Wednesday, November 10, 2010

2 குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்ற கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக் ஆகியோரை கடத்திச்சென்று கால்வாயில் தள்ளி கொலை செய்த வேன் டிரைவர் மோகன்ராஜ் என்கவுன்டரில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டான். விசாரணைக்காக வேனில் அழைத்துச் சென்றபோது, எஸ்.ஐ.க்களை சுட்டுவிட்டு மோகன்ராஜ் தப்ப முயன்றான். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டதில் மோகன்ராஜ் பலியானான்.

கோவை ரங்கே கவுடர் வீதி&மில்ரோடு சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித். இவரது மகள் முஸ்கான்(10), மகன் ரித்திக் (7). காந்திபுரம் சுகுணா ரிப் (வி) மெட்ரிக் பள்ளியில் முஸ்கான் 5ம் வகுப்பும், ரித்திக் 2ம் வகுப்பும் படித்து வந்தனர். தினசரி மாருதி வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். கடந்த மாதம் 29ம் தேதி காலை 8 மணிக்கு டிரைவர் மோகன்ராஜ் (25) வேனில் முஸ்கானையும், ரித்திக்கையும் அழைத்து சென்றான்.

பள்ளிக்கு செல்லாமல், குழந்தைகளின் தந்தை ரஞ்சித்திடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இருவரையும் கடத்தி சென்றான். பொள்ளாச்சி அங்கலகுறிச்சியில் உள்ள நண்பன் மனோகரனையும் அழைத்துக்கொண்டு உடுமலையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பகுதிக்கு சென்றனர். ரஞ்சித்துடன் போனில் பேச முயன்றுள்ளனர். தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பாலத்தில் இருந்து முஸ்கானையும், ரித்திக்கையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர்.

இதுபற்றி கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். குழந்தைகளின் பாட்டி கமலாபாய் தெரிவித்த தகவலின் அடிப்படையில் டிரைவர் மோகன்ராஜையும், கூட்டாளி மனோகரனையும் போலீசார் அன்றையதினம் மாலையில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மோகன்ராஜையும், மனோகரனையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று முன்தினம் மனு செய்தனர். குற்றவாளிகள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மூன்று நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி கோபிநாத் அனுமதி அளித்தார். விசாரணைக்கு பிறகு வரும் 11ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையிலான தனிப்படையினர் இரவு முழுவதும் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட உடுமலை சர்க்கார்புதூருக்கு 2 பேரையும் அடையாளம் காட்ட சொல்வதற்காக அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை 5 மணிக்கு மோகன்ராஜ் ஒரு ஐசர் வேனிலும், மனோகரன் மற்றொரு ஐசர் வேனிலும் அழைத்து செல்லப்பட்டனர். மனோகரன் சென்ற வேன் முதலில் சென்றது. பின்னால் சென்ற வேனில் மோகன்ராஜுடன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்&இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் இருந்தனர். வேனை டிரைவர் ஏட்டு அண்ணாதுரை ஓட்டினார். பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி ரயில்வே கேட் நீண்ட நேரமாக மூடப்பட்டிருந்ததால், மாற்றுப்பாதையாக வெள்ளலூர் வழியாக அழைத்து சென்றனர்.

அதிகாலை 5.30 மணிக்கு வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே சென்றபோது, மோகன்ராஜ் திடீரென சப்&இன்ஸ்பெக்டர் ஜோதி இடுப்பில் வைத்திருந்த ரிவால்வரை உருவி, ‘வேனை கேரளாவுக்கு திருப்புடா‘ எனக்கூறி டிரைவரை மிரட்டினான். அவனிடமிருந்து துப்பாக்கியை பறிக்க சப்&இன்ஸ்பெக்டர் ஜோதி முயன்றார். அப்போது அவரை மோகன்ராஜ் துப்பாக்கியால் சுட்டான். இதில், ஜோதியின் இடது கை தோள்பட்டையில் குண்டுபாய்ந்தது,

உரசிக்கொண்டு வெளியே சென்றது. இதை தடுத்த சப்&இன்ஸ்பெக்டர் முத்துமாலையையும் சுட்டான். முத்துமாலைக்கு இடதுபக்க வயிற்றில் குண்டு உரசிக்கொண்டு வெளியே சென்றது. தனது உடலில் காயம் பட்டாலும் சுதாரித்துக்கொண்டு முத்துமாலை இரண்டு ரவுண்ட் திருப்பி சுட்டார். உடன் இருந்த இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையும் ஒரு ரவுண்ட் சுட்டார். இதில், மோகன்ராஜின் வலதுபக்க கண், வலதுபக்க நெற்றி, இடதுபக்க மார்பு ஆகிய மூன்று இடங்களில் குண்டுபாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சுருண்டு விழுந்து மோகன்ராஜ் இறந்தான். மோகன்ராஜ் உடலில் பாய்ந்த குண்டு போலீஸ் வேனின் இரும்பு தகடுகளை கிழித்துக்கொண்டு மறுபுறமாக வெளியேறியது. வேன் முழுவதும் ரத்தக்கறை படிந்தது.

உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், அங்கு விரைந்தார். மோகன்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். காயமடைந்த சப்&இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் பீளமேடு கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரையும் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டார். தீவிர சிகிச்சை அளிக்கம்படி டாக்டர்களை கேட்டுக்கொண்டார். முதலில் கவலைக்கிடமாக இருந்த அவர்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு தேறினர். 6 மணி நேரம் கழித்து இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி கூறினார்.

மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட விஷயம், மற்றொரு குற்றவாளியான மனோகரனை வேனில் அழைத்து சென்ற போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சர்க்கார்புதூர் செல்லும் திட்டத்தை கைவிட்டு, பாதியிலேயே கோவைக்கு திரும்பினர். போத்தனூர் காவல்நிலையத்துக்கு மனோகரனை கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, ஆற்றில் தள்ளி கொலை செய்த மோகன்ராஜ் 12 நாட்களுக்கு பிறகு என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com