பிரபாகரனின் இடத்திற்கு இரண்டாவது பிரபாகரனின் ஆட்சியா நாட்டிலுள்ளது? சுனில்.
நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பாராளுமன்றில் இடம்பெற்ற வாதத்தின்போது பேசிய ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெந்தி, நாட்டில் அபிவிருத்தியை மக்கள் அனுபவிப்பதற்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப்படவேண்டும் எனவும் அவ்வுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் இன்று நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் எனவும் இந்நாட்டில் இன்று இடம்பெற்றுக்கொண்டிருப்பது பிரபாரனின் ஆட்சியா அன்றில் அவரிடத்திற்கு இரண்டாமவரின் ஆட்சியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அங்கு அவர் பேசுகையில், இன்று கிழக்கின் உதயம் வடக்கின் வசந்தம் என்றெல்லாம் மிகவும் அழகான சொற்பதங்கள் பாவிக்கப்படுகின்றது. ஆனால் இவ்வாறான விடயங்களை அனுபவிப்பதற்கு மக்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டும். ஆனால் இன்று அது இல்லை. தனது பிள்ளை தொடர்பாக தாய்க்கு முறைப்பாடு செய்ய முடியாத நிலை, ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது எண்ணங்களை எழுதமுடியாத நிலை, இந்நாட்டின் ஜனநாயக உரிமை உறுதி செய்திருக்கின்ற தமது எண்ணங்களை வெளியிடக்கூடிய விளம்பரங்களை ஒட்ட இங்கு சுதந்திரம் கிடையாது.
நான் இந்த பாராளுமன்றிலிருந்த 12 வருடகாலங்களில் 10 வருடங்களும் இந்நாட்டின் யுத்தம் முடிவடைந்து நான் எப்போது வடபகுதிக்கு செல்வேன் என கனவு கண்டுகொண்டிருந்தவன். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது இந்த பாராளுமன்றில் வாத விவாதங்கள் இடம்பெறுகின்றபோது எம்முடனிருந்து காலஞ்சென்ற பா.உ ரவிராஜ் அவர்கள் ஹந்துநெந்தி போன்றோர் இங்கிருந்து சத்தம் போடுவதில் எந்த பயனுமில்லை உண்மையான நிலையை யாழ்பாணத்தில் வந்து நேரில் பார்வையிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். கொடிய பயங்கரவாத யுத்தத்தினால் இந்த நாடு ஓமந்தையிலிருந்து இரண்டாக பிரிந்திருந்தது. ஆனால் இன்று யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி இந்த பாராளுமன்றில் கூறியதுபோல் தமிழ் மக்களுடன் ஒன்றிணைவதும் அவர்களது துன்பங்களை கணக்கிலெடுத்து செயற்படுவதும் எமது கடமையாகும். ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது? அன்று பிரபாகரனின் ஆட்சிபோன்றதோர் இராணுவ ஆட்சியே இன்றும் காணப்படுகின்றது.
இன்று இங்கிருந்து அமைச்சர்கள் வடபகுதி சென்று தமது காரியாலங்களை அமைத்து வருகின்றார்கள் அக்கட்டிடங்களுக்கு கூரைகள் இல்லை. அண்மையில் நாமல் ராஜபக்ச அவர்கள் நிர்மானித்துவந்த இளைஞர் விவகார அமைச்சின் காரியாலயத்தை நான் என் கண்களால் பார்வையிட்டேன், அதற்கு கூரை கிடையாது. இவ்வாறான கூரைகளற்ற வீடுகளிலும் , அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகரக்கூடாரங்களிலுமே தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்றனர். இவற்றை நான் என்கண்களால் பார்த்தேன்.
இந்நிலைமைகளை பார்வையிடத்தான் நாம் யாழ் சென்றோம். புலிகளில் குற்றஞ்செய்தவர்களை நிரபராதிகளாக்குவதற்கு நாம் அங்கு சென்றிருக்வில்லை. அவர்களில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். அது நீதிமன்றினூடாக வழங்கப்படவேண்டும். அது எமது விடயமல்ல. நாம் சென்றது அங்குள் தமது பிள்ளைகளையிழந்த தாய்மாரையும் : தனது கணவன்மாரையிழந்த மனைவியரையும் சந்திக்கவே சென்றிருந்தோம். அவர்களது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும். தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதை அறிய அவர்களுக்கு உரிமைஉண்டு.
