணுவத்தினரால் அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டே அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிராபகரனும் பொட்டும் தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுத்ததாக தான் கருதுவதாகவும் முரளிதரன் ஆணைக்குழுவின் முன்னர் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது எனவும் தனது சாட்சியத்தில் கூறியுள்ள அவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவையும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்தமை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த நாட்டின் சகல தமிழ் மக்களினதும் உரிமைகளை உறுதி செய்வதற்கு மாகாணசபை முறைமை ஒரு சிறந்த திட்டம் என்ற போதிலும், பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு அவசியமில்லை எனவும் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதனால் மத்திய அரசாங்கத்தின் கீழ் அதிகாரங்கள் காணப்படுவதில் தவறில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள முரளிதரன் வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை அரசாங்கம் மீள் குடியேற்றி வருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வீணாக குற்றம் சுமத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எந்தவொரு மூலையிலும் காணிகளை கொள்வனவு செய்ய தமிழ் மக்களுக்கு உரிமை இருப்பதாக விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 600 பொலிஸார் மட்டக்களப்பில் கொல்லப்பட்டமை ஆகியவை தொடர்பில் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது சகாக்கள் 600 க்கும் அதிகமான பொலிஸாரைக் கொன்றுள்ளார்கள் என்று அவர் ஆணைக்குழுவின் முன்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் கொலைகள் நடைபெற்ற சமயத்தில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் முன்னைய அரசுகள் அனைத்தும் புலிகளைச் சமாளித்துச் செல்ல நினைத்தவேளை, மஹிந்த மட்டுமே அதை ஒழித்துவிடப் பாடுபட்டார் என்ற கருணா, இலங்கை போர்க் குற்றங்கள் பற்றி இப்போது பல நாடுகள் பேசுகின்றன, ஆனால் இறுதிக்கட்டத்தில் 3 இலட்சம் மக்களைக் கேடயமாக புலிகள் பாவித்தனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை விடுத்து மக்களுக்கு உதவவேண்டுமாம். மேலும், பாணந்துறையில் வேலுப்பிள்ளை ஐயா கட்டிய இந்துக்கோயிலொன்று உள்ளதாகத் தாம் அறிந்ததாகவும், ஆனால் அதை சிங்களவர்கள் உடைக்கவில்லை என்றும் சிங்கள புராணம் பாடியுள்ளார்.
இனியொரு காலத்தில் யுத்தம் வருவதற்குச் சாத்தியமே இல்லை என்று கூறிய கருணா, சிங்களவர்களின் மனதைப் புண்படுத்தாமல் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறென்றால்தான் ஒரு நல்லிணக்கம் ஏற்படுமாம். மேலும் தமிழ்க்கட்சிகள் கேட்கும் உரிமைகளையும் கருணா தேவையற்றவை என்கிறார். சிறிய நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைக் கேட்கக்கூடாதாம்.
0 comments :
Post a Comment