Friday, November 12, 2010

விடுதலைப் புலிகள் மீதான தடை உறுதி

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்து விசாரணை தீர்ப்பாயம் முடிவை அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த விடுதலைப்புலிகள் மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நீடிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து, இந்தியாவில் இனி இந்தத் தடைக்கான அவசியம் இல்லை எனக் கூறி வைகோ மற்றும் நெடுமாறன் உள்ளிட்ட தரப்பினர் வாதாடி வந்தனர்.

இது தொடர்பான விசாரணை தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணை தீர்ப்பாயங்களின் போது, விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் மீதான தடை அர்த்தமற்றது என வைகோ மற்றும் நெடுமாறன் உள்ளிட்ட தரப்பினர் வாதிட்டனர்.

எனினும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் இன்னும் தொடர்வதாகவும், எனவே தடை அவசியம் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டு வந்தது.

தொடர்ந்து நடைபெற்று வந்த தீர்ப்பாய விசாரணைகளின் முடிவில் தற்போது நீதிபதி விக்ரம் ஜீத்ஸன், தடை நீடிப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், இந்தியாவில் தொடரும் குற்றச் செயல்கள் மற்றும் பிரிவினை வாதக்கருத்துக்கள் தொடர்பான செய்திகளையும் அரசு சமர்பபித்த ஆவணங்களையும் கருத்தில் கொள்ளும் போது விடுதலைப் புலிகள் மீதான தடை அவசியம் என நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதன் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள், நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் மத்திய அரசு சமர்ப்பித்துள்ள ஆதாரங்களின் மூலம் விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் இயங்குவது வெளிப்படுவதாகவும் நீதிபதியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment