விக்கிலீக்ஸ் ஆவணங்களும் ஈராக் மீதான வன்முறையும். Joseph Kishore
விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ஏறக்குறைய சுமார் 400,000 ஆவணங்கள் ஈராக் மீதான அமெரிக்க போர் தொடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் காட்டுமிராண்டித்தன யதார்த்தம் குறித்த சில அடையாளங்களை அளிக்கின்றன. அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் ஆளும்தட்டின் உயர் மட்டங்கள் பொறுப்பாகத்தக்க போர்க் குற்றங்களுக்கான திடமான ஆதாரங்களை இந்த இராணுவ தகவல் விவரங்கள் கொண்டிருக்கின்றன.
இந்த ஆவணங்களில் அம்பலமாகி இருக்கும் முக்கியமான விவரங்களில் அடங்கியவை:
பலியான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பற்றிய முன்னர் வெளிவந்திராத விவரங்கள். ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் இறப்பு எண்ணிக்கை குறித்து மதிப்பீடு செய்திருந்த ஈராக் உடல் எண்ணிக்கை அமைப்பு (The Iraq Body Count) தனது முந்தைய கணக்கீடுகளில் வராத சுமார் 15,000 அப்பாவி பொதுமக்களின் விவரங்கள் இராணுவப் பதிவேடுகளில் இடம்பெற்றிருப்பதை கண்டுள்ளது. 2004ல் பாலுஜா நகரத்தை தரைமட்டமாக்கிய அமெரிக்க தாக்குதல் உட்பட மிகப்பெரிய அமெரிக்க குரூரங்களில் நேர்ந்த அப்பாவிகள் உயிரிழப்பு குறித்து இந்த ஆவணங்களில் இல்லாதபோதே இந்த எண்ணிக்கை ஆகும். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடும் Lancet என்னும் மருத்துவ இதழ் மூலமான ஒரு ஆய்வு உட்பட பலியானோர் எண்ணிக்கையை அதிகமாக மதிப்பிடும் தகவலறிக்கைகள் மீது இந்த ஆவணங்கள் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளன.
குறிப்பான போர்க் குற்றங்களுக்கு தெளிவான ஆதாரம். பிப்ரவரி 2007ல் ஒரு அமெரிக்க தாக்குதல் ஹெலிகாப்டரிடம் சரணடைய விண்ணப்பித்த இரண்டு ஈராக்கியர்கள் கொல்லப்பட்டதும் இதில் அடங்கும். ஹெலிகாப்டரில் இருந்த படையினர்கள் ஒரு இராணுவ வழக்கறிஞருடன் வானொலி மூலம் பேசியபோது, அவர் விமானப்படையினரிடம் யாரும் சரணடைய முடியாது என்ற ஒரு பொய்யான அறிவுரை கூறியதை அடுத்து, அந்த படையினர் அந்த இருவரையும் கல்நெஞ்சத்துடன் கொன்று விட்டனர். ஜூலை 2007ல் ராய்டர்ஸ் செய்தி நிறுவன இரண்டு செய்தியாளர்கள் உட்பட 12 நிராயுதபாணியான அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு (இது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு காணொளியில் படம்பிடிக்கப்பட்டிருந்தது) காரணமான கூட்டத்திலும் இதே படையினர் இடம்பெற்றிருந்தனர்.
