Thursday, November 25, 2010

புலிகள் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். மேலுமோர் வன்னி டாக்டர்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அராயும் பொருட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அமர்வு நேற்று கொழும்பில் குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்றபோது யுத்த காலத்தில் வன்னியில் கடமையாற்றிய டாக்டர் சிவபாலன் தமது கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற முற்பட்ட மக்களை புலிகள் சுட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து அங்கு தெரிவிக்கையில் .. நான் 1996ம் ஆண்டிலிருந்து 2009 மே 19ம் திகதி வரை வன்னியில் கடமையாற்றியுள்ளேன். அப்போது நாம் பல தரப்பட்ட சிக்கல்களுக்கும் முகம் கொடுத்துள்ளோம். மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்வதை விரும்பவில்லை என்பதை எப்போதோ உணர்ந்திருந்தேன். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றபோது புலிகள் இராணுவத்தை நோக்கி திட்டமிட்டமுறையில் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதல்களின் விளைவாக, இராணுவத்தினர் பதில்தாக்குதல் நாடாத்த நிர்பத்திக்கப்பட்டபோது மக்கள் இடையில் சிக்கி கஷ்டங்களை அனுபவித்தனர். மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு செல்வதை தடுப்பதற்கு இத்தாக்குதலை புலிகள் உபாயமாக பயன்படுத்தினர்.

மேலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற முற்பட்டபோது புலிகள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனாலும், பொது மக்கள் அவ்வாறு வெளியேறுவதை தவிர்த்து வந்தனர்.

எமது சேவைக்காலத்தில் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்தோம். அதாவது எமது வைத்தியசாலையை பல இடங்களுக்கு நகர்த்தவேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது. தற்காலிக வைத்தியசாலைகளை அமைத்து செயற்பட்டோம். பாடசாலைகளில் இயங்கினோம். கட்டில்கள் போதாமல் இருந்தன. மருந்துகள் கிடைத்தாலும் ஏனைய பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் பல சிரமங்களை எதிர்கொண்டோம் என தெரிவித்த அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சில வருமாறு.

கேள்வி: புலி உறுப்பினர்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளீர்களா?
பதில்: அவர்களுக்கும் சிகிச்சை அளித்துள்ளேன். சிகிச்சை என்று வரும்போது நோயாளி - டாக்டர் உறவு பேணப்படும்.

கேள்வி: நீங்களும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தகவல்களை யுத்த காலத்தில் வெளியிட்டீர்களா?

பதில்: இல்லை.

கேள்வி: டாக்டர் சண்முகராஜாவுடன் கடமையாற்றினீர்களா?
பதில்: அவருடன் கடமையாற்றினேன்.

கேள்வி: உங்கள் வைத்தியசாலை தாக்குதல்களின்போது சேதமடைந்ததா?
பதில்: ஒரு தடவை ஷெல்வீச்சு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. ஆனால், சிலர் சிறுகாயங்களுக்கு உட்பட்டனர். வைத்தியசாலைக்கு சேதம் ஏற்படவில்லை. அக்காலத்தில் வைத்தியசாலைக்கு அருகில் சண்டை நடைபெற்றது.

கேள்வி: யார் ஷெல்வீச்சை மேற்கொண்டது ?
பதில்: யார் என்று தெரியவில்லை.

கேள்வி: வைத்தியசாலைக்கு எவ்வளவு தூரத்தில் சண்டை நடைபெற்றது?
பதில்: 200 அல்லது 300 மீற்றர் தூரத்தில் நடைபெற்றது.

கேள்வி: முள்ளிவாய்க்கால் பகுதிக்கு எப் போது சென்றீர்கள்?
பதில்: 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்றேன். அக்காலத்தில் காயமடைந்தவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டனர். அதற்கு புலிகளிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. காயமடைந்தவர்களை மட்டுமே அனுமதித்தனர்.

கேள்வி: அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை அறிவித்தது. வேறு என்ன வழியில் மக்களை விடுவித்திருக்கலாம் என்று கருதுகின்றீர்கள்?
பதில்: மக்கள் என்ன கருதினர் என்பதனை நான் கூறுகின்றேன். அதாவது, இறுதிக் கட்ட யுத்தத்தில் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு அமைப்பு தம்மை மீட்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஐக்கிய நாடுகள் சபையாவது தம்மை மீட்கும் என்றும் மக்கள் எதிர்பார்த்தனர்.

கேள்வி: புலிகள் சிவில் உடையில் இருந்தனரா?
பதில்: புலிகள் அமைப்பில் சிறுவர்கள் இருந்தனர். பெற்றோர் அந்தச் சிறுவர்கள் தம்முடன் இருக்கவே விரும்பினர். அதன்படி அந்த சிறுவர்கள் சிவில் உடையில் இருந்தனர்.

கேள்வி: புலிகளிடம் மருந்துகள் இருந்தனவா?
பதில்: அவர்களிடம் அதிகளவு மருந்துகள் இருந்தன.

கேள்வி: எங்கிருந்து மருந்துகளை பெற்றனர் ?
பதில்: போர் நிறுத்த காலத்தில் மருந்துகளை பெற்று சேமித்து வைத்திருந்தனர். கொழும்பிலிருந்து மருந்துகளை பெற்றனர். சிலவேளைகளில் அரசாங்க மருந்துகளையும் எடுத்துக்கொண்டனர். மற்றும் புலிகள் தனியான வைத்தியசாலைகளை வைத்திருந்தனர்.

கேள்வி: அரசியல் தீர்வு தொடர்பில் என்ன குறிப்பிட்டீர்கள்?
பதில்: புலிகள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொள்வதாகவே தமிழ் மக்கள் கருதினர். ஆனால், 2006 ஆம் ஆண்டிலிருந்து புலிகள் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிர் மற்றும் சொத்துக்களை இழந்தனர். 20 வருடங்களாக இழப்புக்களை சந்தித்தனர்.

எனவே, இழப்புக்களை சந்தித்த அந்த மக்கள் திருப்தியுறும் வகையில் அரசியல் தீர்வு ஒன்று முன் வைக்கப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் அந்த மக்களுக்கு தேவைப்படுகின்றது. அந்த மக்களின் உணர்வுகளையே நான் கூறுகின்றேன். எனவே, இது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும்.

கேள்வி: நீங்கள் 1996 ஆம் ஆண்டிலிருந்து இறுதிக் கட்டம் வரை புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலா இருந்தீர்கள்?

பதில்: ஆம்.

கேள்வி: பொது மக்களை தடுத்துவைத்தி ருந்த புலிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினரா?
பதில்: பொது மக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இர ணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை சென்றடைய களப்பு ஒன்றை தாண்டவேண்டியிருந்தது. அதில் மக்களின் கழுத்துவரை நீர் இருந்தது.

கேள்வி: பொது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினரா?
பதில்: இராணுவத்தினர் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை.

கேள்வி: நீங்கள் புலிகளின் வைத்தியசாலையில் பணியாற்றினீர்களா?
பதில்: நான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றியிருந்தேன். அதனை புலிகள் நிர்வகித்தனர். வருமானத்துக்காக நான் அதில் கடமையாற்றினேன்.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் எத்தனை பேருக்கு சிகிச்சை அளித்துள்ளீர்கள்?

பதில்: சுமார் 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சையளித்துள்ளேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com