Friday, November 19, 2010

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் 14 பேர் ஒருவருட காலத்துக்கு இடைநிறுத்தம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் மோதல்கள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 மாணவர்கள் உட்பட 14 பேருக்கு ஒரு வருடத்துக்கு பல்கலைக்கழக பாட நடவடிக்கையில் இணைந்துகொள்ள நேற்றைய தினம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வர்த்த பீட மாணவி ஒருவரை பகுடி வதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 5 மாணவர்களுக்கும், அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் இருவருக்குமாக 7 மாணவர்களுக்கும் ஒரு வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா நுண்கலைக் கல்லூரியில் கடந்த மாதம் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 7 மாணவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பிற்பகல் வர்த்தக பீடத்தைச் சேர்ந்த பதுளையை சொந்த இடமாகக் கொண்ட ஒரு மாணவியை பகிடி வதைக்கு உட்படுத்திய ஒரு மாணவனும் 4 மாணவிகளுக்கும் விசாரணைகள் முடியும் வரை வகுப்புத் தடை விதிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்களுடைய பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாம் அனைவரும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பகல் வந்தாறு மூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் காலை 10 மணிமுதல் விசாரணைகள் நடைபெற்று பிற்பகல் 2.30 மணியளவில் நிறைவடைந்தன. பின்னர் நடைபெற்ற பிஆர்டி எனப்படுகிற பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கும் ஒழுக்கங்களுக்குமான அவை தீர்மானத்திற்கு அமைய இந் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த முடிவு தொடர்பில் தமக்கு உறுதியான எழுத்துமூலமான தீர்மானம் வழங்கவேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் சிறு தவறுகள் விடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு உடனடியாக தண்டனை அமுலாக்கப்பட்டதாகவும் ஆனால் குறித்த சிங்கள மாணவி தொடர்பில் இனங்காணப்பட்ட மூன்று மாணவிகள் உட்பட ஐவருக்கு எதிராக பல்கலைக்கழகம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகெடுக்கவேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த கடுமையான வேண்டுகோளின் பேரில் பல்கலைக்கழத்தின் இருப்பிடங்களுக்கான நல்லொழுக்க சபை நேற்று இது தொடர்பில் ஆராய்ந்தது.

இறுதியாக குறித்த ஐந்து மாணவர்களையும் ஒரு வருடத்துக்கு பல்கலைக்கழக நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்வதில்லையென முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த முடிவு தொடர்பில் தாம் எழுத்துமூலமான தீர்மானம் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறா கடிதம் ஒன்று நாளை எமக்கு தருவதாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் உறுதியளித்துள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விமல் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் குறித்த ஏழு பேருக்கும் எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக குறித்த மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் பிற்போடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கடும் நடவடிக்கைகள் காரணமாக குறித்த மாணவர்களுக்கு எதிரான தீர்மானங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com