குறைந்தது 681 அப்பாவி மக்கள் மற்றும் 30 குழந்தைகள் உட்பட 834 பேரை இராணுவ சோதனைச் சாவடிகளில் அமெரிக்க படைகள் கொன்றுள்ளன. அமெரிக்க இராணுவத்தின் நடைமுறை ஒப்புதல் மற்றும் இணக்கத்துடன் ஈராக்கிய உதவிப்படை இராணுவம் மற்றும் போலிசால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சித்திரவதை. அமெரிக்கா அபு கிரைப்பில் நிகழ்த்திய கொடுமைகளை ஒத்த வகையில் அடி உதை, சூடு, மின் அதிர்ச்சிகள், ஆசனவாய்ப் புணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறை உட்பட 1,300க்கும் அதிகமான சித்திரவதை புகார்களை 2005 மற்றும் 2009க்கு இடையிலான காலத்தில் அமெரிக்க படையினர்கள் தெரிவித்திருந்தனர். ஈராக்கின் கைப்பாவை அரசு கைதிகளை கொன்ற சம்பவங்களையும் அமெரிக்க இராணுவம் அறிந்திருந்தது. ஈராக்கிய நீதி அமைச்சகத்திடம் இருந்த ஒரு கைதி குறித்த மார்ச் 25, 2006 அறிக்கை இதற்கு சிறந்த உதாரணம்: “அவரது கைகள் கட்டப்பட்டு தலைகீழாய் தொங்க விடப்பட்டார்; அவரை பின்புறத்திலும் கால்களிலும் அடிப்பதற்கு கூர்மையான பொருட்கள் (குழாய்கள்) பயன்படுத்தப்பட்டன; அவரது காலில் துளையிட மின்சார துளைப்பான் பயன்படுத்தப்பட்டது.”
இந்த சம்பவங்களில் அமெரிக்க துருப்புகள் சம்பந்தப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி ஈராக்கிய உதவிப்படைகள் நடத்திய கைதி மீதான சித்திரவதையை விசாரணை செய்ய வேண்டாம் என்று அமெரிக்க படையினர் உத்தரவிடப்பட்டனர். 2004 மற்றும் 2009க்கு இடையில் ஏதோ ஒரு சமயத்தில் கைது செய்யப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 180,000 பேருக்கும் மேல், அதாவது ஒவ்வொரு 50 ஈராக்கிய ஆண்களுக்கும் ஒருவர்.
இந்த ஆவணங்கள் பரிசோதிக்கப்படுகையில் இன்னும் நிறைய வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. ஈராக், அமெரிக்க மற்றும் உலக மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டிருந்த தகவல்களின் ஒரு பெட்டகத்தை அவை கொண்டிருக்கின்றன.
அமெரிக்க தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பு, நவீன சகாப்தத்தின் மிகக் காட்டுமிராண்டித்தனமான போர்க் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. ஏப்ரல் 2003ல், அதாவது போர் தொடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர், உலக சோசலிச வலைத் தளம் எழுதுகையில், “இரண்டாம் உலகப் போருக்கான தயாரிப்பு காலத்தில் நாஜிக்களின் ‘செக்கோஸ்லேவேக்கியா மீதான வன்முறை’ அல்லது ‘போலந்து மீதான வன்முறை’ குறித்துப் பேசுவது என்பது பொதுவாகக் காணக் கூடியதாய் இருந்தது. மிதமிஞ்சிய இராணுவ சக்தியைப் பயன்படுத்தி அங்கிருக்கும் அரசாங்கங்களையும் அனைத்து மக்கள் ஸ்தாபகங்களையும் முழுமையாக அகற்றுவது, அதனைத் தொடர்ந்து அந்நாடுகளின் பொருளாதாரத்தைக் கையகப்படுத்தி ஜேர்மன் முதலாளித்துவத்தின் நலனுக்காய் பயன்படுத்துவது என்பது தான் இந்த நாடுகளில் ஜேர்மனி செயல்பட்ட விதம் ஆகும். அமெரிக்கா இப்போது செய்வதையும் அதன் உண்மையான பேரால் அழைப்பதற்கு இது உகந்த நேரமாகும். அமெரிக்காவில் இருக்கும் ஒரு குற்றவியல் ஆட்சி ஈராக் மீதான வன்முறையை நடத்துகிறது” என்று குறிப்பிட்டது. (காணவும்: ஈராக் மீதான பலாத்காரம்”)
ஈராக் மக்கள் மீது இழைக்கப்பட்டிருக்கும் பேரழிவு கடந்த ஏழரை ஆண்டுகளில் தீவிரப்பட மட்டுமே செய்திருக்கிறது. அமெரிக்கா ஒரு சமூகப் படுகொலையில் ஈடுபட்டிருக்கிறது, அதாவது ஒரு ஒட்டுமொத்த நாகரிகத்தையும் திட்டமிட்டு அழிப்பது. நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்க, இன்னும் மில்லியன்கணக்கான மக்கள் அகதிகளாகி உள்ளனர். நோய், குழந்தை இறப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றின் அதிகரிப்பு திகைப்பூட்டுகிறது. அமெரிக்க இராணுவம் ஈராக்கின் உள்கட்டமைப்பை சிதைத்து பொருளாதாரத்தை தரைமட்டமாக்கியுள்ளது, வேலைவாய்ப்பின்மை விகிதம் 70 சதவீதமாக உள்ளது.
உலகமே மிரளும் வண்ணம், ஈராக்கிய மக்கள் இக்கோளத்தின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையின் கரங்களில் கற்பனைக்கு எட்டாத துயரத்தை அனுபவிக்க நேர்ந்திருந்திருக்கிறது. எதற்காக? எண்ணெய் வளம் செறிந்த புவி-மூலோபாயரீதியாய் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்டில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்காக.
அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பெரிய ஸ்தாபனமும் இந்த குற்றத்தில் துணைபோயுள்ளன. அமெரிக்காவிற்குள்ளாக பரந்த மக்கள் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியினரானாலும் சரி குடியரசுக் கட்சியினரானாலும் சரி இருவருமே போரை அங்கீகரித்துள்ளனர் என்பதோடு அதனை எப்போதும் ஆதரித்து வந்துள்ளனர், இதற்கு நூறுபில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளனர். அமெரிக்க மக்கள் தேர்தல் மூலமாக போரை முடிவுக்குக் கொண்டுவர மீண்டும் மீண்டும் முயன்றார்கள், ஆனால் பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும் போர் தொடர்கிறது என்கிற உண்மையே அவர்களுக்குக் கிட்டுகிறது.
புஷ் மற்றும் குடியரசுக் கட்சியினர் மீதும், போர் மற்றும் செல்வந்தர்களுக்கே அள்ளி வழங்குவது என்கிற அவர்களது கொள்கைகள் மீதும் உருவாகியிருந்த வெகுஜன குரோதத்தின் ஒரு விளைவாய் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா அதே கொள்கைகளைத் தான் தொடர்கிறார். ஈராக் போர் மீதான விமர்சகராக காட்டிக் கொண்ட அவர் இப்போது அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பாளர்களை “விடுதலை செய்ய வந்த வீரர்களாக” ப் புகழ்கிறார்.
ஜனநாயகக் கட்சி நிர்வாகம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போரை விரிவுபடுத்தியிருக்கிறது, ஆளில்லா விமானத் தாக்குதல் பயன்பாட்டையும் இலக்குவைத்தான தாக்குதல் பயன்பாட்டையும் பரந்த அளவில் அதிகப்படுத்தியுள்ளது. ஒபாமாவின் வெள்ளை மாளிகை தான் தெரிவு செய்யும் எவரொருவரையும் கொல்வதற்கான உரிமையை நிலைநாட்டுகிறது, அது அமெரிக்க குடிமகன்களேயானாலும், பலியானவர் ஒரு பயங்கரவாதி என்று வெறுமனே கூறி விட்டால் போதுமானது.
