Thursday, November 25, 2010

வட, தென் கொரியாக்களிடையே போர் மூழும் அபாயம். உதவிக்கு விரைகின்றது USA போர்க்கப்பல்.

75 போர் விமானங்கள், 6 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவின் `யு.எஸ்.எஸ். வாஷிங்டன்' என்ற விமானம் தாங்கி போர் கப்பல், தென் கொரியாவின் யியோன் பியோங் தீவு நோக்கி நேற்று விரைந்தது. இதனால் பயங்கர போர் வெடிக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

வட கொரியா-தென் கொரியா நாடுகளின் எல்லையை ஒட்டிய கடல் பகுதியில், தென் கொரியாவுக்குச் சொந்தமான யியோன் பியோங் என்ற தீவு உள்ளது. இங்கு தென் கொரியாவின் ராணுவ தளமும் உள்ளது.

நேற்று முன்தினம், இந்த தீவின் மீது வட கொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. 50-க்கும் மேற்பட்ட குண்டுகளை அந்த தீவின் மீது பீரங்கிகள் கக்கின. இந்த தாக்குதலில் அங்கிருந்த ராணுவ வீரர்கள் 2 பேர் பலியானார்கள். சில வீரர்களும், பொதுமக்களுமாக 13 பேர் காயமடைந்தனர். பல வீடுகளும் அலுவலகங்களும் இடிந்து சேதம் அடைந்தன. பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டது.

தென் கொரியாவும் உடனே பதிலடி கொடுத்து தாக்கியது. இதனால், வட கொரியா-தென் கொரியா இடையே கடும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பேரழிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவின் `யு.எஸ்.எஸ். வாஷிங்டன்' என்ற விமானம் தாங்கி போர் கப்பல் தென் கொரியாவின் யியோன் பியோங் தீவுக்கு நேற்று காலையில் விரைந்தது. அந்த கப்பலில் 75 போர் விமானங்களும், 6 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே உள்ள கடற்படை தளத்தில் முகாமிட்டு இருந்த அந்த கப்பல், ஞாயிற்றுக்கிழமை யியோன் பியோங் தீவை சென்று அடையும் என்றும், தென் கொரியா கடற்படையுடன் இணைந்து போரில் ஈடுபடும் என்றும் தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், தென் கொரியாவுடன் சேர்ந்து நாங்கள் செயலாற்ற இருப்பது பாதுகாப்புக்காக மட்டுமே என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க போர் கப்பல் தென் கொரியாவுக்கு ஆதரவாக விரைந்துள்ளதால், வட கொரியாவின் தீவிர ஆதரவு நாடான சீனா, வட கொரியாவுக்கு ஆதரவாக போரில் இறங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருப்பதாக உலக நாடுகள் கருதுகின்றன.

இதன் காரணமாக பெரிய அளவில் போர் வெடிக்குமோ? என்ற அச்சம் உலக நாடுகளிடையே புருவத்தை உயரச் செய்துள்ளது.

வடகொரியாவுக்கு ஒபாமா கடும் கண்டனம்

தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியா-தென்கொரியா இடையே கடந்த 1952 மற்றும் 1953-ம் ஆண்டுகளில் போர் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலான கடல் எல்லையை ஐ.நா. சபை நிர்ணயித்தது.

ஆனால், வடகொரியா தன்னிச்சையாக ஒரு எல்லையை நிர்ணயித்தது. இதனால், வடகொரியா-தென்கொரியா இடையே அடிக்கடி எல்லை தகராறுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

கடந்த மார்ச் மாதம், தென்கொரிய போர்க் கப்பல் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது. அதற்கு வடகொரியா மீது தென்கொரியா குற்றம் சாட்டியது. ஆனால் அதை வடகொரியா மறுத்தது.

இந்நிலையில், தென்கொரியா மீது வடகொரியா நேற்று திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. இருநாட்டு எல்லையை ஒட்டி, தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள யியோன்பியோங் தீவின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. 50 குண்டுகள் சரமாரியாக வீசப்பட்டன.

பெரும்பாலான குண்டுகள், ஒரு ராணுவ தளத்தில் விழுந்தன. குண்டு வீச்சு காரணமாக, தீவில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் தீவின் மேலே, கரும்புகை வெளிவந்தபடி இருந்தது. அங்கு முகாமிட்டிருந்த 2 தென்கொரிய கடற்படை வீரர்கள் பலியானார்கள்.

தாங்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது, அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கும் வகையில், வடகொரியா இத்தாக்குதலை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தீவில் வசிக்கும் மக்களுக்கு தென்கொரிய ராணுவ அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். வீடுகளை விட்டு வெளியேறி, பதுங்கு குழிகளில் தங்கிக் கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த தாக்குதலுக்கு, தென்கொரிய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். அவர்கள் துப்பாக்கியால் 80 தடவை சுட்டனர். இதற்கு வடகொரியா தரப்பில் சேதம் ஏற்பட்டதாக தகவலில்லை.

இந்நிலையில், தென்கொரிய அதிபர் லீ மையுங் - பக்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது நிலையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேலும், வடகொரியா முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com