Wednesday, November 17, 2010

ஜே.வி.பி. யினர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்! PLOTE

அண்மையில் யாழ் சென்ற ஜேவிபி உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச செயலகம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

யுத்த காலங்களில் காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்படோர் குறித்த பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஜனாநாயக ரீதியிலான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

யுத்தம் முடிவுற்று ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஜனநாயக சூழல் இன்னமும் முழுமையாக திரும்பவில்லை. பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், கணவன்மாரை இழந்த விதவைகளென தமிழ் சமூகம் கண்ணீரும் கவலையுமாக வாழுகின்றனர். இந்த மக்களின் வேதனைகளுக்கு நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நடாத்துவதற்கு வடமாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வேறு எந்த தமிழ் கட்சிகளும் முன்வராத நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை வரவேற்கின்றோம். தமிழ் மக்கள் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாட்டில் எமக்கு உடன்பாடு இல்லாத போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நியாயம் கேட்டு ஜனநாயக ரீதியாக அவர்கள் நடத்திய போராட்டத்தினை நாம் ஆதரிக்கின்றோம்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக ஜே.வி.பி.யினர் கொண்டிருக்கும் கொள்கையில் எமக்கு உடன்பாடு இல்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 1987ம் ஆண்டு இணைக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களை (வடகிழக்கு மாகாணங்கள்) பிரிப்பதற்கு நீதிமன்றம் சென்றவர்கள் ஜே.வி.பி.யினர். இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, அடிப்படை உரிமையையும் நிராகரித்தவர்கள். ஆகவே அரசியல் ரீதியாக எமது கட்சிக்கும் அவர்களுக்கும் இடையில் அதிக முரண்பாடுகள் உள்ளன.

நாம் எவ்வாறு சிங்கள மக்களின் உயிர்களுக்கு சேதம் விளைவிக்காது இருந்தோமோ, அதே போன்று ஜே.வி.பி.கட்சியினரும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஒருபோதும் தீங்கு இளைத்திருக்கவில்லை. ஜே.வி.பி.கட்சியினர் மேற்கொள்ளும் ஜனநாயக மக்களின்
அடிப்படை உரிமைகளுக்காக போராட்டங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகள் எப்போதுமே தமது ஆதரவை நல்கும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம்.

ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அனுதாபம் காட்டுவதற்கு பதிலாக தமிழ் மக்களின் செறிவினை குறைக்கும் திட்டத்தில் குடிபரம்பலை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் ஜனநாயக ரீதியாக போராடும் உரிமையையும் மறுதலித்து வருகின்றது. கடந்த 15ம் திகதி ஜே.வி.பி.கட்சியினரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஜனநாயக வழிமுறை ஆர்ப்பாட்டத்தினை குழப்பும் முகமாக அரச இயந்திரம் செயற்பட்டு அடாவடித்தனம் புரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவ் கட்சியின் தொண்டர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அரசின் இந்த அராஜக செயலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச கிளைகள்
வன்மையாக கண்டிக்கின்றது.

அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்



தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.
சர்வதேச செயலகம்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com