அமெரிக்க ஊடகங்கள், அதன் தாராளவாத பிரிவு உட்பட, போருக்கு நியாயம் கற்பிப்பதற்கான பொய்களையே பிரகடனப்படுத்தின. “இராணுவத்துடன் ஒன்றிணைந்த செய்தியாளர்களாக” (embedded journalists) அமெரிக்க இராணுவத்தினால் இழைக்கப்பட்ட கொடுமைகளை அவை மூடி மறைத்தன. விக்கிலீக்ஸில் வெளியானவற்றுக்கு இவற்றின் பதிலிறுப்பு என்பது போர்க் குற்றங்களில் அவை துணைபோயிருப்பதற்கு வலுச் சேர்க்கிறது. ஒரு பக்கத்தில் அமெரிக்க ஊடகங்கள் இந்த ஆவணங்களின் முக்கியத்துவத்தை குறைந்த தொனியில் காட்டி “புதிதாக எதனையும்” அந்த ஆவணங்கள் காட்டி விடவில்லை என்பதான பென்டகனின் நிலைப்பாட்டை எதிரொலிக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த கொடுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உதவியதற்காக விக்கிலீக்ஸ் மற்றும் அதன் நிறுவனர் ஜூலியன் அசனேஜை அவை வேட்டையாடுகின்றன.
இந்த பிரம்மாண்டமான குற்றங்களுக்கு அரசியல் அல்லது ஊடக ஸ்தாபிப்பில் எந்த குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லாதிருப்பது என்பது அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்த அளவுக்கு ஒட்டுமொத்தமாய் அராஜகம் மற்றும் குற்றவியலுக்குக் கீழிறங்கியுள்ளது என்பதற்குச் சான்றளிக்கிறது.
இந்த போர்க் குற்றங்களின் சிற்பிகள் இப்போதும் சுதந்திரமாகவே உள்ளனர். ஈராக்கின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை திட்டமிட்டவர்கள் மற்றும் மேற்பார்வையிட்ட புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் அனைவரும் இன்னும் கணக்கில் கொண்டு வரப்படவே இல்லை. ஒபாமாவும் அவரது தலைமை நிர்வாகிகளும் - ஹிலாரி கிளின்டன், ரொபேர்ட் கேட்ஸ் - முந்தைய நிர்வாகத்தின் குற்றப் பட்டியலுடன் விரிவடைந்து கொண்டிருக்கும் தங்களது பட்டியலை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விக்கிலீக்ஸ் ஆவணங்களின் வெளியீடு என்பது வர்க்க போராட்டத்தின் அதிகரிப்புடன் ஒரே சமயத்தில் நிகழ்ந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு செலுத்துவதற்காக முன்கண்டிராத சிக்கன நடவடிக்கைகளைக் கோரும் பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளுடன் மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் (மிக சமீபத்தில் பிரெஞ்சு தொழிலாளர்கள் உட்பட) நேரடி மோதலுக்கு வருகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் இந்த தாக்குதலில் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம் ஒரு மத்திய உள்ளடக்கமாக ஆக்கப்படவேண்டும், அனைத்திற்கும் மேலாய் அமெரிக்காவில்.
உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களின் நலன்கள் ஒன்றாகவே உள்ளன, அத்துடன் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் ஒரே வர்க்க எதிரியையே எதிர்கொள்கின்றனர். ஏகாதிபத்தியம் முற்றுமுழுதான பிற்போக்குவாதம் என்று லெனின் குறிப்பிட்டார்.
ஈராக் மீது இத்தகைய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் பெருநிறுவன பிரபுக்கள் தங்களது சொத்துக்களையும் அதிகாரத்தையும் பாதுகாக்க அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வன்முறையையும் பயங்கரத்தையும் பயன்படுத்தவும் தயங்க மாட்டார்கள். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற போர்களில் இரக்கமற்ற கொலைகாரர்களாகவும் சமுதாயவிரோதிகளாகவும் மாறிய படைகள் இறுதியில் அமெரிக்காவிற்குள்ளாக வேலைவாய்ப்பின்மை, வறுமை, மற்றும் வீடின்மைக்கு எதிராகப் போராடுவோருக்கு எதிராகக் கோபமாய் திரும்பும்.
வெற்றி பெறுவதற்கு, போர் மற்றும் சமூக பிற்போக்குவாதத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் முன்னோக்கு மற்றும் மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும். ஏகாதிபத்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் இரத்தக் கறை படிந்த கைகளில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்; உலகப் பொருளாதாரத்தின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை ஸ்தாபித்தாக வேண்டும்.
0 comments :
Post a Comment