மாகம்புர துறைமுகம் மஹிந்த ராஜபக்ச துறைமுகமானது.
ஹம்பாந்தோட்டையில் சீன அரசின் நிதியுதவியில் நிர்மானிக்கப்பட்டுள்ள துறைமுகம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. அத்துறைமுகம் திறந்து வைக்கப்பட்டபோது அது மஹிந்த ராஜபக்ச துறைமுகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிறந்த தினமான இன்று துறைமுகத்திற்கு ஜெட்லைனர் எனும் முதலாவது கப்பல் வந்துள்ளது. இக்கப்பல் உள்நுழைவதற்கான சமிக்கையினை ஜனாதிபதி வழங்கினார்.
இது தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய வெள்ளை யானை என தெரிவிக்கின்றார். அத்துடன் அங்குவந்திருப்பதாக கூறப்படுகின்ற ஜெட்லைனர் கப்பலில் தான் இரு மாதங்களுக்கு முன்னர் நானும் சென்றிருக்கின்றேன், இக்கப்பலில் தான் முன்னாள் அமைச்சரான உப்புலாங்கனி மாலகமகே மகளின் திருமணம் இடம்பெற்றத: இது உள்ளுரில் உள்ளதோர் ஆடம்பரக் கப்பல் என்றும் இக்கப்பலிலேயே நாட்டிலுள்ள பிரபல தனியார் நிறுவனங்களின் விசேட நிகழ்வுகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்ட அவர் இக்கப்பல் சர்வேதச வியாபாரக்கப்பல் என மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது, இது சர்வதேசத் துறைமுகம் இல்லை. அப்படி சொன்னால் அது பொய்யான விடயம். நான் மீண்டும் சொல்கிறேன். ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பது இலங்கையில் இதுவரைகாலமும் அமைக்கப்படாத பெரிய வெள்ளை யானை.
நான் அரசாங்கத்திடம் ஒன்று கேட்கிறேன். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சர்வதேச கப்பல்களை நிறுத்துவதற்கு சர்வதேச காப்புறுதி நிறுவனங்களின் காப்புறுதி உள்ளதா? வேறு நாட்டினுடைய கப்பல் ஒன்று துறைமுகத்திற்கு வருவதாயின் அந்தத் துறைமுகம் சர்வதேச காப்புறுதி நிறுவனத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.
எனவேதான் சொல்கிறேன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு ஏன் ஹம்பாந்தோட்டை மக்களுக்குக் கூட நன்மை கிடைக்காது. எனக் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment