தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர் ஒத்திகை தொடக்கம். ஏவுகணைகள் தயார் நிலையில்.
மஞ்சள் கடல் பகுதியில் தென்கொரியா மற்றும் அமெரிக்க கூட்டுப் படையினர் நேற்று போர் ஒத்திகையை தொடங்கினர். அந்த பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயார் நிலையில் வட கொரியா நிறுத்தி வைத்திருப்பதால் கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வட கொரியா தாக்குதல்
மஞ்சள் கடலில் உள்ள தென் கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வட கொரியா தாக்குதல் நடத்தியது. அதில், 4 கடற்படையினர் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
வட கொரியாவுக்கு ஆயிரம் மடங்கு பதிலடி கொடுக்கப்போவதாக தென் கொரிய கடற்படை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தென் கொரியாவின் ராணுவ மந்திரியும் நீக்கப்பட்டு புதிய மந்திரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். வடகொரியா மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்குமாறு தென் கொரிய ராணுவத்துக்கு அதிபர் லீ மியுங் உத்தரவிட்டு இருக்கிறார்.
அணுசக்தி போர்க்கப்பல்
இதற்கிடையே, தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கி உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான ஜார்ஜ் வாஷிங்டன் என்ற அணுசக்தி போர்க்கப்பலை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்தது. விமானம் தாங்கி போர்க்கப்பலான அதில், 75 போர் விமானங்களும் 6 ஆயிரம் வீரர்களும் உள்ளனர். தென் கொரியாவுடன் போர் ஒத்திகையில் ஈடுபடவே இந்த கப்பல் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், வட கொரியா கடும் ஆத்திரம் அடைந்தது. கொரிய தீபகற்ப பகுதியை போர் விளிம்புக்கு கொண்டு செல்ல தென் கொரியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியது. அதே நேரத்தில், வட கொரியாவுடன் சமதானம் பேசுமாறு அதன் நட்பு நாடான சீனாவுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. எனினும், இரு நாடுகளுக்கு இடையே கோபமான எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தன.
மக்கள் வெளியேற்றம்
இந்த சூழ்நிலையில், திட்டமிட்டபடி மஞ்சள் கடல் பகுதியில் நேற்று போர் ஒத்திகை தொடங்கியது. அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் அணுசக்தி போர்க்கப்பல் மற்றும் தென் கொரியாவின் இரண்டு நாசகார போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பலை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் போர் விமானம் போன்றவையும் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.
முன்னதாக, இயான்பியாங் தீவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேறுமாறு தென் கொரியா உத்தரவிட்டது. மேலும், செய்தி சேகரிப்பதற்காக அங்கு முகாமிட்டிருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகளை பதுங்கு குழிகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தியது. எனினும், சில மணி நேரங்களில் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. போர் ஒத்திகை தொடர்ந்து நடைபெறுகிறது.
அதே நேரத்தில், இந்த ஒத்திகையில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவில் இருந்து கூடுதலாக 4 போர்க் கப்பல்கள் மஞ்சள் கடல் பகுதிக்கு வருவதாக கொரியாவில் உள்ள அமெரிக்க படைகளின் உயர் அதிகாரி நேற்று தெரிவித்தார்.
வடகொரியா கடும் எச்சரிக்கை
போர் ஒத்திகை தொடங்கப்பட்ட தகவலை அறிந்ததும் வட கொரியாவும் பதில் நடவடிக்கையை தொடங்கி விட்டது. இயான்பியாங் தீவை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருக்கிறது. மஞ்சள் கடலில் உள்ள ஏவுகணை ஏவுதளங்களில் இந்த ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றன. வடகொரியா கடல் எல்லைக்குள் ஏதாவது அத்துமீறல் நடந்தால் கடுமையான ராணுவ பதிலடி கொடுக்கப்படும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.
வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், `கொரிய தீபகற்பத்தில் நடைபெறும் போர் ஒத்திகையானது, மற்றொரு மன்னிக்க முடியாத அத்துமீறல் ஆகும். கொரியாவின் மேற்கு கடல்பகுதியில் தன்னுடைய வேலையை அமெரிக்கா காட்டினால், அதன் தொடர்ச்சியாக என்ன விளைவுகள் நடைபெறும் என்று யாராலும் கணிக்க முடியாது. எங்களுடைய எல்லைக்குள் 0.01 மி.மீட்டர் அளவுக்கு கூட அத்துமீறலை அனுமதிக்க முடியாது' என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே, வட கொரியா வசம் ஏராளமான அணுகுண்டுகள் இருக்கின்றன. மேலும், சீனாவின் பலத்த ஆதரவும் அந்த நாட்டுக்கு உள்ளது. எனவே, கொரியாவில் போர் அபாயம் வலுத்து வருகிறது.
சீனா சமரச முயற்சி
எனினும், இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்யும் முயற்சியில் சீனா இறங்கி உள்ளது. இது தொடர்பாக, தென் கொரியாவில் சீன பிரதிநிதிகள் குழு சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அதிபர் லீ மியுங்கை அந்த குழுவினர் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக, வட கொரிய பாராளுமன்ற சபாநாயகர் சோ டவ்போக் தலைமையிலான குழுவினர் நாளை சீனா செல்கின்றனர்.
சமரச முயற்சி குறித்து சீன அரசு செய்தி நிறுவனம் ஜின்குவா கூறுகையில், "கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் தற்போதைய நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. பதற்றத்தை தணிக்க கூட்டாக முயற்சி மேற்கொள்ள இரு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இரு தரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தையானது ஆழமானதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment