ஆஃப்கானில் இருந்து வெளியேற்றம்: 2014 இலக்கே தவிர கெடுவல்ல – நேட்டோ
ஆஃப்கானில் இருந்து அமெரிக்க உள்ளிட்ட நேச நாட்டுப் (நேட்டோ) படைகள் வெளியேற குறிக்கப்பட்டுள்ள 2014ஆம் ஆண்டு இறுதி என்பது இலக்கே தவிர, அதற்குள் வெளியேறிவிட வேண்டும் என்ற கெடு அல்ல என்று நேச நாட்டுப் பேச்சாளர் மார்க் செட்வில் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார் செட்வில், 2014ஆம் ஆண்டு இறுதிக்குள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்றாலும், அதனை உறுதி செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
தற்போது நேச நாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மிகவும் பாதுகாப்பான மாகாணங்கள் அடுத்த ஆண்டின் துவக்கம் முதல் ஆஃப்கான் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். அதன் பிறகு மற்ற மாகாணங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கையளிக்கப்படும் என்று கூறியுள்ள செட்வில், இது குறித்து இவ்வார இறுதியில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும் கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
அடுத்த 4 ஆண்டுகளில் நேச நாட்டுப் படைகள் ஆஃப்கானில் இருந்து வெளியேறுவது என்பது நிச்சயமானதல்ல என்பதையும், அது மேலும் பல ஆண்டுகளுக்குத் தொடரலாம் என்பதையுமே நேச நாட்டுப் படைகளின் நி்ர்வாகி மார்க் செட்வில்லின் பேச்சு உறுதிப்படுத்துகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
0 comments :
Post a Comment