ஜனாதிபதி பதவிப்பிரமாணத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள். UNP புறக்கணிப்பு.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாவது தவணைக்காலத்திற்கான பதவியேற்பினை எதிர்வரும் 19ம் திகதி மேற்கொள்ளவுள்ளார். இந்நிகழ்வினை ஒட்டி மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளுக்காக 11 ஆயிரம் காவல்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ள தினத்தில் மழை பெய்யும் பட்சத்தில், அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பதவியேற்பு நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எவராவது கலந்து கொண்டால் அது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிகால பதவியேற்பு வைபவம் கட்சி பேதமின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென அரச நிர்வாக மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவிக்கின்றார். இதற்கான வேலைத் திட்டம் இடம்பெறும் காலக்கட்டத்தில் விமர்சனங்களை தவிர்க்குமாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள விமர்சனங்கள் அடங்கிய பதாகைகளை அகற்றுமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டர்.
0 comments :
Post a Comment