தமது உறவுகளை இழந்த தாய்மாரும் : கணவன்மாரை இழந்த மனைவியரும் புகைப்படங்களை கைகளில் ஏந்தியவாறு ஒவ்வொரு முகாம் முகாமாக ஏறியிறங்குகின்றனர். இது ஒர் அநியமான செயலாகும். அவர்கள் இருந்தால் இருக்கின்றார்கள் அல்லது இறந்து விட்டார்கள் என்ற செய்தியை நேரடியாக சொல்லுங்கள் அத்துடன் விடயம் முடிகின்றது. இதே நிலைதான் 89 களில் எமது பெற்றோருக்கும் ஏற்பட்டிருந்தது. எனவே இவ்வியடம் முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவே சமாதானத்தை உறுதிசெய்யும். இன்று உலகம் முன்னேறியுள்ளது. உங்கள் பாதுகாப்பில் உள்ளவர்கள் பெயர்களை இணையத்தளங்கள் ஊடாக அல்லது : பிரதேச செயலகங்கள் ஊடாக வெளிப்படுத்துங்கள்.
நாட்டில் இன்று ஜனாநாயக் எங்குள்ளது. நாம் மக்களின் பிரதிநிதிகள் யாழ்பாணம் சென்று மக்களை சந்திக்கமுடியாது. நாம் அங்கு சென்றபோது காடையர்களால் தாக்கப்பட்டோம். அதன் பழியை தமிழ் மக்கள் மீது சுமத்தி மீண்டும் இனவாதத்தை விதைக்க அரசு முற்படுகின்றது. நாம் திட்டவட்டமாக கூறுகின்றோம். எம்மீது தாக்குதல் நாடாத்தியது தமிழ் மக்கள் அல்ல. அது புலனாய்வுப் பிரிவினரே. நாம் சென்றவழிகளில் எம்மை மோட்டார் சைக்கள்களிலும் ஆட்டோக்களிலும் துரத்தி வந்தனர். இந்த பாராளுமன்றில் முன்பிருந்த உறுப்பினரான பத்மினி அவர்களது வீட்டிற்கு சென்றால் அங்கு பாதுகாப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் அவருக்கு தொலைபேசியில் அவசர அவசரமாக அறிவித்து விட்டு நாம் அங்கு சென்று பதுங்கினோம். அனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரது வீடு என்றுகூட பாராமல் காடையர்கள் அங்குவந்து தாக்கினர். அப்போது அங்கு சூழஇருந்த தமிழ் மக்களே எம்மை காப்பாற்றினர். தமிழ் மக்கள் அங்குவந்திருக்காவிட்டால் இன்று இந்த பாராளுமன்றில் எனது உடலே இருந்திருக்கும்.
ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் பாதுகாப்பு தடைகள் அமைக்கப்பட்டுள்ள யாழ்பாணத்தில் இது எவ்வாறு சாத்தியம். நாம் அங்கு பிற்பகல் ஏழு மணிக்கு தாக்கப்பட்டோம், எட்டு மணிக்கு யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொண்டிருக்கும்போது : அதாவது எமது வாய்முறைப்பாடுகளை பொலிஸார் பதிவு செய்வதற்கு முன்னர் கொழும்பிலிருந்து பாதுகாப்புக்கான மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஷ்மன் குலுகல்ல ஜேவிபி யினர் மீது யாழ் மக்கள் தாக்குதல் நாடாத்தியதாக தெரிவித்துள்ளார். நாம் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுக்குமுன்னர் யார் தாக்கினர் என்பது அவருக்கு எவ்வாறு தெரியும்.
தயவு செய்து நான் இங்கு கூறுகின்றேன். எமது உடலிலிருந்து உதிரம் வடிந்ததையிட்டு நான் கவலையடையவில்லை. ஆனால் தமிழ் மக்கள் எம்மைத் தாக்கினார்கள் என இந்நாட்டில் இனவாதத்தை தூண்டவேண்டாம். இனவாதம் இந்நாட்டுக்கு அளித்துள்ள பரிசுகள் போதும். இனியாவது நாம் இனவாத பேயைத் விரட்டியடிப்போம் என அவரது நீண்ட உரை தொடர்ந்து சென்றது.. மிகுதி நாளை.
0 comments :
Post a Comment