Friday, November 19, 2010

த.தே.கூ பின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசிர்வாதத்துடன் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான சத்தியபிரமாணத்தை செய்துகொண்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற அவர் உச்ச நீதின்ற ஆலோசனையின்பேரில் இன்று காலை 10.16 சுபநேரத்தில் பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா அவர்கள் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

நிகழ்வில் ஜனாதிபதியின் 3 புத்திரர்கள் மனைவி சிராந்தி ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டிருந்துடன் ஜனாதிபதிக்கு நேரடியாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக மலேசிய ஜனாதிபதி மொகமட் நசீட், பூட்டான் பிரதம மந்திரி Lyonchhen Jigmi Thinley மேலும் 40 இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கலாக 150 பிரமுகர்கள் இலங்கை வந்திருந்தனர்.

காலி முகத்திடலில் முப்படையினரினதும் பொலிஸாரினதும் அணி வகுப்பு மரியாதையும் மற்றும் யுத்த தளபாட பேரணியும் நடைபெற்றுள்ளது. தனது இரண்டாவது காலத்திற்கான பதவிப்பிரமாணத்தினை செய்து கொண்டபின்னர் அங்கு பேசிய அவர், எமது நாட்டை சிறிய நாடு என்று நான் கூறியதும் இல்லை, நினைத்ததும் இல்லை எனக் கூறினார்.

மேலும், எமது நாட்டை யாரால் சிறிய நாடு என்று கூறமுடியும், எமது நாட்டில் பெறுமதிமிக்க இயற்கை வளங்கள் உள்ளன திருகோணமலை துறைமுகம், சிகிரியா ஓவியம் என பல வளங்கள் எம் நாட்டினில் உள்ளன.

இதேவேளை, ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி, ஒரே தேசியக் கொடி, இங்கு எல்லோரும் சம உரிமையோடு வாழவேண்டும் அவைதான் எமது தேவை என உரை நடுவே ஓரிரு வார்த்தைகள் ஜனாதிபதி தமிழில் கூறினார்.


அதேநேரம் ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு நேர்எதிராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத்தளபதிக்கு தேர்தலில் பூரண ஆதரவை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இரண்டாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்பதை முன்னிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாரெனவும் சமிக்கை காட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்றக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கடிதமொன்றை நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவி ஏற்பதையிட்டு கூட்டமைப்பின் பாராட்டுக்களையும் நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பதவியேற்ற சமநேரத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியின் பாரியார் அனோமா பொன்சேகா கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயத்துக்குச் சென்று தனது கணவரின் உடல் நலம் காக்குமாறும், அவரின் விடுதலை வேண்டியும் தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com